உய ரிய பிறப்பான மனித குலத்தில் தோன்றிய பலர் இப்பிறப்பின் மகத்துவத்தை அறிந்துகொள்ளாமலேயே ஏதோ பேருக்கு வாழ்ந்து ஒருநாள் போய்ச் சேர்ந்துவிடுகின்றனர். ‘பிறப்பதற்கே தொழிலா இறக்கின்றாரே!’ என்று பேசுகிறது தேவாரம்.
‘மண் உண்டு போகுது ஐயோ!
கெடுவீர்! இந்த மானிடமே’
– என்று நெஞ்சம் பதறி நைந்து
உருகுகிறார் பட்டினத்தடிகள்.
அரிய இப்பிறப்பின் அருமை பெருமைகளை குருநாதர் மூலமும், ஆன்மிக நூல்கள் வாயிலாகவும் அறிந்துகொண்டு, அர்த்தமுள்ள வாழ்க்கையை எத்தனைபேர் மேற்கொள்கிறார்கள்?
``வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மரந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணி றந்த கோடியே!
உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப்
பூச்சிகளில் ஒருவனாக நாம் கரைந்து போய்விடலாமா?’’
இப்பழனித் திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகப் பெருமானிடம் அகம் உருகி வேண்டுகிறார்.
‘‘தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
வெகு கவ லையாய் உழன்று
திரியும் அடியேனை
உன்றன் அடிசேராய்!’’
பெயர் அளவில் வாழ்வதற்கா இந்தப் பிறவி?
வயதளவில் வளர்வதற்கா இவ்வாழ்க்கை?
ஆடி ஓடி அலைந்து அலுத்துப் போவதற்கா இந்த ஜன்மம்?
தந்தைக்கே உபதேசம் செய்து, தாயார் பெருமிதம் கொள்ள பகைவர்களை வென்று, விண்ணுலகையும் மண்ணுலகையும் மேலான நிலையில் வாழவைத்து வெற்றிவேல் பெருமானே! உன் வாழ்க்கையை உதாரணமாகக்கொண்டு உன் அடியார்களாகிய நாங்கள் ஈடேற வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்கிறார் அருணகிரிநாதர்.
`‘அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைநோனாய்
அரு மதலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதமாய் வளர்ந்து பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள்
மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசைமிஞ்சி வெகு
கவலையாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடி சேராய்!’’
இதுதான் பாதை! இதுதான் பயணம்! என்று அருளாளர்கள் பலர் நடந்து காட்டிய நல்வழியிலே முன்னேறாமல், மண், பெண், பொன் எனும் மூவகைகளிலே சிக்குண்டு, சிவகலைகள், ஆகமங்கள், வேதங்கள் எடுத்துக் கூறிய அறநெறிகளை அறவே புறக்கணித்து, அனுதினமும் கவலைகளிலேயே உழன்று திரியும் அடியேனை. முருகா! நீதான் உன் அளப்பருங் கருணைத் திறத்தால் ஆட் கொள்ள வேண்டும். வேதம், ஆகமமா, ஞான நூல்கள் வகுத்துக் காட்டிய வழியிலே குறிக்கோள் ஒன்றை வாழ்வின் இலக்காக மேற்கொண்டு வாழ்வாங்கு வாழ்வதே மனிதகுல தர்மம்.
“பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய் கழிந்த நாளும்
மெலிவொரு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக் கோள் இலாது கெட்டேன்’’
– என்று பாடுகிறது தேவாரம்.
திருமூலர், ஆதிசங்கரர், ராமானுஜர், திருவள்ளுவர், ஔவையார் தேவார மூவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருண கிரிநாதர் போன்ற மகான்கள் வாழ்ந்த காலங்கள்தான் வெவ்வேறு. ஆனால், அவர்கள் தந்த போதனை ஒன்றே! அரிய மானிடப் பிறப்பின் அர்த்தத்தைப் பூரணமாகப் புரிந்துகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தால் இகத்தே பரத்தைப் பெற்று இன்புறலாம் என்பதே!
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாது மோர் குறைவிலை!’’
இத்திருப்புகழின் பிற்பகுதியிலே ‘தாய் எட்டி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பது போல ‘மலைமகள் குமார துங்க வடிவேலா’ என்று குழந்தைக்கு குமரனின் பெருமையைக் குறிப்பிடுகிறார். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக ஆறுமுகன் திகழ்ந்ததை ‘மவுன உபதேச சம்பு மகதேவர் மனம் மகிழவே அணைந்து என்று சுவாமிக்கே நாதனாக விளங்கிய பான்மையைப் பாராட்டி மகிழ்கின்றார் அருணகிரிநாதர். பொதுவாக, ஒரு வீட்டில் பெற்றோர்கள் உயர்நிலையில் செல்வாக்கோடு திகழ்ந்தால் அதுமட்டுமே அக்குடும்பச் சிறப்புக்குக் காரணம் ஆகாது. அவர்கள் பெற்ற செல்வங்கள் உயர்பதவி, செல்வம், புகழ் பெற்றுப் பொலிய வேண்டும். தலைமுறை ஒளிர்வதே குடும்பத்தின் பெருமையைக் குறிப்பிடும்.
“தந்தை சிவபிரானுக்கு ஐந்து முகம்!
தனயன் முருகனுக்கோ ஆறுமுகம்!
தந்தைக்கு பஞ்ச பூதத் தலங்கள்!
குழந்தைக்கோ ஆறுபடைவீடு!’’
“தந்தை ப்மண்யன்
மகள் சுப்ரமண்யன்.
அப்பா சுவாமி
குழந்தை சுவாமிநாதன்.
சிவமந்திரம் ஐந்தெழுத்து நமசிவாய
முருகமந்திரம் சடாட்சரம் ஆறெழுத்து’’
பெற்றோர்களைவிட சரவணபவ பெரிய புகழ் பெறுவது தானே பிள்ளைகளுக்கு உரிய பீடு! பெருமிதம்! திருச்செந்தூர், பழனி என இருதலங்களையும் சிறப்பித்து இத்திருப்புகழ் நிறைவு பெறுகிறது.
“மவுன உபதேச சம்பு மதி, அறுகு, வேனி, தும்பை
மணிமுடியின் மீது அணிந்த மகதேவர்
மனம் மகிழவே அணைந்து ஒருபுறமதாக வந்த
மலைமகள் குமார துங்க வடிவேலா!
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த கழல் வீரா!
பரமபதாய செந்தில் முருகன் எனவே உகந்து
பழனிமலை மேலமர்ந்த பெருமாளே!’’
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post திருப்பம் தரும் திருப்புகழ்! appeared first on Dinakaran.