நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே, முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே; மலைமகள் என்பது நாம்;
மிகையே, இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே
(தொன்னூற்றி மூன்றாவது அந்தாதி)
‘‘ஆதியாக’’
சிரிப்பு என்பது நவரசங்களில் ஒன்று. இது மகிழ்ச்சியின் அடையாளம் இது இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது. தான் சிரித்தல் பிறரை சிரிக்க வைத்தல். அந்த வகையில் அபிராமிபட்டர் இந்தப் பாடலை பொருத்தவரை தானே சிரிக்கிறார்.
இது தோன்றுவதற்கு ஆறு விதமான காரணங்கள் சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு காரணம் பற்றி இங்கு காண்போம். தான் உமையம்மையை பற்றி சொன்ன சொற்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்திருப்பதே சிரிப்பிற்கு காரணமாய் உள்ளது. பொருத்தமற்ற உரையாடல், உறுப்புகளில் வேறுபாடுகளை காண்பது, பொருந்தாத வர்ணனை இவையாவும் நகைச் சுவையை தோற்றுவிக்கிறது. இனி இப்பாடலை காண்போம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”நகையே
இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை
மானே முதுகண் முடிவில்
அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே
இவள் தன் தகைமையே நாடி விரும்புவதே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.
“நகையே” இலக்கிய நோக்கில் பழிப்பது போல் புகழ்வது, புகழ்வது போல் பழிப்பது என்ற வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்ததாக இப்பாடல் கருதப்படுகிறது. அப்படி இருந்தாலும் அபிராமிபட்டர் தத்துவ நோக்கில் பாடியிருப்பது ஆகமங்களின் வழி அறியலாகிறது. இதை ஒரு உதாரணத்தால் அறியலாம். வானில் பார்க்கப்படும் நிலவு ஒன்றே. ஆறு, குளம், கிணறு, குட்டை போன்ற பல நீர் நிலைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய் பல ஆயிரம் நிலவுகளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. எது எப்படியோ அதுபோல்தான் உமையம்மையின் உண்மை குணத்தை புரிந்து கொள்ளாமல் நாம் மாற்றிப் புரிந்து கொள்கிறோம். அவ்வாறு புரிந்து கொள்வது என்பது எந்தவிதமான பயனையும் தராது.
உமையம்மையின் அருளை உபாசகன் பெற்று அதன் பின்னர் இவ்வுலகத்தை நோக்கும்போது இவ்வுண்மை புரியும். அதையே ஞானம் என்கின்றனர். முக்தி கர்மா என்பது ஞானத்தை தோற்றுவிக்கின்ற செயல். ஞானம் தோன்றா விடினும் கர்மா துன்பத்தை போக்குமே அன்றி முக்தியை அளிக்காது. கர்மாவை சரியாக செய்து ஞானத்தை தவறாக புரிந்து கொண்டால் அதுவே சிரிப்பை தருவதாக அமைகிறது என்கிறார் பட்டர். உதாரணமாக,பள்ளிக்கூடத்திற்கு முறையாகச் செல்லும் ஒரு மாணவன் படிப்பதை தவிர்த்து, சீருடை அணிவது, ஆசிரியருக்கு பணிந்து நடப்பது, சரியான நேரத்திற்கு செல்வது போன்றவற்றை செய்தாலும் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடத்தை மனதிலே சரியாக பதித்து அதை தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு மறக்காமல் பயன்படுத்துகிற பண்பு இருந்தால் மட்டுமே அவன் தேர்ச்சி அடைய முடியும். அதுபோல பயன்படுத்துகிற பண்பு இல்லாவிடில் அவன் செய்த பிற வேலை பயனற்று போகும்.
இதையே ‘சத கோடி கர்மா பி: ஞானம் வினா நப் ரயோஜனம்’ நூறுகோடி பிறவிகள் எடுத்தாலும் ஞானம் இல்லாவிடில் அது பயனற்றது. அப்படி தவறாக புரிந்து கொள்ளும் ஞானத்தையே ‘‘நகையே” என்கிறார். இந்தப் பாடலின் நாம் உமையம்மையை பற்றி இரண்டு முரண்பட்ட கருத்துக்களை புரிந்து கொள்கிறோம். ஆனால் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவர் உமையம்மை என்பதையே பட்டர் ‘‘நகையே” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.
