கடந்த சில இதழ்களில் நாம் “வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை’’ பற்றி பார்த்து வருகிறோம். அப்போது நம் மனதிற்குள் சில கேள்விகள் எழுந்தன. அவைகளை, அடுத்த அனுமனை பற்றி எழுதும்போது, கண்டிப்பாக அதற்கான விடையினை அர்ச்சகரிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி, இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் அனுமன் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா! பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் அருகில் உள்ள, மாங்குளம் என்னும் பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமியைதான்’’ நாம் இந்த தொகுப்பில் தரிசிக்க இருக்கிறோம்.
சிவப்பு நிறம் காரணம் என்ன?
கோயிலின் உள்ளே நுழைந்ததும், பட்டாச்சாரியார் என்.ரவி அவர்கள் இன்முகத்தோடு நம்மை வரவேற்றார். ஏற்கனவே நம் மனதில் இருக்கும் சில கேள்வியுடன் நேர்க்காணல்
தொடங்கியது.“வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை பற்றி எழுதும், இது மூன்றாவது திருக்கோயிலாகும். இங்கும் சரி, பல அனுமன் திருத்தலங்களிலும் சரி, அனுமனின் வாய் பகுதி சிவப்பாகவே காணப்படுகிறதே என்ன காரணம்?’’ என்று அவரிடத்தில் கேள்வியை முன் வைத்தோம்.“சந்தனாதி தைலம் என்று ஒன்று இருக்கிறது. பூஜைக்கு உகந்த தெய்வீக சக்தி கொண்ட வாசனை திரவியம் அது. தினமும் அனுமனுக்கு அபிஷேகம் நடைபெறும் முன்பு அதனைக் கொண்டு நன்கு தேய்க்கப்படும். அதன் பின் அபிஷேகம் செய்யப்பட்டு, அனுமனின் வாய் பகுதியில் சற்று செந்தூரம் பூசப்படும். ஏற்கனவே சந்தனாதி தைலம் அனுமனின் மீது சற்று ஒட்டி இருப்பதினால், அதனுடன் பூசப்படும் செந்தூரமும் சேர்ந்து கலக்கும் போது, அது சிவப்பாக மாறிவிடுகிறது. இது எங்கள் கோயிலின் நடைமுறை வழக்கம். இதனால் அனுமனின் வாய்பகுதி சிவப்பாக காணப்படுகிறது.மேலும், ஒரு புராதன கதை ஒன்றும் உள்ளது. சூரியனை பார்த்து பந்து என்று நினைத்த அனுமன், அதனை பிடித்து பற்றிக் கொள்ள மிக வேகமாக வானத்தை நோக்கி பறந்து செல்கிறார், வாயு புத்திரர். இதனைக் கண்டு ராகு – கேது என்னும் சாயா கிரகங்கள், அனுமனை தடுக்க முற்பட்டபோது, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார், அனுமன். சூரியனை பிடித்து பற்றிக்கொண்டால், உலகம் இருண்டு போய்விடுமே என்று அஞ்சிய இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் அனுமனின் தாடைப் பகுதியை அடிக்கிறார். அதனால், அனுமனின் வாய் பகுதியானது சற்று பெருத்து வீக்கம் அடைகிறது. அதனை நினைவூட்டும் விதமாகவும், அனுமனுக்கு இன்றளவிலும் அலங்காரத்தில் வாய் பகுதியானது சிவப்பாக காணப்படுகின்றன என்பதனையும் எடுத்துக் கொள்ளலாம்.’’ என்று மிக அழகான விளக்கத்தை கொடுத்து நம் முதல் கேள்விக்கான பதிலை கூறினார்.
ஏன் எல்லைப்பகுதியில்அனுமன்?
