அன்பான அரக்கி!

சென்ற இதழின் தொடர்ச்சி…

பகுதி 2

சீதா திரிசடையை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். சீதாவின் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர் திரிசடையின் தோளைத் தொட்டது.அப்பொழுது எதிர்பாராதவாறு ராவணன் மிகுந்த அலங்காரத்தோடு அசோக வனத்திற்குள் நுழைந்தான். அரக்கியர்களை விலகச் சொல்லி தான் மட்டும் தனியனாய் சீதையை நெருங்கினான்.“இவ்வளவு செல்வச் செழிப்பு உள்ள என்னை விட்டுவிட்டு ஒரு ஏழையின் பின்னே மனதைப் பறிகொடுத்துத் தவிக்கிறாயே ! உனக்கு என்ன அறியாமையா?”அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சீதாவிற்கு தோன்றியது. ஆனாலும், அவன் முகத்தைப் பார்த்துப் பேசினால், அதை ஒரு அங்கீகாரமாக நினைத்து விடுவானோ என்ற அச்சமும் தோன்றியது. அருகிலிருந்த ஒரு அருகம்புல்லைப் பிடுங்கி எதிரிலே வைத்தாள்.

“அருகம்புல்லே! உன்னை நமஸ்கரிக்கிறேன். இறைவனின் மிகச் சிறிய படைப்பான உனக்குக் கூட அருமையும் பெருமையும் உண்டு. ஆனால், வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்து, கோழையாக என்னைத் தூக்கி வந்து இங்குச் சிறை வைத்தவனுக்கு என்ன மாட்சி இருக்கக்கூடும்? யார் இங்கே ஏழை? அறமின்மை, அறிவின்மை, வீரமின்மை நேர்மையின்மை துணிவின்மை இவையெல்லாம்தான் ஏழ்மையின் சின்னங்கள். அப்படிப் பார்த்தால் யார் ஏழை?”

“என்னுடைய வீரத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? வீரம் என்பது ஆண்மையின் வெளிப்பாடு. என் வீரத்தின் மகத்துவம் பிரபஞ்சம் முழுவதும் அறியும்.”“ஆண்மை பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கிறாயே! பேராண்மை என்று ஒன்று உண்டு. அது என்னவென்று தெரியுமா? பிறர் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை. அதுதான் உண்மையான வீரத்தின் வெளிப்பாடு.

“அந்தச் சிவனே என்னில் மகிழ்ந்து, என்னை மெச்சி வரம் அளித்திருக்கிறான். அதைவிட எனக்கு என்ன வேண்டும்?”“தெய்வ வரம் எனப்படுவது தவத்துக்கும் ஆற்றலுக்கும் தரப்படுகின்ற மதிப்பு. வரத்தையும், வரம் தந்த ஈசனையும் அவமதிப்பது போல் அமைந்திருப்பது உன்னுடைய நடத்தை. வரம் தரும் எந்தத் தெய்வமும் தவறிழைப்பதில்லை. தரம் கெட்ட நீதான் தவறிழைக்கிறாய்.”

“போதும்! நீ என்னை மிகவும் துச்சமாக நினைத்து இழிவாகத்தான் பேசுகிறாய் ஆனாலும் எனக்கு இந்த நொடி வரை உன்மேல் கோபம் வரவில்லை. உன் பேரழகு என்னைப் பொறுமையுடன் இருக்கச் செய்கிறது. சூர்ப்பணகை உன் அழகைப் பற்றிச் சொல்லிய நாள் முதலே நான் பித்தாக அலைகிறேன். என்னை விட்டால் உனக்கு வேறு கதி இல்லை. உன் ராமனைக் கொன்று வீழ்த்திய பின் என்னிடம் நீ வந்து சேர்வதை விட, இப்பொழுதே என்னைச் சேர்ந்தால் உயிர்ச்சேதமாவது இல்லாமல் போகும்.”

