கல்வி செல்வம் வீரம் மூன்றும் தரும் அனுமன்

நாம் முன்பே கூறியதை போல், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மகான்  வியாசராஜர் தீர்த்தர் தேசாந்திர சஞ்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது, போரூர் என்னும் இடத்திற்கு வருகிறார். அங்கு அருமையான அழகான ஒரு குளத்தை காண்கிறார். அந்த குளத்தை கண்டவுடன், கண்களை மூடி தியானத்தில் ஆழ்கிறார். அவர் மனதில் குளத்தை பற்றிய தெய்வீக நிகழ்வுகள் கண் முன்னே தோன்றுகின்றன.

தினமும் பூஜை செய்யும் ராமர்

சீதையை தேடி, காடு, மலை, என பல இடங்களில் சுற்றிவந்த ராமர், சென்னை போரூர் (அந்த காலகட்டத்தில் வேறு பெயராகக்கூட இருக்கலாம்) இடத்திற்கு வருகிறார். தினமும் சிவனை பூஜித்து வழிபடுவது ராமரின் வழக்கம். ஆகையால், அந்த பகுதி முழுவதிலும் சிவலிங்கத்தை தேடுகிறார், சிவலிங்கம் கிடைக்கவில்லை. பிறகு, அனுமானை கைலாயத்திற்கு சென்று ஒரு சிவலிங்கத்தை எடுத்துவர உத்தரவிடுகிறார். அனுமன், வாயுபுத்திரன் அல்லவா! மின்னல் வேகத்தில் கைலாயத்திற்கு செல்கிறார். கைலாயத்தை ரசிக்கிறார் அனுமன். மெய்மறந்து தன்னை அறியாது அங்கேயே தியானத்தில்
அமர்கிறார்.

இங்கோ.. ராமபிரான், அனுமனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நேரம் செல்ல.. செல்ல.. எங்கு சிவனிற்கு இன்று பூஜைகள் செய்யமுடியாமல் போய்விடுமோ? என்கின்ற அச்சம் ராமரின் மனதிற்குள் தோன்ற ஆரம்பித்தது. கண்களை மூடி சிவனை பிரார்த்தனை செய்கிறார், ராமர். பூமிக்கடியில் இருந்து ஒரு சிவலிங்கம் வெளியே தோன்றுகிறது. லிங்கத்தை பார்த்ததும் ராமருக்கு மகிழ்ச்சி. அந்த சிவலிங்கத்தை பூஜித்து வழிபாடு செய்து, அங்கேயே பிரதிஷ்டையும் செய்கிறார், ராமர். அதுதான் இன்றும் போரூர் தென் மேற்கு பகுதியில் கோயில் கொண்டுள்ள “ராமநாதீஸ்வரர்’’ ஆவார். இந்த ராமநாதீஸ்வரர் கோயில், ஒரு குருஸ்தலமும்கூட.

அதன் பிறகு, தியானம் கலைகிறது, ராமர் உத்தரவிட்டது நினைவுக்கு வருகிறது. அவசரவசரமாக சிவலிங்கம் ஒன்றை எடுத்துக் கொண்டு போரூருக்கு அனுமன் பறந்து வருகிறார். அதற்குள் பூஜை முடிந்துவிடுகிறது. ராமரிடத்தில் சென்று, காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்கிறார். ராமர் மன்னித்து, அனுமன், கைலாய மலையில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமநாதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள மேற்கு பக்கத்தில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அனுமனும் பிரதிஷ்டை செய்கிறார். அனுமன் பிரதிஷ்டை செய்ததால் தற்போது அந்த கோயிலை “அனுமந்தீஸ்வரர்’’ என்று அழைக்கப்
படுகிறது.

அனுமனுக்காக உருவான குளம்

தன்னால் சரியான நேரத்திற்கு வரமுடியவில்லையே.. என்ற ஏக்கத்தில், மனம் வெதும்பிய அனுமன், ராமநாதீஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து, அனுமன் மிகவும் வருந்தி தியானத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட ராமர், “வருந்த வேண்டாம் அனுமா. இங்கேயே நாம் ஒரு குளத்தை அமைக்கிறோம். அதன் நீரை எடுத்து தினமும் ராமநாதீஸ்வரருக்கும், அனுமந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்க. மன அமைதி கிடைக்கும்’’ என்று அனுமனிடத்தில் கூறுகிறார். அனுமனும், ராமர் பேச்சைதட்டாது, போரூர் குளத்தில் தண்ணீரை எடுத்து அபிஷேகங்களும் பூஜைகளும் செய்கிறார். இவைகளை தனது ஞானதிருஷ்டியால் காண்கிறார், வியாசராஜர். ராமன், லட்சுமணன், அனுமன் ஆகியோர்களின் திருப்பாதங்கள் வைத்த இடமா இது! என்று மகிழ்ந்து, ராமநாதீஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து, அனுமன் தியானித்த அதே இடத்தில் வியாசராஜர், “வீர ஆஞ்சநேயரை’’ பிரதிஷ்டை செய்கிறார். அந்த வீர ஆஞ்சநேயர்தான் தற்போது சென்னை போரூரில் சிவ வீர ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவருகிறார்.

