இதில் அனைத்து வித மந்திரங்களும் அடங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதையை போல இதிலும் எழு நூறு ஸ்லோகங்கள் தான் இருக்கிறது என்பதால், இதை பகவத் கீதைக்கு சமமாகவே கருதுகிறார்கள். இந்த தேவி மகாத்மியத்தில், கூறப்படும் நவ துர்கைகளில், இரண்டாவது துர்கையாக இருப்பவள் தான் பிரம்ம சாரிணீ துர்கை ஆவாள். இந்த துர்கையின் மகத்துவத்தை காண்போம் வாருங்கள்.
புராணங்களில் பிரம்மசாரிணீ துர்கை
ஜகத்துக்கே தந்தையாக விளங்கும் ஈசன் தவத்தில் இருக்கிறார். அவரால்தான் உலக படைப்பு நிகழ வேண்டும் என்று பிரம்மா புரிந்து கொள்கிறார். அதற்கு தவத்தில் இருக்கும் ஈசன், தவம் கலைந்து எழுந்து உலக படைப்பில் நாட்டம் கொள்ள வேண்டும் என்று பிரம்மா தெரிந்து கொள்கிறார். ஈசனின் தவத்தை கலைக்கும் வல்லமை யாருக்கும் இல்லை என்று பிரம்மா புரிந்து கொள்கிறார். ஆகவே, ஆதி பராசக்தியை நோக்கி தவம் செய்கிறார்.
அவரது தவத்திற்கு மனம் கனிந்த தேவி, காட்சி தந்து, தட்சனுக்கு மகளாக பிறந்து ஈசனை மணந்து உலக படைப்பை செய்கிறேன் என்று வரம் தந்து மறைகிறாள். மேலே நாம் கண்ட கதை காளிகா புராணத்தில் வருகிறது. இப்படி பிரம்மனின் தவத்திற்கு கனிந்து, பூ உலகில் தட்சன் என்ற பிரம்மாவின் புதல்வனுக்கு மகளாக அவதரிக்கிறாள் இறைவி. அவளை மணக்கிறார் இறைவன். ஆனால், விதி வசத்தால் தட்சன் ஆணவம் அடைகிறான். ஆணவம் அவன் கண்ணை மறைக்க முழு முதல் கடவுளான ஈசனையே வெறுக்கிறான்.
ஈசனை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பெரும் யாகம் செய்கிறான். அதில் ஈசனை அழைக்கவும் இல்லை அவருக்கு அவிர்பாகமும் வழங்கவில்லை. தந்தை யாகம் செய்யும் சங்கதியை, தட்சன் மகளாக பிறந்து, பரமனை மணந்த அம்பிகை அறிகிறாள்.தந்தை பாசம் மிகுகிறது அம்பிகைக்கு. அழையாத யாகத்திற்கு செல்ல ஈசனிடம் அனுமதி கேட்கிறாள். ஈசன் மறுக்கிறார். இருந்தும் விடாப்பிடியாக தந்தை தட்சன் செய்யும் யாகத்திற்கு வருகிறாள்.
தட்சன், ஈசனையும் அவமதித்து, ஈசன் மனைவி என்பதால் மகள் என்றும் பாராமல் அம்பிகையையும் அவமதிக்கிறான். இதனால் கோபமடைந்த அம்பிகை யாக சாலையிலேயே, தனது யோக அக்னியில் புகுந்து தேகம் துறக்கிறாள். விஷயம் அறிந்த ஈசன், அம்பிகையை பிரிந்த சோகத்தில், தட்சனையும் அவன் யாகத்தையும் அழிக்கிறார். பிறகு ஒரு வழியாக கோபம் தனிந்தவராக தவத்தில் அமர்கிறார்.
இதற்கிடையில், தட்சனின் யாக சாலையில், தேகத்தை துறந்த தேவி, பர்வத ராஜனான ஹிமவானின் மகளாக பிறக்கிறாள். ஹிமாவனும் அவனது மனைவியான மேனாவதியும் அம்பிகையை நோக்கி தீவிரமாக தவம் செய்கிறார்கள். ஹிமவான் மலைகளின் அரசன். அவரது மனைவி மேனாவதி மேருமலையின் புதல்வி. இருவரும் செய்த பெரும் தவத்தால், ஒரு சிறு குழந்தை உருவில், அவர்கள் நீராடும் தடாகத்தில் ஒரு தாமரை பூவின் நடுவே குழந்தையாக தேவி தோன்றுகிறார்.
(ஸ்கந்த புராணத்தில் வரும் வரலாறு). ஹிமாவானுக்கும் மேனைக்கும் ஆதி சக்தி மகளாக அவதாரம் செய்து விட்டாள், என்று அறிந்த நாரத முனிவர், குழந்தையாக இருக்கும் தேவியை தரிசிக்க வருகிறார். வந்து தேவியை தரிசித்தார் நாரத முனிவர். மேலும், பார்வதி தேவியிடம், நீ பரமேஸ்வரனையே பதியாக அடைவாய். அதற்கு நீ செயற்கரிய தவம் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தார். பார்வதி தேவியும் நாரதரின், உபதேசத்தை சிர மேல் கொண்டு, அன்று முதல் தவம் இருக்க ஆரம்பித்தார்கள்.
நாரதரின் உபதேசத்தின் படி தவத்தை கடைபிடித்ததால், தபஸ் (அதாவது தவம்) சாரிணீ (கடைப்பிடிப்பவள்) என்று தேவிக்கு திரு நாமம் வந்தது. தவம் செய்து எப்போதும் பிரம்மத்தின் நினைப்பிலேயே தோய்ந்து இருந்ததால், பிரம்மத்தை கடைபிடிப்பவள் என்ற அர்த்தத்தில் இந்த தேவியை பிரம்ம சாரிணீ என்றும் அழைக்கிறார்கள்.
அபர்ணா என்ற பெயர் கொண்ட பிரம்ம சாரிணீ துர்க்கை
தவம் செய்ய ஆரம்பித்த அம்பிகை முதல் ஆயிரம் வருடங்கள் வெறும் பழங்களை மட்டுமே உண்டு தவம் இருந்தாள். பிறகு, மூவாயிரம் வருடங்கள் வரை, தரையில் காய்ந்து விழுந்த வில்வ இலைகளை மட்டுமே உண்டு தவம் புரிந்தாள். சில காலங்களுக்கு பிறகு இலைகளை உண்பதையும் அம்பிகை விட்டாள். சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல், காய்ந்த இலைகளைகூட உண்ணாமல், இறைவனை அடைய வேண்டும் என்ற அவாவில் கடும் தவம் செய்தாள் அம்பிகை.
இப்படி காய்ந்த இலைகளை உண்பதையும் தவிர்த்துவிட்டு, தவம் இருந்ததால் அம்பிகைக்கு அபர்ணா என்ற நாமம் வந்தது. அபர்ணா என்றால், காய்ந்த இலைகளைகூட உண்ணாதவள் பொருள். மேலும், கடனே இல்லாதவள், தன்னை அடைந்தவர்களை கடன் இல்லாமல் இருக்கச் செய்பவள் என்றும் இந்த நாமத்திற்கு பொருள் உண்டு.
பெரும் மகானான பாஸ்கர ராயர், கடன் பட்டே அம்பாளின் பூஜையை செய்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை, திரும்பி கேட்டார்கள். அப்போது அவர், அம்பிகையை பார்த்து, “கடன் இல்லாதவள் என்ற பெயர் உனக்கு பாரமாக இல்லையா? நீ எனக்கு பட்ட கடனை இன்னமும் அடைக்கவில்லையே’’ என்று சொல்லி வேண்டிக் கொண்டாராம். அவர் மீது கொண்ட கருணையால், அவரது மனைவியின் வடிவில், பாஸ்கரராயருக்கு கடன் தந்தவர்கள் இல்லம் தேடி சென்ற அம்பிகை, அவரது கடனை அடைத்தாளாம். விஷயம் அறிந்த பாஸ்கரராயர், அம்பிகையின் கருணையை எண்ணி ஆனந்தக் கூத்தாடினார். இந்த பாஸ்கரராயர் தான் லலிதாசஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் அதாவது உரை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபர்ணா என்ற இந்த நாமம் லலிதா சஹஸ்ர நாமத்தில் 754 ஆம் நாமமாக வருகிறது.
உமா என்ற நாமமும் பிரம்ம சாரிணீ துர்கையும்
இப்படி ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல், காய்ந்த இலைகளைகூட உண்ணாமல் தவம் இருந்ததால், அம்பிகையின் உடல் நாடியாய் மெலிந்து போனது. இதை கண்ட, அம்பிகையின் தாயான மேனைக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மலைகளின் அரசனான ஹிமாவானின் மகள், இப்படி ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல், வாடிக் கிடப்பதை கண்ட அவளுக்கு துக்கம் தாள வில்லை. ஆகவே தவம் இருந்த தன் மகளிடம் சென்று “உண் அம்மா…. உண் அம்மா’’ என்றாளாம். அதனால் அம்பிகையை “உமா’’ என்று அழைக்கிறார்கள்.