“போதும் உனது அதீதமான கற்பனைப் பேருரை. எனது தந்தையை ஒத்த ஜடாயுவை உன்னால் போரிட்டு வெல்ல முடியவில்லை. நீ திணறியதைத்தான் நான் நேரில் பார்த்தேனே! இறுதியில் உன் தோல்வியை மறைத்துக் கொண்டு, சிவன் தந்த சந்திரகாசம் எனும் வாளால் வெட்டி வீழ்த்தினாய் .”“நீ பேசுவது கோபத்தில் என்றாலும் கூட ஒரு கிள்ளை மொழி கேட்பது போலத்தான் எனக்கு இனிமையாக இருக்கிறது. ஆனாலும் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உன் காலில் மண்டியிட்டுக் கேட்கிறேன். என் மனதை உன்னிடம் பறி கொடுத்து விட்டேன். உன்னை மறப்பதோ இல்லை, உன்னை விட்டுப் பிரிவதோ இனி என்னால் ஆகாது. உனக்கு மேலும் இரண்டு மாதம் அவகாசம் அளிக்கிறேன். நல்ல முடிவை எடுப்பாய் என நம்புகிறேன்.”

யாருக்கு “யார், கால அவகாசம் தருவது? உன்னுடைய முடிவு நெருங்குகிறது. அதனால்தான் உனக்கு இந்த விபரீத புத்தி வந்திருக்கிறது. என் ராமன் வருவான். உன்னை வெல்வான். உன்னைக் கொல்வான். என்னைக் கொண்டு செல்வான். இது சத்தியம்.”“அரக்கியர் கூட்டமே! இவளுக்கு புத்தி சொல்லி என்னைச் சேர வையுங்கள். இன்னுரையில் படியவில்லை என்றால் வன்முறையில் தீர்வு காணுங்கள். எனக்குத் தேவை சீதா….சீதா மட்டுமே. அவள் இணங்கவில்லை என்றால் அவளும் இருக்க மாட்டாள். நீங்களும் இருக்கப்போவதில்லை.”

ராவணன் ஆத்திரத்துடன் வெளியேறினான். அரக்கியர் கூட்டம் சீதாவை நெருங்கியது. சுற்றி நின்று கூக்குரல் இட்டது. திரிசடை அவர்களை வெளியேற்றினாள். சீதாவிற்கு ஆறுதல் கூறினாள்.
மறுநாள் காலையில் மீண்டும் ஆரவாரம் கேட்டது. ராவணன்தான் வருகிறான் என்று சீதா நினைத்தாள். ஆனால் , அவள் கண்ட காட்சி அவளைத் திடுக்கிட வைத்தது. சீதாவின் தந்தை ஜனகன் , கைகள் இரண்டும் கட்டப்பட்டு ஒரு கைதியைப் போல அவள் முன் நிறுத்தப்பட்டான்.

‘‘தந்தையே ! நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? இந்த அரக்கனிடம் எப்படிச் சிறைப்பட்டீர்கள்?

‘‘விளக்கம் சொல்ல நேரமில்லை நான் சொல்வதை நீ கேள். இந்த ராவணனை நீ சேர்வதைத் தவிர வேறு வழி இல்லை. ராமனைக் கொல்வதோ அல்லது என்னைக் கொல்வதோ இவனுக்கு மிகவும் எளிதான செயல். உன்னை மீட்க யாரும் வரப்போவதில்லை. நீ எந்த மறுப்பும் இன்றி ராவணனுக்குச் சம்மதம் சொல்லிவிடு! இது ஒன்றுதான் நீ எடுக்கக்கூடிய முடிவு.’’
ஜனகர் பேசப்பேச சீதாவிற்கு தலை சுற்றியது.

‘‘என் தந்தையா இப்படி கூறுவது? இருக்க முடியாது. உயிரை விட மானமே பெரிது என்றுதானே நீங்களும் என் தாயும் அறிவுரை கூறி வளர்த்தீர்கள். இப்படிக் கூறுவது உங்களுக்கு அடுக்குமா?’’ சீதா புலம்பினாள். அங்கே வந்த திரிசடை சீதாவின் அருகில் சென்று,“கலங்காதே இங்கே வந்திருப்பது உன் தந்தை அல்ல. ராவணனின் மாயாஜால வித்தைகளில் இதுவும் ஒன்று.” திரிசடையின் மொழி கேட்டு சீதா சமாதானம் அடைந்தாள்.