79வது பாட்டிற்கு பிறகு உமையம்மையின் அருளைப் பெற்ற அபிராமிபட்டர் இதுவரை நான் உன்னைப் பற்றி புரிந்துகொண்ட கருத்துக்களின் முரண்பாடுகளை எண்ணிப் பார்க்கையில் இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டு நிற்கும் அவள் பண்பை மெய்யாக உணரும்போது தான் சிந்தித்தது நகைப்பிற்கு இடமாக உள்ளது என்பதையே ‘‘நகையே” என்கிறார். ‘ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்’ (56) நிற்கின்ற பண்பை அறிந்து மகிழ்கிறார். அதற்கு முன் குழம்பி இருந்ததை நினைத்து நகைப்பதையே‘‘நகையே” என்கிறார்.
‘‘இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை” ‘‘இஃது’’ இந்த, ‘‘ஞாலம் எல்லாம்’’ உலகத்தை, ‘‘பெற்ற’’ ஈன்றெடுத்த, ‘‘நாயகிக்கு’’ தலைவிக்கு ‘‘முகையே’’ மொட்டுப் போன்ற, ‘‘முகிழ் முலை’’ அபிராமி பட்டர் உமையம்மையின் ஸ்தனங்களை பற்றி பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஒரே பாடலில் இரு முரண்பாடான முலையின் பண்பை குறிப்பிடவில்லை. இந்த ஒரு பாடலில் தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்.
அந்தாதியின் பிற பாடல்களை ஒப்பிட்டு பார்த்தால் அது புரியும். ‘பென்னம் பெரிய முலையும் முத்தாரமும்’ (53), ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர் அருள்கூர் திருத்தன பாரமும்’ (9), ‘செங்கலை சம்முலையாள்’ (21), ‘வடங்கொண்ட கொங்கை மலை’ (42), ‘பயோதரமும்’ (70), ‘செப்பும் கனக கலசமும் போலும் திரு முலைமேல்’ (78) ‘தருணாம் புயமுலை’ (58) ‘கொங்கை குரும்பை’ (62) ‘புல்லிய மென்முலை’ (91), ‘குழைக்கும் களபக் குவிமுலை’ (33), ‘துணை முலையாள்’ (38) என்பதனால் உமையம்மையின் பால பருவத்தையும், யவ்வன பருவத்தையும் திருமணத்திற்கு பின்பு உள்ள நிலையை முலை நலன் கொண்டு குறிப்பிடுகிறார். இப்பாடலை பொருத்தவரை “இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு” என்பதனால் முதிய வயதான நிலையை முதலில் குறிப்பிட்டு பருத்த முலையை சூட்டாமல் “முகில்” என்ற வார்த்தையால் மொட்டு போன்ற சிறுத்த முலையைக் குறிப்பிடுகிறார்.
உலகியல் நோக்கில் உருவத்திற்கு தகுந்தார்போல் பருவத்திற்கு தகுந்தார்போல் உருவமும் உடலும் மாறுபட்டு அமைவது இயல்பு. கண்டிப்பாக முதிய வயதான கிழ மங்கைக்கு சிறிய மென்மையான முலை அமையாது. ஆனால் அபிராமிபட்டரோ “இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு” என்ற முதிய பருவத்தை குறிப்பிட்டு “முகிழ்முலை” என்ற சிறிய பருவத்திற்கு உரிய முலை அமைந்திருப்பதாக குறிப்பிடுவது முரண் ஆகும். (இதுதான் நகைச்சுவையாகிறது).
‘‘இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகில் முலை” என்ற முரண்பாடு உடைய தவறான தகவலை அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவர் அதை அறியாதவரும் அல்ல. ‘பகல் உண்னான் பருத்திருப்பான்’ என்ற அர்த்தத்தில் ஒரு உண்மையை உணர்த்த முயல்கிறார். இதை அறிந்தால் அன்றி இப்பாடலை புரிந்துகொள்ள இயலாது. முரண்பாட்டை அவரே இப்பாடலிலேயே ‘‘வம்பே” என்ற வார்த்தையால் தெளிவு செய்கிறார்.
