செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
மேலேயுள்ள திருப்பாவையின் இரண்டாவது பாசுரத்தை பார்ப்போம்.
ஆண்டாள் திருப்பாவையில் இதற்கு முன்னால் உள்ள முதல் பாசுரத்தில், ஞானம், பக்தி, ஆசார்யன் காண்பித்துக் கொடுக்கக் கூடிய திருமந்திரம், அந்த திருமந்திரம் காண்பித்துக் கொடுக்கக் கூடிய பரமாத்மா என்று சுட்டிக் காட்டினாள். மேலும், அந்த பரமாத்மா எப்படிப்பட்டவன்? அவனே பறை தருவான் என்பதை காண்பித்துக் கொடுத்துவிட்டு, இரண்டாவது பாசுரத்திலேயே வையத்து வாழ்வீர்காள் என்று தொடங்குகிறாள். இங்கு வையத்து வாழ்வீர்காள் என்று சொல்லக் கூடியது யாரெனில் பூமிப்
பிராட்டி. பூமிப் பிராட்டியின் அவதாரமான ஆண்டாள். முதல் வார்த்தையே வையம் என்று போட்டிருக்கிறாள். வையம் என்றால் பூமி. உலகம். வையத்து வாழ்வீர்காள் என்கிற வார்த்தையே நாமெல்லோரும் அவளுடைய குழந்தைகள் என்றுதான் தொணிக்கின்றது. உலகத்தில் வாழ்கிறவர்களே என்று கூப்பிடுவதுபோல் தோன்றும். ஆனால், இங்கு வையமே வந்து கூப்பிடுவதால் … இங்கு வந்து வையமே இந்த விஷயத்தை சொல்கிறாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழக் கூடியவர்களே என்று நாம் சொல்வதற்கும். தாயார் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாம் பொதுப்படையாக உலகத்தில் வாழ்கிறவர்களே என்று சொல்வோம். தாயார் வையத்து வாழ்வீர்காள் என்று சொல்லும்போது அவளே வையமாக இருக்கிறாள். அப்போது வாழ்வீர்காள் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அவளுக்குத்தான் தெரியும். அப்போது வையத்து வாழ்வீர்காள் என்று யாரைச் சொல்கிறாள்? இதற்கு முந்தைய பாசுரத்தில் மார்கழித் திங்கள் என்று ஆரம்பித்த உடனேயே ஞானம், பக்தி போன்ற விஷயங்களெல்லாம் உள்ளுக்குள் தோன்றத் தொடங்கி விடும். அப்போது யார் ஞானம், பக்தி என்கிற விஷயத்தின் ஸ்பூர்த்தியில் இருக்கிறார்களோ, யார் பகவானின் அனுக்கிரகத்தை முன்னிட்டுக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களோ, யார் ஒருவர் ஆச்சார்ய சம்மந்தத்தை வேண்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையிலேயே வாழக் கூடியவர்கள். இன்னும் சம்பிரதாயமாக சொல்ல வேண்டுமென்றால் அனன்யபரர்கள் என்று சொல்லலாம். பகவத் விஷயத்திலும், ஆசார்ய விஷயத்திலும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாமல் யாரெல்லாம் இணைத்துக் கொள்கிறார்களோ அவர்களையே அனன்யபரர்கள் என்பார்கள். மற்றவர்களுக்கெல்லாம் அன்னிய பரர்கள் என்று பெயர். இப் படியாக, உயர்ந்த பகவத் விஷயங்களில், பாகவத விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களையே வாழ்வீர்காள் என்கிறாள். இதுதான் உண்மையான வாழ்க்கையை வாழுதல் என்கிறாள். இல்லையெனில் மற்றதெல்லாம் வாழ்க்கையே கிடையாது. அதனாலேயே ஆண்டாள் வாழ்வீர்காள் என்று அழுத்திச் சொல்கிறாள். ஆண்டாளுக்கு உண்மையிலேயே வாழக் கூடியவர்கள் யாரென்று அவளுக்குத் தெரியும். ஏனெனில், எல்லாவற்றையும் தாங்கக் கூடிய சேதன, அசேதன வஸ்துக்களை தாங்கக் கூடியவள் பூமிப் பிராட்டி. அப்படி அவள் தாங்கக் கூடியதில் உண்மையிலேயே யாரெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். யாரெல்லாம் சும்மா கர்மாவை கழிப்பதற்காக இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பூமிப் பிராட்டிக்கு தெரியுமல்லவா? அடுத்ததாக… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! இங்கு பாவை நோன்பு தொடங்குகிறது. காத்யாயனி விரதம். எந்தவொரு விரதமோ, பூஜையோ எதுவாக இருந்தாலும் அதற்கென்று செய்யக்கூடிய சில கிரியைகள் இருக்கும். அதற்கென்று ஒரு முறை இருக்கும். அந்த முறைகளில் எப்போதும் எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்றும் இருக்கும். “Do’s and don’ts” என்று இருக்கும். அம்பாளை முன்னிட்டுக் கொண்டு செய்யும் இந்த விரதத்தில், இருக்கக்கூடிய கிரியைகள் என்ன? என்னவெல்லாம் செய்வோம். என்னவெல்லாம் செய்ய மாட்டோம் என்பதை கேளீரோ. அதாவது கேளுங்கள். இங்கு கேளீரோ என்று யாரைச் சொல்கிறாள் எனில், இதற்கு முன்பு யாரையெல்லாம் வாழ்வீர்காள் என்று சொன்னாளோ அவர்களைத்தான் கேளீரோ என்கிறாள். ஏனெனில், இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்காதவர்களிடம் போய் கேளீரோ என்று சொல்வதில் பிரயோஜனமில்லை அல்லவா? மேலும், இதற்கு இன்னொரு விளக்கத்தைப் பார்ப்போமா? ஏன் இங்கு கேளீரோ என்று சொல்ல வேண்டும்? என்னதான் பகவத் விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்களை வாழ்வீர்காள் என்று சொன்னாலும் கூட, தாயாருக்கு காருண்யம் அதிகம். இந்த ஆன்மிக மயமான வாழ்க்கைக்குள் வராமல் இருப்பார்கள் அல்லவா? அவர்களை நோக்கியும் கேளீரோ என்கிறாள். ஏனெனில், இந்த வார்த்தையைக் கேட்டாவது வந்து விட மாட்டார்களா என்பதற்காக கருணையோடு கூப்பிடுகிறாள். பாவை நோன்பு என்று ஒன்று இருக்கிறதாமே என்று காதில் விழுந்து அதன் மூலமாக வரமாட்டானா என்கிற காருண்யத்தின் காரணமாக கேளீரோ என்று அழைக்கிறாள். ‘‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி…’’ என்று சொல்லும்போது ஆதிசேஷன் மீது சயனம் பண்ணக் கூடிய பகவான். அவனே பரமன் என்பதை உணர்ந்து, அவனது திருவடியைப் பாடி என்று சொல்கிறாள். எந்த பூஜையாக இருந்தாலும் சரி, விரதமாக இருந்தாலும் சரிதான், பகவன் நாமத்தோடு தொடங்கியாக வேண்டும். அதேபோன்று நிறைவு செய்யும்போது பகவன் நாமத்தில்தான் நிறைவும் ஆகும். நீரை எடுத்துக் கொண்டு ஆசமனம் (தீர்த்தத்தால் சுத்தம் செய்து கொள்ளுதல்) செய்ய வேண்டுமென்றால் கூட பகவானின் நாமம்தான். அச்சுதாய நமஹ… அனந்தாய நமஹ… என்றுதான் தொடங்குகிறோம். ஒரு சங்கல்பம் செய்யும்போது கூட கோவிந்த… கோவிந்த… என்றுதான் தொடங்குகிறோம். மீண்டும் முடிக்கும்போது ராம…ராம… கிருஷ்ணார்ப்பணம் என்றுதான் நிறைவும் செய்கிறோம். அங்கும் பகவானின் நாமாதான். எனவே, பகவானின் நாமத்திற்கு சாஸ்திரம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இங்கு ஆண்டாள் அதனால்தான் பரமன் அடி பாடி… என்கிறாள். அந்த பகவானின் நாமத்தை உச்சாடணம் செய்துதான் இந்த நோன்பையே தொடங்க வேண்டும் என்கிறாள். அவனுடைய திருவடிகளை துதித்து என்கிறாள். இப்படியாக… பையத் துயின்ற பரமனடி பாடி… என்று சொல்லும்போதே பகவன் நாம ஸ்மரணை என்று சொல்கின்ற இறைவனின் திருப்பெயரை ஓதியபடி இருத்தலையே காண்பித்துக் கொடுக்கிறாள்.
(தொடரும்)
ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்
The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.