திரிசடை சீதாவின் காதில் ரகசியமாக, “ராமனை விட்டு நீங்கள் பிரிவது போல எது நடந்தாலுமே அவை உண்மையான நிகழ்வு அல்ல . திடமான மனநிலையில் இருங்கள்.” தேற்றினாள்.
சில நாட்கள் கழிந்தன. திரிசடை அரக்கியர்கள் யாருமற்ற நேரத்தில் சீதாவின் அருகில் வந்தாள். “உங்கள் இராமன் உங்களைச் சந்திக்க வந்துவிடுவார். என்னுடைய தந்தை வீடணன் ராமரிடத்தில் சரணாகதி அடைந்துவிட்டார். நல்லவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி விட்டார்கள். ராவணனின் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தியை கூற இருக்கிறேன். நீங்கள் இராவணனைக் கண்டு மிகுந்த அச்சம் கொண்டுள்ளீர்கள்.

அவன் உங்களுக்கு உடலளவில் ஏதேனும் துன்பம் இழைத்துவிடுவானோ என்று கலங்குகிறீர்கள். அஞ்ச வேண்டாம். அவனுக்கு ஒரு பெரிய சாபம் இருக்கிறது. எந்தப் பெண்ணையாவது, அவளின் அனுமதியின்றி தொட்டாலே , அவனின் பத்து தலையும் சுக்கு நூறாக வெடிக்கும் என்பதுதான் அந்தச் சாபம். எனவே ,கவலையை விடுங்கள். நல்லவர்களின் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்கும்.”

“நீ தாயினும் இனியள். ஒவ்வொரு முறை நான் கலக்கத்தில் இருக்கையில் நீ ஒருத்திதான் என்னை அதிலிருந்து மீட்கிறாய். நீ வாழ்வாங்கு வாழ வேண்டும். அனுமன் அன்று கணையாழி கொடுத்ததும் என் நெஞ்சம் நிறைந்தது. இன்று உன் அமுதமொழியால் என் நெஞ்சம் இனித்தது.” அசோக வனத்தில் இருள்சூழத் துவங்கிய அந்நேரத்தில் சீதாவின் மனதில் நம்பிக்கை ஒளி தோன்ற ஆரம்பித்தது . சீதா தன் தவத்தை தொடர்ந்தாள்.

போர் நடந்து கொண்டிருந்தது . போரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அறிய முடியாவிட்டாலும் அவ்வப்போது கேட்கும் போர் முழக்கங்கள் சீதாவிற்கு ஆறுதலை அளித்தன. ஒரு நாள் இந்திரஜித் சூழ்ச்சி செய்து இலக்குவனை மயக்கமுற வைத்து கீழே சாய்த்தான். மூச்சுப் பேச்சற்று இறந்தவன் போல இலக்குவன் காணப்பட்டான். இந்திரஜித் ராவணனிடம் சென்றான். ராமன் ஒருவனைத் தவிர எல்லோரும் மாண்டனர் எனத் தெரிவித்தான். ‘போர் முடிவுக்கு வந்தது. தனியனாக இராமனை வெல்வது இனி எனக்கு எளிது’ என்று
ராவணன் நினைத்தான்.

அதே நேரம் இராமன் போர்க்களம் சென்றான். இலக்குவனைக் கண்டான். அவன் மாண்டுவிட்டான் என்று எண்ணினான். துக்கம் தாளாமல் புலம்பி, நைந்து, வெதும்பி செயலிழந்து, மூர்ச்சையடைந்தான். செய்தி அறிந்த ராவணன் வெற்றி அடைந்ததாகக் கொக்கரித்தான். சீதைக்குச் செய்தி சொல்லியனுப்பினான். பறக்கும் தேரில் அவளை அமர வைத்தான். “சீதா! அங்கே பார். உன்னைக் காக்க வருவான் என்று நம்பி இருந்தாயே, அந்த நாயகனைக் கண்குளிரப் பார். உன் காவியத்தலைவன் மடிந்து கிடக்கிறான். கூட அவன் இளவலும் இறந்து கிடக்கிறான். இப்பொழுதாவது என் வீரம் என்னவென்று உனக்குப் புரிகிறதா” சீதாவிற்கு அவன் சொல்லுவதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தவித்தாள்.