உபாசகனுக்கு புரிய வைப்பதாக உமையம்மை தான் ஒரு உருவத்தை உடையவளாய் ஒடுக்கி தோன்றுவது அவளின் கருணையே, இயல்பில் தான் அந்த பண்பை உடையவள் அல்ல. ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’ (87) ‘ஒளிர் திருமேனி’ (82) என்பதனால் உமையம்மை நம் கண்களுக்கு தோன்றுகிற பண்பு, இயல்பாய் அவளுக்கு இருக்கிற பண்பு என்ற இரண்டு பண்புடையவர். இதையே சொரூப லக்ஷணம் [உண்மை இலக்கணம்] தடஸ்த்தலக்ஷணம் [பார்ப்பவரின் இயல்பு சார்ந்து தோன்றுகின்ற பண்பு] குழந்தையாகவோ, பாலனாகவோ, இளைஞனாகவோ, முதியவராகவோ, பார்ப்பவர் சார்ந்து உமையம்மையை பற்றிய ஞானம் மாறு படும் என்பதை வலியுறுத்தவும் இந்த முரண்பாட்டை தெளிவுபடக் கூறவுமே நகைச்சுவையாக ‘‘இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை” என்கிறார்.
“மானே முதுகண்”“மானே” என்பது மானுக்குரிய அழகான மருட்சிப் பார்வையையும், ‘‘முதுகன்” என்பது 80 வயதிற்கும் மேற்பட்டோரின் அனுபவப் பார்வையையும் குறிப்பிடுகிறார். உமையம்மை அபிராமி பட்டரை எப்படி பார்க்கிறாள், அபிராமிபட்டர் உமையம்மையை எப்படிப் பார்க்கிறார் இந்த இரண்டிற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. அதையே “மானே முதுகண்” என்று குறிப்பிடுகிறார்.
உமையம்மையின் பார்வையானது பார்க்கப்படும் பொருள்களுக்கு வல்லமையை அருள்வது. பட்டரின் பார்வையானது உமையம்மையின் அருளைப் பெற்றுக் கொள்வது. உமையம்மையின் பார்வையானது ஒரே மாதிரியான அன்பையும் ஆற்றலையும் நோக்கையும் கொண்டது.பட்டரின் பார்வையானது குழந்தை, பால பருவம், இளமை, முதுமை என்ற பருவத்திற்கு தக்கவாறு கண்களின் தோற்றம், அதன் நோக்கும், அறிவு சார்ந்து, உணர்வு சார்ந்து மனிதனுக்கு மாறுபாடுகளை கொண்டதாக அமையும். இந்த வேறுபாட்டை “மானே முதுகண்” என்று தன் நோக்கில் பார்ப்பதையே இங்கே பதிவு செய்கிறார்.
இதை பிற பாடல்களை கொண்டு அறியலாம். ‘அறிந்தேன் எவரும் அறியா மறையை’ (3) ‘அறிவொன்றிலேன்’ (81) என்று குறிப்பிடுகிறார் பட்டர். இது காட்சிப்பிழை போல்அந்தாதியைப் படிப்போருக்கு தோன்றுகிறது. ஆனால் அவர் மானுடத்தின் இயல்பான உண்மைத் தன்மையை நோக்கியே “மானே முதுகண்” என்று குறிப்பிடுகிறார்.
தத்துவ நோக்கிலும் சிற்ப சாஸ்திரத்தின் வழியும் ‘‘மானே முதுகண்” என்று இரண்டையும் இணைத்து பார்க்கையில் சிவபெருமானின் கையில் உள்ள மானின் கண்ணானது சிவபெருமனை திரும்பிப் பார்ப்பது போல் அமைத்திருப்பர். இது இரண்டு குணத்தைக் காட்டுகிறது. அந்தமான் இதற்கு முன்இப்படி ஒரு உருவத்தை பார்த்ததில்லை, முதன் முதலில் எண்ணப்பதிவுகள் அற்ற பார்வையை அந்தமான் பார்க்கிறது. இதையே ‘அதிசயமான வடிவுடையாள்’ (17) என்கிறார் பட்டர்.