“ஸ்ரீ ரங்கம் போல் இங்கும் வியாசராஜர், ஊரின் எல்லைப் பகுதிகளிலேயே பிரதிஷ்டை செய்திருக்கின்றார், ஏதேனும் காரணங்கள் இருக்குமா?’’ என்று நாம் அடுத்த கேள்வியை கேட்டோம். மெதுவாக சிரித்துக் கொண்டே;“நல்ல கேள்வி. பொதுவாகவே ஆண் உக்ர தெய்வங்கள் ஊரின் எல்லைப் பகுதியில் இருந்து பக்தர்களை காத்தருள வேண்டும் என்பது விதி. ஒரு சிலர் அனுமனையும் உக்ர தெய்வத்தின் வரிசையில் வைக்கிறார்கள். அப்படி பார்க்கும் போது, இங்கே இருக்கும் அனுமனையும், கணக்கிடலாம் என்பது என்னுடைய அனுமானம். தவிர, ஒரு ஊரினிலே ஆறு, குளம் போன்ற பகுதியின் அருகிலேயே வியாசராஜர் அனுமனை பெரும்பாலும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். காரணம், மிக எளிமையாக அனுமனுக்கு தினமும் பூஜைகளை மேற்கொள்ளலாம் என்பதற்காக இருந்திருக்கலாம். அதே போல் தீர்த்த குளங்கள், ஊரின் எல்லைப் பகுதிகளிலே அமைந்திருக்கும். ஆகையாலும், இன்று நாம் பார்க்கும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள் ஊரின் எல்லைப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.’’ என்று சுவாரஸ்யமாக பதிலளித்தார். மேலும், கோயிலை பற்றி பேசத் தொடங்கினார்.
செண்டு மலரை கையில் வைத்திருக்கும் அனுமன்
மைசூர் மகாராஜா கிருஷ்ணதேவராஜருக்கு குலகுருவாக இருந்தவர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர். இவர் யாத்திரை செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது, மக்களின் நலனுக்காக ஒரு கருப்பு கரியை (Black charcoal isolated) எடுத்து ஒரு பாறையின் மீது அனுமனை ஓவியமாக வியாசராஜர் வரைவார். அவை அழகிய அனுமன் சிலையாக மாறிவிடும். அந்த அனுமனின் சிலையை அப்படியே அங்கேயே பிரதிஷ்டை செய்துவிடுவார், வியாசராஜர். அப்படி சுமார் 600 வருடங்களுக்கு முன்பு மகான் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீர ஆஞ்சநேயர்தான் இங்கு மூலஸ்தானம். அவர் வலது கையில் அபயஹஸ்தத்துடனும், இடது கையில் செண்டு மலர் ஒன்றையும் வைத்திருக்கிறார். அதுதான் இங்கு சிறப்பு. மேலும், அனுமனின் இடுப்பில் குத்துவாள் ஒன்றும் இருக்கிறது.அதே போல், வலது கால் கீழே ஊன்றி, இடது கால் தூக்கி, மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், வீர ஆஞ்சநேயர்.
நேரடிப்பார்வை
இவரின் சிறப்பிலும் சிறப்பு என்னவென்றால், மற்ற கோயிலில், கையில் மலையினையோ அல்லது கதையினையோ (Gadai) அனுமார் வைத்திருப்பார். ஆகையால் அவரின் திருமுகமானது இடது பக்கமாக காணப்படும். ஆனால் இந்தக் கோயிலில், ஒரு கை அபயஹஸ்தத்துடன் காட்சியளிப்பதாலும், மற்றொரு கையில் செண்டு மலரை வைத்திருப்பதாலும், அனுமனின் திருமுகம் நேரடியாக நம்மை (பக்தர்களை) பார்த்தவாறு அருளாசி வழங்குகிறார். எப்போதும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனுக்கு, வலது புறமாக தலையின் மேல் வால் இருக்கும். அதனுடன் மணியும் சேர்ந்து இருக்கும். இங்கும் அப்படியே காட்சியளிக்கிறார். 1991ஆம் ஆண்டில் ஒரு கும்பாபிஷேகமும், 2008ஆம் ஆண்டில் மற்றொன்றும், 7.7.2024ஆம் ஆண்டு அதாவது சென்ற ஆண்டில் ஒரு கும்பாபிஷேகமும் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் வீர ஆஞ்சநேய ஸ்வாமி
ஆலந்தூர் – ஆதம்பாக்கம் எல்லைப் பகுதியில் இந்த ஆஞ்சநேயர் இருப்பதால், சுற்றுவட்டார இடங்களில் இருக்கக்கூடிய கோயில்களின் திருவிழாக்கள் இங்கிருந்துதான் தொடக்கம் செய்யப்படும். குறிப்பாக, ஆலந்தூர் வேம்புலி அம்மனின் திருவிழாக் காலங்களில், அம்மன் அலங்காரம், கரகம், போன்றவை இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படும். இந்தக் கோயிலில் எட்டு வருடங்களாக நான் (ரவி பட்டாச்சாரி) பூஜித்து வருகிறேன். எண்ணற்ற பல அற்புதங்களை கண்டிருக்கின்றேன். அதில் ஒன்றை சொல்கிறேன்; ஒரு பத்து நிமிடங்கள் மழை பெய்தாலே மழை நீர் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால், சுமார் 6 அடி வரை கோயிலை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆட்களிடம் விவாதிக்கப்பட்டது. மிகவும் பழமைவாய்ந்த கோயில் என்பதனால், இந்தப் பணியை மேற்கொள்ள யாரும் முன்வரவில்லை.
புதையுண்ட கோயிலை உயர்த்தும் பணி
நாட்கள் செல்ல, ஒரே ஒரு நிறுவனம் முன்வந்தது. சுமார் 60 நாட்கள் இதற்கான திட்ட பணிகளை மேற்கொண்டனர். சென்னை மாநகரில், முதல் முறையாக 57 நாட்களில் 500 ஜாக்கிகள் உதவியுடன், 6 அடியில் புதைந்திருந்த கோயிலை, தூக்கி எழுப்பினார்கள். இந்தப்பணிகள் சாமானியமானது அல்ல. இன்ச் பை இன்சாக (inch by inch) மெதுவாக ஜாக்கியை வைத்து மேலே எழுப்ப வேண்டும். கொஞ்சம் வேகம் கொடுத்தாலும், ஒட்டுமொத்த கோயிலும் இடிந்து கீழே விழுந்துவிடும். அனுமனின் அனுக்கிரகம் இல்லையென்றால் இவை சாத்தியமில்லை. ஜாக்கியை வைத்து இந்தக் கோயிலை உயர்த்திய பின்புதான், இதை பார்த்து சென்னையில் புதையுண்ட பல கோயில்களையும், உயர்த்தினார்கள். மேலும், நான் கண்களால் பார்த்து அதிசயித்த மற்றொரு நிகழ்வும் நடந்துள்ளது என்று விவரித்தார் அர்ச்சகர்.
விவாகரத்து ஆனவர்களை சேர்த்து வைக்கும் அனுமன்
விவாகரத்து ஆன ஒரு பெண்மணி, அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை. விவாகரத்து ஆன தனது கணவருடனே மீண்டும் இணைந்து வாழ அவருக்கு ஆசை. இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருகி மீண்டும் தனது கணவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். வேண்டிக் கொண்ட குறுகிய நாட்களிலேயே, அந்தப் பெண் மணியின் விருப்பப்படி தனது கணவருடன் சேர்ந்துவிட்டார். ஒரு நாள், மிக மகிழ்ச்சியாக கணவன், குழந்தையோடு கோயிலுக்கு வந்திருந்து அனுமனை தரிசித்துச் சென்றார்கள்.
பிரதானமாக நான்குபிரார்த்தனைகள்
1) திருமணம் பிரார்த்தனை
தொடர்ந்து 9 வாரம் வியாழக்கிழமையோ அல்லது சனிக் கிழமையோ ஏதேனும் ஒரு நாட்களை தேர்வு செய்து, வெற்றிலை மாலை, துளசி, ஜாதகம் ஆகியவைகளைக் கொண்டுவந்து அனுமனின் முன்பு வைத்து அர்ச்சனை செய்து, அனுமனை 9 முறை வலம் வந்து, 9வது வாரம் வடைமாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், திருமணம் நடைபெறுகின்றன.
2) குழந்தை பிரார்த்தனை
அனுமன் கோயில் அருகில், அரசமரமும், வேப்பமரமும் சேர்ந்த ஒரு இடம் இருக்கிறது. அங்கு ஸ்ரீ வேணுகோபால சந்நதி உள்ளது. அவருக்கு புதன் கிழமையில், தொடர்ந்து 18 வாரம், காலையில் 28 முறை வலம் வந்து, 18வது வாரம் அவருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால், குழந்தைபேறு கிடைக்கிறது. இது பல பக்தர்களின் அனுபவம்.
3) அமாவாசை பிரார்த்தனை
இந்த அமாவாசை பிரார்த்தனை இங்கு மிகவும் விசேஷம். சகல விதமான தோஷங்கள், பில்லி சூனியம், நினைத்த காரியம் நிறைவேறுதல் என்று அனைத்து விதமான பிரார்த்தனைகளுக்கும்
அமாவாசை தினம் இங்கு சிறப்பு. அமாவாசை பிரார்த்தனை என்பது, அமாவாசை தினத்தில், ஒரு தேங்காய், இரண்டு எலுமிச்சை பழம், வெற்றிலை மாலை, துளசி ஆகியவையை எடுத்துக் கொண்டு வந்து, அனுமனுக்கு அர்ச்சனை செய்து 48 முறை வலம் வரவேண்டும். அன்றைய தினம் தேங்காயினை உடைக்காமல் கையில் கொடுத்துவிடுவோம். அதனுடன் அனுமனின் திருமுகத்தில் இருக்கக்கூடிய செந்தூரத்தை எடுத்து அதனையும் கொடுத்து அனுப்புவோம். இவைகளை பக்தர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜைசெய்து வரவேண்டும். மேலும், அடுத்த அமாவாசை தினத்தில் கொடுத்த தேங்காயினை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படியாக பிரார்த்தனை நிறைவேறும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும்.மேலும் சில சந்நதிகளை பற்றி பார்க்கலாம்.
வேணுகோபால சந்நதி
இங்கு வேணுகோபாலன் குழந்தை ரூபத்தில், கையில் புல்லாங்குழல் வைத்து அருள்பாலிக்கிறார். இவர் குழந்தை பாக்கியம் உண்டாக்கக்கூடியவர். பல பக்தர்களுக்கு வேணுகோபாலன் குழந்தை பாக்கியத்தை அருளச் செய்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மிக உற்சாகமாக அன்றைய தினத்தை கொண்டாடுவோம். அதே போல், கார்த்திகை மாதத்தில் சொக்கப்பானை நிகழ்வு விமர்சையாக நடைபெறும். அன்றைய தினத்தில், கோயில் முழுவதிலும் 1000 விளக்கிற்கும் மேலாக தீபங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு மார்கழி மாதம் 27ஆம் தேதி, கிருஷ்ணர் சந்நதியில் இருக்கக் கூடிய ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறும். அதே போல், பங்குனி உத்திரம் அன்று, பெருமாளுக்கும் – தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
சக்கரத்தாழ்வார் சந்நதி
கடன் பிரச்னை உள்ளவர்கள், சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நல்ல பலன் கிடைக்கும். மேலும், அடிக்கடி உடல் உபாதை, பயந்த கோளாறு உள்ளவர்கள், சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வந்தால், பிரச்னைகள் தீரும். சக்கரத்தாழ்வார் பின்புறத்தில் நரசிம்மர் காட்சியளிப்பார். காரணம் என்னவென்றால், பக்தர்களின் குறைகளை சக்கரத்தாழ்வார் கேட்டறிந்து, அதனை நம்மிடத்தில் (பகவான்) சொல்லி, நாம் அந்த குறைகளை நிவர்த்தி செய்ய காலதாமதம் ஏற்படுகிறது.ஆகையால், சக்கரத்தாழ்வார் பின்புறத்திலேயே நாமும் இருந்துவிட்டால், பக்தர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நிவர்த்தி செய்யலாம். என்கின்ற நோக்கத்தோடு சக்கரத்தாழ்வார் பின்புறத்தில், நரசிம்மர் அருளாசி வழங்குகிறார். ஆகையால், சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள நரசிம்மரை வேண்டுவதாலும், நம் வாழ்வில் சந்திக்கக்கூடிய அனைத்து சிக்கல்களும் தீரும். இந்த சந்நதியில் சுதர்சன ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதே போல், சக்கரத்தாழ்வார் பின்புறத்தில் நரசிம்மர் இருப்பதால் நரசிம்ம ஜெயந்தி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவிழாக்கள்
அனுமனுக்கு சித்திரை 1ஆம் தேதி பழ அலங்காரம். ஜனவரி 1 ஆம் தேதியும் புரட்டாசி 5வது சனிக் கிழமையின் போதும், முத்தங்கி சேவை நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில், ஐந்து சனிக் கிழமையும் விசேஷம். முதல் வாரம்; வெற்றிலை மாலையுடன் முழு அலங்காரம். இரண்டாவது வாரம்; பூவினால் அலங்காரம். மூன்றாவது வாரம்; காய்கறி அலங்காரம். நான்காவது வாரம் பழங்களினால் அலங்காரம். ஐந்தாவது வாரம்; முத்தங்கி சேவை. அதே போல், மார்கழி மாதம் 30 நாட்களுமே காலை 6 முதல் 8 மணிக்குள் “ஸ்ரீ நவநீதகிருஷ்ண பக்த பஜனை சபாவின்’’ பஜனைகள் நடைபெறும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் – மூலா நட்சத்திரமும் சேர்ந்த தினம் அன்று, அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் சிறப்பு அபிஷேகம், காலை 9 முதல் 10 மணிக்குள் நடைபெறும். அதன் பின், 12 மணி அளவில் அன்னதானங்கள் நடைபெறும். பிற்பகல் 3 முதல் 4.30 மணிக்குள் வடைமாலை அலங்காரம் நடைபெறும். மாலை 6 மணிக்கு, உற்சவர் வீதி உலா வருவார். மீண்டும், இரவு 12 மணி அளவில், உற்சவர் கோயிலை வந்தடைவார். சித்திரை மாதத்தில் வரக்கூடிய ஸ்ரீ ராம நவமி அன்று, அனுமனுக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் நடைபெறும். இது தவிர, வேண்டுதல்களால் செய்யக் கூடிய அலங்காரங்கள்; வெண்ணெய்க்காப்பு, சந்தனக்காப்பு, சிறப்பு அபிஷேகங்கள், வடைமாலை சாற்றுதல் ஆகியவைகளும் நடைபெறும். இத்தனை அலங்காரங்கள் இருந்தாலும், அனுமனுக்கு மிகவும் பிரதானமானது வெற்றிலை மாலைதான் என்று அர்ச்சகர் கூறினார். இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற கோயிலின் கோபுரத்துக்கு மின் விளக்குகள் அமைத்திருந்தால், தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள், அதனை வைத்து மிக எளிமையாக கோயிலை கண்டறிந்துவிடுவார்கள். அதே போல், கோயில் அமைந்திருக்கும் சாலைப் பகுதியின் இருபுறத்திலும் ஆர்ச் ஒன்று அமைத்திருந்தால் நன்றாக இருக்கும். என்கின்ற நம் ஆலோசனைகளை முன்வைக்கிறோம். தொடர்புக்கு: என்.ரவி கோயில் பட்டாச்சாரி – 98421 38305.
ரா.ரெங்கராஜன்
எப்படி செல்வது?: நம்பர் 635, எம்.கே.என். ரோடு, மாங்குளம், கிண்டி. (லேண்ட் மார்க்; ரேஸ்கோஸ் பாலம் அருகில்) காலை 7 முதல் 11 வரை, மாலை 5 முதல் 7 வரை; சனிக் கிழமை ஒரு மணிநேரம் கூடுதலாக கோயில் திறந்திருக்கும்.
The post அமாவாசை பிரார்த்தனையை நிறைவேற்றும் அனுமன் appeared first on Dinakaran.