திரிசடை அருகில் வந்தாள். “அஞ்ச வேண்டாம். இராமன் , இலக்குவன் முகத்தை நன்றாக உற்று நோக்குங்கள். பிரகாசமாகத்தான் இருக்கிறது. உடலில் ஒரு சிறு காயமோ, ஏன், ஒரு கீறல் கூட இல்லை , கவனித்தீர்களா? அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புங்கள். இதுவும் அந்த ராவணனின் சூழ்ச்சிதான்.”திரிசடை கூறியவுடன், சீதா அவளை இறுகக் கட்டி அணைத்து முத்தமிட்டாள். “ நீ எனக்கு உயிர் அளித்தாய். ஒவ்வொரு முறையும் நான் மரணத்தின் விளிம்பிற்குச் செல்லும்போதெல்லாம், நீ… நீ மட்டும்தான் என்னை மீட்கிறாய். நான் எப்படி உனக்கு என் நன்றியைத் தெரிவிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.”

“சீதம்மா! போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். நிச்சயம் வெற்றி ராமனுக்குத்தான். என் சீதம்மாவை சீதாராமனுடன் பார்க்கப் போகிறேன். அசோகவனத்தில் நீங்களும் நானும் சந்தித்துக் கொள்வது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்று மனது விழைகிறது.”“நீ தாயினும் மேன்மையினள்! அமுதினும் இனியள்! நல் வார்த்தைகள் சொல்வதற்காகவே உன்னை இறைவன் படைத்திருக்கக் கூடும். நான் ஒவ்வொரு முறையும் துவண்டு இருக்கும்போதெல்லாம் என்னைத் தூக்கி விட்டவள் நீ. தவறான முடிவு நான் எடுக்க எத்தனிக்கையில் தடுத்து மீட்டவள் நீ. எனக்கு நீ அளித்த ஊக்கம், ஆறுதல் எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை எனக்கு பலம் சேர்த்திருக்கிறது.

நீ இழைத்து இழைத்து என்னை மறு உருவாக்கியிருக்கிறாய். என்றும் நீ என் நினைவில் இருப்பாய். அசோகவனத்தில் இருந்து உன்னைக் கழித்துவிட்டால் இந்த சீதாவே இல்லை. விரைவில் அயோத்தியில் பட்டாபிஷேகம் நடைபெறும். நீ கண்டிப்பாக என்னருகில் இருக்க வேண்டும்.’’“நிச்சயம். அயோத்தியில் அரியணையில் நீங்களும் ராமனும் கொலு வீற்றிருக்கும் காட்சியை பார்க்க நான் காத்திருக்கிறேன். ஆனாலும் ஒரு தயக்கம் உண்டு. உங்களின் மிதிலை நகர, அயோத்தி நகர தோழிகள் அழகழகாய் அருகில் இருப்பார்கள். நான் மட்டும் உருண்டைக் கண்ணும், சப்பையான மூக்கும், வெளியே துருத்தி இருக்கும் பற்களும், கொஞ்சம் விகாரமான முகத்துடன் உங்கள் அருகில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.”

“போதும் உன்னை நீயே உருவக் கேலி செய்வதை நான் விரும்பவில்லை. நீ எனக்கு என்றுமே அழ உள்ள உன் மனது கொள்ளை அழகு. நீ அழகான, என் அன்பான ராட்சசி!”. சீதா திரிசடையின் உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். அசோக வனத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குளிர்ந்த காற்று வீசியது.

(தொடரும்)

கோதண்டராமன்

The post அன்பான அரக்கி! appeared first on Dinakaran.

Related Stories: