ஒரு நாள் ஒரு சிறுமி தோட்டத்தில் அழகான பூவை பார்த்தாள். அப்போது அந்த பூச்செடியின் அடிபாகத்தில் சகதியும், மாட்டுச் சாணமும் இருப்பதைக் கவனித்தாள். அழகான இந்த பூ இருக்கும் இடத்தில் நாற்றம் வீசும் சாணமும், சகதியும் இருக்கிறதே என்று அதை வேரோடு பிடுங்கி தண்ணீர் குழாயில் கொண்டு போய் சேற்றை கழுவினாள். சிறிது நேரத்தில் அந்த பூவும் செடியும் வாடிப் போனது. அப்போது அங்கு வந்த தோட்டக்காரன் செடியை பார்த்துவிட்டு அந்த சிறுமியை என் தோட்டத்தில் இந்த பூச்செடிதான் மிகவும் அழகானது, அதை பிடுங்கி அழித்துவிட்டாயே என்று மிகக் கடுமையாக திட்டினான். அதற்கு சிறுமி; அந்த பூச்செடி நாற்றமெடுக்கும் சகதியில் இருக்கிறதே என்றுதான் அதைப் பிடுங்கி கழுவி வேறு இடத்தில் வைக்க முயற்சித்தேன் என்றாள். அதற்கு அவர்; அந்த செடியை நான்தான் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் வைத்தேன். சாணத்தை வைத்ததும் நான்தான் என்றார். எந்த செடியை எங்கு வைத்தால் நல்லது என்பதை நான் அறிவேன். அர்த்தமில்லாமல், நோக்கமில்லாமல் இதை செய்யமாட்டேன் என்றார்.
சிலர் தங்கள் திருமணமான குடும்பத்தையும், சிலர் வேலை பார்க்கும் இடத்தையும் குறித்து கடவுள் ஏன் என்னை இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு கொண்டு வந்தாரோ என்று கலங்கி கொண்டே இருப்பார்கள். தேவன் நோக்கமும் திட்டமும் இல்லாமல் அங்கு உங்களை வைக்கவில்லை. உங்கள் மூலமாக அந்த குடும்பம் ரட்சிக்கப்பட வேண்டியதாய் இருக்கலாம் அல்லது அந்த வேலை செய்யும் இடத்தில் உங்கள் பங்களிப்பு தேவைப்படகூடியதாக இருக்கலாம். ஏதோ ஒரு நோக்கமுண்டு.அன்பானவர்களே, சில நேரங்களில் நம் வாழ்வில் தீமையானது போல தோன்றும் நிறைய காரியங்களை, தேவன் நன்மையாக முடிய செய்வார். ஆகவே, நீங்கள் இருக்கக்கூடிய நிலைமையை நினைத்து புலம்பாதீர்கள். ஏற்ற காலத்தில் அவர் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கி இருங்கள்.தன் இளம் பிராயத்தில் நுகத்தை சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. அவரே அதை தன் மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்ககடவன். (புல.3:27,28)
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post பொறுமை கடலினும் பெரிது! appeared first on Dinakaran.