பதஞ்சலி சித்தர் குருபூஜை
தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி, யோகக் கலையை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். பதஞ்சலி, புகழ்பெற்ற யோக குருவான நந்தி தேவாவிடம் யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். பதஞ்சலி இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை நடக்கிறது. இந்தக் குருபூஜையை சிலர் வீட்டிலும் செய்கிறார்கள். ஒரு பலகையை நன்றாகக் கழுவி, கோலம் போட்டு, அதன் மீது பதஞ்சலி முனிவரின் படத்தை வைத்து திருவிளக்கு ஏற்றி, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். நிவேதனமாக இளநீர், பசும்பால், வாழைப்பழம் போன்றவற்றை வைத்துப் படைத்து தீபாராதனை செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்தால் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும். ஞானம் விருத்தி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். செல்வ வளமும் மகிழ்ச்சியும் சேரும். கல்வி கலைகளில் உள்ள தடைகள் நீங்கும். உடம்பில் உள்ள நோய் குணமாகும். வார நாட்களில் வியாழக்கிழமை இவரை வழிபடுவதற்கு சிறந்த தினம். மூல நட்சத்திரத்தில் இந்த விழா நடைபெறுகிறது. இன்று பங்குனி மாதம் மூல நட்சத்திரம்.
22.3.2025 சனி
தேய்பிறை அஷ்டமி
திதிகளில் 8வது திதி அஷ்டமி திதி. அஷ்டமி திதியின் பெருமைகளைப் பற்றி நாம் பலமுறை எழுதி இருக்கிறோம். அது கிருஷ்ண பகவானுக்கும், துர்க்கைக்கும், பைரவருக்கும் உரிய திதி என்பதால் சைவ வைணவ சாக்த சமயங்களுக்கு அஷ்டமி திதி வழிபாட்டுக்குரிய திதியாக இருக்கிறது. பங்குனி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமிக்கு திரியம் பகாஷ்டமி என்று பெயர். இந்த நாளில், பைரவரை வழிபடுவதும் அன்ன தானம் செய்வதும் ஐஸ்வரியத்தை அள்ளித் தரும். அஷ்டமி திதிகளில் திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்ட சுப காரியங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு உகந்தது. தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் அனைத்தும் அகலும்.
24.3.2025 திங்கள்
சீதாதேவி விரதம்
இவ்விரதம் கணவனின் ஆரோக்கியத்திற்காகவும் ஒற்றுமையான வாழ்வுக்காகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. சீதை ‘‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’’ என்று கணவனை பிரியாதிருக்கும் வரம் கேட்டவள் எனவே தம்பதிகள் ராமனைப் போலவும் சீதையைப் போலவும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இந்த விரதம் இருந்தால் இனிமையான குடும்ப வாழ்க்கை அமையும். திருமணம் தள்ளிப்போகும் கன்னிப் பெண்களுக்கு சீக்கிரம் திருமணமாகும். விடியற்காலையில் எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து, ராமர் சீதா படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரித்து குத்துவிளக்கேற்றி, இந்த பூஜையைச் செய்ய வேண்டும். பிரசாதமாக பழம் சர்க்கரைப் பொங்கல், சுண்டல் வைத்து வழிபடலாம்.
25.3.2025 செவ்வாய்
ஏகாதசி
வெற்றிகளைத் தருகின்ற ஏகாதசி என்பதால் விஜயா ஏகாதசி என்று இந்த ஏகாதசிக்கு பெயர் வந்தது. இந்த ஏகாதசி மிகவும் புனிதமானது. எல்லாப் பாவங் களையும் போக்கக்கூடியது. விஜயா ஏகாதசி விரதம் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு எப்பொழுதும் வெற்றியே கிடைக்கும். இந்த ஏகாதசி விரதங்கள் எல்லாத் தடைகளையும் கடக்கச் செய்யும். ராமபிரான் அனுஷ்டித்த ஏகாதசி இது.ராமபிரான் தந்தையின் சொல் கேட்டு காட்டுக்குச் சென்றார். ராமனின் மனைவியும் பூமாதேவியின் அம்சமுமான சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். அவளை இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்தான். ராவணனை வென்று சீதையை மீட்க வேண்டிய ராமன், வானர சேனைகளுடன் கடற் கரையை அடைந்தார். சமுத்திரத்தை கடக்க யோசித்தபோது வக்தால்யர் என்ற முனிவர் இந்த ஏகாதசி உபவாசத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றார்.‘‘பங்குனி தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி உபவாசம் இருந்தால், நீ எளிதில் சமுத்திரத்தைக் கடக்கலாம். ராவணனையும் ராட்ஷசர்களையும் கொன்று சீதையை அடையலாம்’’ என்று ஏகாதசி விரதத்தின் மகாத்மியத்தை முனிவர் சொல்லுகின்றார்.
தசமி அன்று தங்கம் வெள்ளி, தாமிரம், அல்லது மண்ணினால் செய்த ஒரு குடத்தை வைத்து அதில் பரிமளங்களுடன் கூடிய தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும். அதன் கீழே கோதுமை முதலிய நவதானியங்களை பரப்பவேண்டும். கும்பத்தின் மேல் சந்தனம் வைத்து, புஷ்பங்களைச் சுற்றி அலங்கரித்து, கும்பத்தில் உள்ள தீர்த்தத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண மூர்த்தியை ஆவாஹனம் செய்து உபசாரம் செய்யவேண்டும்.ஏகாதசியன்று காலையில் நீராடி, கும்பத்தில் ஆவாஹனம் செய்த பெருமாள் தாயாரை பல ஸ்தோத்ரங்களாலும், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களாலும், புருஷ சூக்தம் போன்ற வேத மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும். தைத்திரீய உபநிஷத் போன்ற மந்திரங்களையும் சொல்லி பக்தியோடு பூஜிக்க வேண்டும். ஆழ்வார்களின் பாசுரங்களை பாராயணம் செய்ய வேண்டும். அப்படித் தொடர்ந்து இரவு பூராவும் செய்யவேண்டும். இதிகாச புராண கதைகளையும் பஜனைகளையும் செய்யலாம். அடுத்த நாள் துவாதசி காலையில் பூஜையை நிறைவு செய்து கும்பத்தை நதிக்கரைக்கு அல்லது குளத்தின் கரைக்கு எடுத்துச் சென்று பூஜிக்க வேண்டும். இந்த நாளில் துளசியை வழிபடுதல், துளசியினால் விஷ்ணுவை பூஜித்தல் நன்மை பயக்கும். ராமர் கடலை தாண்டியது போல நாமும் பிறவி பெருங்கடலை தாண்டலாம்.
26.3.2025 புதன்
ஒப்பிலியப்பன்
ஸ்ரீனிவாசப்பெருமாள் சப்தாவரணம்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா சிறப்பாகத் தொடங்கியது. நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோயிலில் இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை வெள்ளிப் பல்லக்கு, மாலை வாகன புறப்பாடு, இரவில் பெருமாள்- தாயார் திருப்பள்ளியறைக்கு திருக்கைத் தலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 25-ம்தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு ஒப்பிலியப்பன் மலராடை அணிவிப்பு திருக்காட்சி நடைபெறும். 26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், அன்று இரவு 8 மணிக்கு சப்தாவரணம், 27-ம் தேதி பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 28-ம் தேதி பகல் 12 மணிக்கு அன்னப் பெரும்படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
27.3.2025 வியாழன்
தண்டியார் குருபூஜை
தண்டியடிகள் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருவாரூரில் பிறந்தவர். பிறக்கும் போதே பார்வையை இழந்திருந்தாலும் அகப்பார்வையால் (மனத்தால்) ஆரூரனை அனுதினமும் இடைவிடாது துதிக்கும் மனம் படைத்தவர். ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கரையிலே போடும் பணியினை மேற்கொண்டார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு பொறாது அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு சமணர்கள் இகழ்ந்தனர். அவர் பணியை கைவிடும்படி கடுமையாகக் கூறினர்.‘‘உனக்கு கண் தான் இல்லை, காதும் இல்லையோ?’’ என்று செவி சுடும்படியான சொற்களைக் கூறினர். “நீ இக்காரியம் செய்து அடைந்த பையன் என்ன?” என்று கேட்க, தண்டியடிகள்’’ இது சிவத்தொண்டு. இதற்குப் பயன் சிவத்தொண்டு மூலம் அடைகின்ற இன்பம் தான்’’ என்று சொன்னார்.
‘‘சிவத்தொண்டின் பெருமை அறிகின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லை. இப்பணி அழகைக் காண உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை’’ என்று சொல்ல, ‘‘ஓஹோ நீ கொடுத்து வைத்தாயோ?’’ என்று ஏகடியம் பேசினர். ‘‘ஆமாம் நான் எப்பொழுதும் என் கண்களால் சிவனுடைய திருவடிகளையே காண்கின்றேன்’’ என்று சொன்னவுடன் அவர்கள் சிரித்து, ‘‘கண்ணில்லாத நீ எப்படி சிவனை காண்பாய்? அதை எப்படி நாங்கள் நம்புவது?’’ என்று சொல்லிவிட்டு, ‘‘நீ வணக்கம் சிவனருளால் உனக்கு கண் பார்வை வரட்டும். அதுவரை வேலை செய்யாதே’’ என்று சொன்னதோடு இவருடைய மண்வெட்டியையும் தட்டுக்களையும் பறித்து எறிந்தனர்.தண்டியடிகள் மனம் வருந்தி சிவபெருமான் முன் அழுது முறையிட்டார். “சிவப்பணி செய்ய முடியவில்லை” என்று துடித்தார். அன்று சோழ மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான் தண்டியடிகளுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். சோழ மன்னன் அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து இருவர் வழக்கையும் விசாரித்தான். ‘‘அடிகளாரே, நீர் கண் பெற்றது உண்மையானால் இவர்கள் இந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். கண் பார்வை பெற்றதை இவர்களுக்குக் காட்டுவீராக’’ என்று சொல்ல, அடுத்த நிமிடம் தண்டியடிகள் சிவபெருமானை வணங்கி குளத்தில் மூழ்கி எழ, அவருடைய ஒளி வீசும் கண் பார்வையை எல்லோரும் கண்டனர். அதே சமயம் சமணர்களின் கண்பார்வை பறிபோயிற்று. அதோடு அவர்கள் குளக்கரையை விட்டு அகன்றனர். தண்டியடிகள் தம்முடைய திருத்தொண்டினைத் தொடர்ந்து பல காலம் செய்து சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் (பங்குனி சதயம்) இன்று.
27.3.2025 வியாழன்
மாத சிவராத்திரி
14ம் திதியாகிய சதுர்த்தசி திதி சிவனுக்கு விசேஷமானது. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி. அன்று அவசியம் விரதம் இருந்து சிவ நாமங்களைச் சொல்லி வழிபட வேண்டும். மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். பங்குனி மாத சிவராத்திரி தேவர்கள் கடைபிடித்த சிவராத்திரியாகும்.
*24.3.2025 திங்கட்கிழமை திருக்குறுங்குடி ரதம்.
* 25.3.2025 செவ்வாய்க்கிழமை திருவோண விரதம்.
* 25.3.2025 செவ்வாய்க்கிழமை கள்ளழகர் புறப்பாடு.
* 25.3.2025 செவ்வாய்க்கிழமை திருவாரூர் தியாகராஜர் பவனி.
* 27.3.2025 வியாழக்கிழமை மகாபிரதோஷம்.
* 28.3.2025 வெள்ளிக்கிழமை கள்ளழகர் கோயில் சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.