மானின் கண்களை கவர்ந்து இழுக்கிறது சிவபெருமானின் தோற்றம், அதுபோல உமையம்மையை காண்கிற அபிராமிபட்டர் உள்ள உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். மேலும் மான் என்பது வேள்வியில் தோன்றியது, அது சிவபெருமானை அழிக்க வந்தது என்கிறது தல புராணம். ஆனால் சிவபெருமானின் கருணைப் பார்வையால் மானானது தான் எதற்காக வந்தோம் என்பதை மறந்து சிவனது அன்பில் குழைந்து அவர் கையில் ஒடுங்கி அருள் மழையில் நனைந்து அவனை உற்று நோக்குகிறது. இதே மானை தாங்கி இருப்பவள் மகேஸ்வரி. அதையே இங்கு தன் நினைவு மறந்து அறிவு இழந்து பார்க்கும் பார்வையே நகைச்சுவைத்தோன்ற ‘‘மானே முதுகண்” என்கிறார்.
‘‘முடிவில்’’உமையம்மையின் தன்மைகளை எல்லாம் நகைப்பிற்குரிய செயலாக்கி புகழ்வதுபோல் பழித்தாலும் பழிப்பது போல புகழ்ந்தாலும் முடிவில் அவர் பெற விரும்புவது உமையம்மையின் அருள் ஒன்றை மட்டுமே. அதையே “முடிவில்’’ என்கிறார். “அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே”“அந்த வகையே” என்பதனால் முன் சொன்ன இரண்டு முரண் பாட்டையும் சிந்தித்து பார்க்கின்ற போது முலை மற்றும் கண்கள் என்ற நோக்கில் பிறவியும் பொய்யானதாக இருக்கும் என்பதையே “அந்த வகையே” என்கிறார்.
இதை பட்டர் ‘மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி’ (70) மதங்கர் குலத்தில் தோன்றியதையும் ‘செங்கண் மால்திரு தங்கச்சியே’ (61) என்பதனால் தேவர் குலத்தில் உதித்ததை குறிப்பிடுகின்றார். முடியைக் காண ‘தடக்கையும்… மகனும் உண்டாய தன்றோ’(65) என்பதனால் உமையம்மை யானையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘மயிலாய்’ (99) என்கிறார். ‘கமலத்தின் மீது அன்னமாம்’ (99), ‘குயிலாய் வெயிலாய்’ (99) என்கிறார். ‘எந்தன் நெஞ்சகமோ’ (20), ‘பெற்ற தாயும்’ (2) மனித குலத்தில் பிறந்ததையும் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு பிறவிகளையும் எடுத்த பின்பு உமையம்மையை ‘‘மலைமகள்” என்று ஒரு இனத்திற்கு மட்டும் உரியவளாய் குறிப்பிடுவது என்பது சற்று அதிகமாய் உள்ளது என்பதையே ‘‘மிகையே’’, இதை ‘அதிவியாப்த்தி’ என்கிறது வடமொழி. இது சொற்குற்றம் ஆகும் குற்றமான சொல்லை அபிராமிபட்டர் சொல்லவில்லை. இதை மேலும் புரிந்து கொள்வதற்கு சாக்த தத்துவத்தை நாம் காண்போம். தத்துவம் உமையம்மையை ‘பிரம்ம’ என்ற சொல்லில் குறிப்பிடுகிறது. பிரம்ம, ஆத்மா என்பது ஒரு பொருட் சொற்கள். இந்த சொல்லுக்கு சார்ந்ததன் வண்ணமாம் தன்மையை பெறுவது ஆன்மா என்று பொருள்.
அந்த வகையில் உமையம்மை எந்த வடிவத்தை எடுத்துக் கொள்கிறாளோ அந்த பொருளின் தன்மையை தான் பெற்று விடுவாள். உமையம்மை அனைத்து வடிவத்தையும் தான் எடுக்க வல்லமை உடையவள். எடுத்த வடிவத்தை தானே மாற்றிக் கொள்கிற ஆற்றல் உடையவள். தன்னையும் தன் கணவனையும் இழிவுபடுத்தும் தக்ஷப்ரஜாபதி தந்த தாக்ஷாயணி எனும் வடிவத்தை [உடலை] நீக்கி தன்னை நோக்கி தவம் செய்யும் இமவானிடத்து சென்று தனக்கு வேரான உடலைத் தானே படைத்துக் கொள்கிறாள். அதனால் பிறவி என்பது உமையம்மைக்கு இல்லை. பிறவியில் வரும் துன்பமும் இல்லை. இதையே பட்டர் ‘காளி’ (77) என்று தாக்ஷாயணியையும் ‘இமவான் பெற்ற கோமளமே’ (95) என்று பார்வதியையும் குறிப்பிடுகிறார்.