சீதா ராம புஷ்கரணி

கூடுதல் தகவல்களாக, ஆற்காடு நவாப் காலத்தில், இந்த போரூர் பகுதி முழுவதும் குதிரை லாயம் (குதிரைகளை கட்டிவைக்கப்படும் இடம்) இடமாக இருந்திருக்கிறது. ஆகையால், குளத்தின் நீரை, குதிரைகளுக்காக அப்போது பயன்படுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த குளத்துக்கு, மண்டபகுளம் என்று பெயர்வந்திருக்கிறது. மேலும், போரூர் முதல் கோடம்பாக்கம் வரை இருக்கும் சாலைக்கு ஆற்காடு சாலை என்று பெயர் வருவதற்கும், ஆற்காடு நவாப்தான் காரணம். தற்போது இந்த குளத்திற்கு “சீதா ராம புஷ்கரணி’’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமரின் திருப்பெயரே ஊராக இருக்கிறது

சென்னை போரூர் சுற்றுவட்டாரத்தை பார்த்தோமேயானால், இன்றும் “ராமாபுரம்’’ என்னும் பெயர் கொண்ட ஒரு இடமிருக்கும். சீதையை ராமர் தேடும் போது, இங்கே சில நாட்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதே போல், “நந்தவனம்’’ என்கிற இடமும் உள்ளது. இங்குதான் சிவனை பூஜிக்க தினசரி பூக்களை எடுத்துக் கொள்வாராம், ராமர். மேலும், போரூருக்கு வடக்கே பார்த்தோமேயானால், “வானகரம்’’ என்கின்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில்தான், ராமரின் வானகரப் படைகள் எல்லாம் ஒன்றிணைந்து ராமரோடு ராவணனை வதம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆகையால், வானகரங்கள் ஒன்றிணைந்தால் இப்பகுதி வானகரம் என பெயர் பெற்றது. ஆக, போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் ராமபிரானை சம்மந்தப்பட்டவை களாக காணப்படுகின்றன.

மாருதி பக்த சமாஜம்

வியாசராஜர் பிரதிஷ்டை செய்தபின்னர், சுமார் 1500 வருடங்களை கடந்து கம்பீரமாக தோற்றமளிக்கிறது, போரூர் சிவ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோயில். ஆனால், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன், பத்துக்கு பத்து என்கின்ற கணக்கில் மிக சிறிய கோயிலாகத்தான் இருந்திருக்கிறது. அதன் பின்னர், காலப் போக்கில் அதுவும் சிதலமடைந்துவிட்டது. இதனைக் கண்ட போரூர் ஊர் மக்கள் ஒன்று இணைந்து “ மாருதி பக்த சமாஜம்’’ என்கின்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்து, 2008-ஆம் ஆண்டு இந்த வீர ஆஞ்சநேயர் கோயிலை புதுப்பித்து கட்டியிருக்கிறார்கள். அப்போது கோயில் மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கிறது. அந்த சமயத்தில், வீர ஆஞ்சநேயரை உற்று பார்க்கும்போது, அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காணப்பட்டார். ஆகையால், “சிவ வீர ஆஞ்சநேயர்’’ என்கின்ற பெயர்
உருவானது. மேலும், செல்வகணபதி, நிருத்திய கணபதி, தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி, தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், ஐயப்பன், ரெங்கநாதர், பள்ளிக் கொண்ட சிவன், காயத்ரி தேவி, துர்கா தேவி, முருகன், திரியம்பக சனீஸ்வர பகவான், பைரவர் ஆகியோர்களின் தனி சந்நதிகளும் காணப்படுகின்றன. இதில், பள்ளிக் கொண்ட சிவனின் சிலாரூபம் மிக தத்ரூபமாக இருக்கிறது.