மேலும் சமஸ்கிருதத்தில், “உ’’ என்பது விளிச்சொல்லாக வரும். அதாவது மேனை, தனது மகளை “உ’’ என்று விளித்து “மா’’ என்று சொன்னாளாம். “மா’’ என்றால் வட மொழியில் வேண்டாம் என்று பொருள். அதாவது மேனை, தவத்தில் இருக்கும் தன் பெண்ணை அழைத்து “தவம் வேண்டாம்’’ என்று பாசத்தோடு சொன்னதால் இந்த தேவிக்கு உமா என்ற நாமம் வந்தது.
உமா என்ற நாமமும் பிரணவ மந்திரமும்
ஓம் என்ற பிரணவ மந்திரம், “அ’’, “உ’’ மற்றும் “ம’’ என்ற மூன்று எழுத்தால் ஆனது. இந்த மூன்று எழுத்துக்கள், முறையே ரிக், யஜூர், சாம வேதத்தின் சாரமாக
விளங்குகிறது.படைத்தல், காத்தல், அழித்தல் என்ற பரம்பொருளின் அலகிலா மூன்று விளையாட்டை குறிக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற திரி மூர்த்திகளின் சூட்சுமமான வடிவமாக இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆழ்ந்த பொருள் உள்ள மந்திரம் இது. அனைத்து வேதத்தின் சாரமாக விளங்கும் மந்திரம் இது. ஆகவே இதை சன்யாசிகள் மட்டுமே ஜெபிக்கலாம் என்ற ஒரு விதி இருக்கிறது. எனில், இல்லறத்தில் உழலும் நம்மை போன்றவர்கள் பிரணவத்தை ஜபம் செய்ய முடியாதா என்ற கேள்வி வருகிறது. அந்த கேள்விக்கு பதிலாக விளங்குகிறாள் பிரம்ம சாரிணீ துர்கை.
பிரம்ம சாரிணீ துர்கைக்கு, “உமா’’ என்ற நாமம் உண்டு என்பதையும், அந்த நாமம் அவளுக்கு ஏன் வந்தது என்பதையும் நாம் மேலே கண்டோம். நன்கு உண்ணித்து கவனித்தால், பிரணவ மந்திரத்தில் இருக்கும், அதே “அ’’, “உ’’ மற்றும் “ம’’ என்ற மூன்று எழுத்துக்கள் தான் “உமா’’ என்ற நாமத்தில் இருக்கிறது. உ என்னும் எழுத்து காத்தலை குறிக்கும். அம்பிகை எப்போதும், பக்தர்களை காப்பதையே கருத்தாக கொண்டவள் என்பதால், “உ’’ என்ற எழுத்தை முன்னே வைத்து பிரணவத்தை மாற்றி சொல்லும் போது “உமா’’ என்ற நாமம் வருகிறது.
சம்சாரத்தில் உழலும் நாம், பிரணவ மந்திரத்தை ஜெபிக்க கூடாது என்றாலும், பிரணவத்தின் வேறு வடிவமான பிரம்ம சாரிணீ துர்கையின் நாமமான “உமா’’ என்ற நாமாவை ஜெபித்து பல விதமான சௌபாக்கியங்களை அடையலாம். உமா என்ற இந்த நாமம் லலிதா சஹஸ்ர நாமத்தில், 633 ஆவது நாமாவாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈசனை தவத்தால் அடைந்த பிரம்ம சாரிணீ துர்கை
தேவியின் தவத்தின் கடுமையை கண்டு அண்டமே நடுங்கியது. ஆகவே அனைத்து தேவர்களும் முனிவர்களும், ஈசனிடம் சென்று அன்னையை ஏற்குமாறு விண்ணப்பம் செய்தார்கள். இருப்பினும், ஈசன் ஒரு கிழ வேதியர் வடிவில் வந்து அம்பிகையின் பக்தியை சோதித்து இறுதியில், சோதனையில் வென்ற அம்பிகையை மணம் செய்து கொண்டார். தவத்தால் இறைவனையே ஆண்டதால், இந்த அம்பிகைக்கு “பிரம்ம சாரிணீ துர்கை’’ என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகையே பூரண பிரம்மத்தின் வடிவம் என்பதாலும் “பிரம்ம சாரிணீ துர்கை’’ என்ற பெயர் அம்பிகைக்கு வந்தது.
ஜி.மகேஷ்
The post பிரம்ம வித்தையை வசமாக்கும் பிரம்மசாரிணீ துர்கை appeared first on Dinakaran.