பிறகு அவள் ஏன் மயிலாய், குயிலாய், வெயிலாய் பிறவி எடுத்தாள்? அதன் காரணம் என்ன?
அவள் தன் பொருட்டு யாதொரு பிறவியும் எடுப்பதில்லை உடலெடுத்து தன் உணர்வு பெற வேண்டிய அவசியமும் இல்லை. தன்னில் தானே நிறைவு பெற்றவள் என்கிறது வேதாந்தம். உயிர்களைக் காத்து அவற்றை வழிநடத்தி துன்பத்தை போக்கும் பொருட்டு உமையம்மை பிறவி எடுக்கிறாள். அவள் எந்த குலத்தில் தோன்றுகிறாலோ அந்தக் குலமானது செழிக்கும். அந்தந்த படி நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கு அந்தந்த பிறவியிலேயே மெய் ஞானத்தை அளித்து முக்தியும் செய்கிறாள். இதை மனதில் கொண்டே உமையம்மையை பற்றியும் அவள் தோன்றிய குலத்தை பற்றிய தகவல்களை எந்த ஒரு இலக்கணத்தையும் கொண்டு வரையறுத்துவிட முடியாது. ஆனால் வழிபாட்டின் வழியே அவள் கருணையை பெற்றுவிட முடியும். இதையே “அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே” என்கிறார்.
‘‘இவள் தன் தகைமையே நாடி விரும்புவதே”
“இவள்” என்பதனால் உமையம்மையும் அவளை கை சூட்டி அழைக்கிற அருகாமையை குறிப்பிடுகிறார். ‘‘தன் தகைமையே” என்பதால் அவளின் உண்மையான பாராட்டுக்குரிய உயர்வையும், ஒழுங்கையும், மேன்மையை இயல்பாகக் கொண்டதனால், அபிராமிபட்டர் ஒழுங்கை, உயர்வை, மேன்மையை தான் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உமையம்மையை புகழ்கிறார். இதை ‘அழியாத குணக்குன்றே’ (95) என்றும் ‘நல்லன எல்லாம் தரும்’ (69) என்று அவர் கூறுவதிலிருந்து அறியலாம்.
தன் விருப்பத்தை பட்டர் முன்னிறுத்தி நாளும் ஞானியர்கள் தான் விரும்பியதை இறைவி தனக்கு அருளியதைப்போலவே தான் செய்த இந்த நூலைப் பின்பற்றி எவர் வணங்கினாலும் அந்தப் பண்பை அவர்களுக்கு அருள வேண்டும் என்பதையே ‘‘விரும்புவதே” என்று குறிப்பிடுகிறார். ‘உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே’ (84) என்பதிலிருந்து நமக்காக உமையம்மையிடம் பிரார்த்திக்கிறார் என்பது புலனாகிறது. இவள் என்பதனால் உமையம்மையிடத்து தனக்குரிய உரிமையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறார்.
உலகியல் நோக்கில் ஒருவரைப் பற்றிய தாழ்வானவற்றை மற்றும் குறைகளை அவரிடத்திலேயே கூறுவது என்பது இயலாத ஒன்று அப்படி நேரடியாக கூறினால் பகையும் வெறுப்பும் சொல்பவர் மீது ஏற்படும் என்று அவர் தயங்கவில்லை. உண்மையை அப்படியே வெளிப்படுத்துகிறார் இதில் இரண்டு பண்புகள் இருக்கிறது. உமையம்மையின் அளவற்ற கருணை இதையே பட்டர் ‘அருட்கடலே’ (95) என்கிறார். அபிராமி பட்டரின் சத்திய நெறி என்பதை ‘சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி’ – (பதிகம்) என்ற வரிகளால் பட்டரின் உண்மைத் தன்மை தெரியவருகிறது.
(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி appeared first on Dinakaran.