ஷிகா வைத்திருக்கும் அனுமன்

மிக முக்கியமாக, வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த போரூர் சிவ வீர ஆஞ்சநேயர், மூன்று சிறப்புகளை கொண்டு, பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி வருகிறார். ஒன்று; கல்வி. சிவ வீர ஆஞ்சநேயரின் தலையில், மனிதர்கள் எப்படி ஷிகா (குடுமி) வைத்துக் கொள்கின்றார்களோ அதே போல், ஆஞ்சநேயரின் தலையிலும் ஷிகா உள்ளது. ஆகையால், கல்வி வரங்களை கேட்ட உடனே தந்துவிடுவார். இரண்டு; செல்வத்திற்கு ஈடுஇணையில்லாத சௌகந்திக பூவை அனுமன், தனது இடது கையில் வைத்திருக்கிறார். ஆகையால், செல்வம் வேண்டும் என்று வேண்டுவோருக்கு, செல்வங்களை வாரி வழங்குகிறார். கடைசியாக மூன்றாவதாக; இடுப்பில் உடைவாள் வைத்திருக்கிறார், ஆகையாக பயந்த சுபாவம் குடையவர்களுக்கு தைரியத்தை கொடுக்கிறார். ஆக, ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான கல்வி, செல்வம், வீரம் ஆகியவைகளை பக்தர்களுக்கு வாரிவழங்கி வருகிறார்.
மேலும், அனுமனின் முகம் வடக்கு நோக்கி காணப்படுகிறது. வடக்கில்தான் இமயமலை இருக்கிறது, அங்குள்ள சிவனை நோக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அனுமனின் செவியானது (காது) கிழக்கு நோக்கி, பக்தர்களின் குறைகளை கேட்டு, அபயஹஸ்தத்துடன் அருள்பவராக இருக்கிறார். இத்தகைய வரப் பிரசாதியை நமக்காக பிரதிஷ்டை செய்த,  வியாசராஜருக்கு, நாம் இந்த தருணத்தில் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தே ஆகவேண்டும்.

கூட்டுப் பிரார்த்தனை

அதேபோல், 48 நாட்கள் விரதம் இருந்து (விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று அர்ச்சகர் கூறுவார்) நியாயமான கோரிக்கையை மனதில் நினைத்து, மட்டை தேங்காய் ஒன்றை இந்த கோயிலின் வளாகத்தில் வேண்டிக் கொண்டு கட்டினால், வேண்டியது நிறைவேறும்.இந்த தேங்காய் கட்டும் இடத்தில், சுமார் ஒரு நான்கு – ஐந்து அடிகளில் பக்த ஆஞ்சநேயரும் இருக்கிறார். இவருக்கு பக்தர்கள் தங்களின் கரங்களினாலேயே வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்யலாம்.மிக முக்கியமாக, இக்கோயிலில் மாலை 7 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகின்றன. (சனிக்கிழமை மட்டும் 8 மணிக்கு நடைபெறும்) உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் அல்லது ஏதேனும் வேண்டுதல்கள் நிறைவேற நினைப்பவர்கள், ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள். அதனை கோயில் நிர்வாகிகள் பிரித்து படித்து, அவர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்.

மனமாறிய அதிசயம்

சில வருடங்களுக்கு முன், வீட்டில் ஒருவர் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகியுள்ளன. இவர் தீவிர சிவ வீர ஆஞ்சநேயரின் பக்தர். எங்கெங்கோ தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. ஒன்றா… இரண்டா… நாற்பது பவுன் அல்லவா! ஆகையால் அந்த தங்க நகைகள் கிடைக்க மனமுருகி அனுமனிடத்தில் வேண்டியிருக்கிறார். நாம் கேள்விப்பட்ட வரையில், நகைகளை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கும் அல்லது நகையை எடுத்தவர், அதனை அடகு கடையில் விற்கும் போது அதன் கடை உரிமையாளர் அவரை காட்டிக் கொடுத்துவிடுவார். ஆனால், நகையை எடுத்தவரே மனம் திருந்தி மீண்டும் நகைகள் அனைத்தையும் நகைக்கு சொந்தக் காரரிடத்தில் கொடுப்பது என்பது அரிதிலும் அரிதான செயல். அப்படித்தான், சிவ வீர ஆஞ்சநேயர், திருடிய நபரின் மனதில் மாற்றம் ஏற்பட செய்து, திருடிய நாற்பது பவுன் தங்க நகைகள் அனைத்தையும் நகை சொந்தக் காரரிடத்தில் கொடுத்திருக்கிறார். இது, சிவ வீர ஆஞ்சநேயரின் மகிமையில் ஒன்று.

விசேஷங்கள்

இந்த திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தி,  ராம நவமி ஆகிய நாட்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, அனுமன் ஜெயந்தி அன்று கோயில் எதிர்புறத்தில் இருக்கும் குளத்தில், உற்சவரான `ஜெய விஜய ஆஞ்சநேயருக்கு’ தெப்பம் உற்சவம் நடைபெறும். அன்றைய தினம், வீதிவுலா புறப்பாடாகும். ராமநவமி அன்று திருக் கல்யாணமும், மறுநாள், ராமர் பிரதிஷ்டை செய்த ராமநாதீஸ்வரர் கோயில் வரை திருவீதி உலாவும் நடைபெறும். புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக் கிழமை, அனுமனுக்கு பெருமாள் அலங்காரம் சாற்றப்படும். வருடத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்காக லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் நடைபெறும். தொடர்புக்கு: ராமராஜு – 9962336666.

ரா.ரெங்கராஜன்

The post கல்வி செல்வம் வீரம் மூன்றும் தரும் அனுமன் appeared first on Dinakaran.

Related Stories: