பாகம் 3
சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் அவ்வாறு ஒன்றிணைந்த மேலும் சில தலங்களைத்தரிசிப்போம்:5.சீர்காழி(பிரமாபுரம் / காழிச்சீராம விண்ணகரம்)
ஞானசம்பந்தர், தான் பிறந்த ஊரான சீர்காழியில் ‘தோடுடைய செவியன்,’ என்ற தமது முதல் பதிகத்தை, அங்குள்ள பிரமபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளினார். இந்தத் தலம் 12 பெயர்களில் விளங்குகிறது – பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தொணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம். சம்பந்தரின் முதல் பதிகம், பிரமபுரம் மேவிய பெம்மானைப் புகழ்கிறது. அவர் இந்த 12 தலங்களில் 70 பதிகங்களை (715 பாடல்கள்) அருளி இருக்கிறார். 10 பதிகங்களில், தலத்தின் 12 பெயர்களும் இடம் பெறும் வகையில் அமைத்திருக்கிறார். பல பதிகங்களில் அவர் இறைவனை ‘சிவன்’ என்றே அழைக்கிறார். அப்பர் இரண்டு பதிகங்களும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர்.
சம்பந்தரின் முதல் பாடல்:
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்
இவனன்றே. (சம்பந்தர் 1.1.1)
சம்பந்தரின் பாலபருவத்தில் அவர் தந்தை அவரைக் கரையில் அமர்த்திவிட்டு குளத்தில் நீராடச் சென்றார். குழந்தை அழவே, இறைவன் உமையம்மையோடு விடைமேல் தோன்றினார். இறைவன் சொற்படி உமையம்மை குழந்தைக்கு பொற்கிண்ணத்தில் பால் (ஞானப்பால்) கொடுக்க, அந்த மழலையும் பசி தீர்ந்து மலர்ந்து சிரித்தது. நீராடி கரையேறிய தந்தை குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, திகைத்து, ‘யார் கொடுத்தார்?’ என்று வினவ, சம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தை அருளினார்.
இறைவனை அவர், ‘உமை அம்மையை அருகில் வைத்திருப்பவர், எருது வாகனத்தில் வருபவர், தூய வெண்சந்திரனைச் சூடியவர், சுடுகாட்டின் தூய நீறு பூசியவர், என் உளம் கவர்ந்தவர், தன்னைப்பூசித்த தாமரைமேல் அமர்ந்திருக்கும் பிரமனுக்கு அருளியவர், பெருமை மிகுந்த பிரம்மபுரம் (சீர்காழி) என்ற பதியில் இருப்பவர்,‘ என்று கூறுகிறார்.
நம்மான மாற்றி நமக்கருளாய் நின்ற
பெம்மானைப் பேயுடனாடல் பு ரிந்தானை
அம்மானை அந்தணர் சேருமணி காழி
எம்மானை ஏத்தவல் லார்க்கு இடர் இல்லையே (சம்பந்தர் 2.11.1)
சீர்காழியில் உறைகின்ற தலைவரைத் தொழுபவர்க்கு இடர்கள் எதுவும் வராது என்றும் கூறுகிறார்.
‘இடர்களையும்’ பதிகத்தில் (திருநெடுங்களம் 1.52) அடியவர்களின் இடர்களைக் களைய வேண்டியது என்பெருமானின் கடமை என்று பொருள் படும்படி பாடுகிறார். பலவிதமான அடியவர்களை விவரிக்கிறார். சிவனே தெய்வம் என்ற கொள்கை உடையவர்கள், இரவும் பகலும் இறைவனையே நினைத்திருப்பவர்கள், தினமும் அபிஷேகத்திற்குப் பூவும், நீரும் அளிப்பவர்கள், அவர் திருவடி நிழலை விரும்புபவர்கள், விரும்பி தினமும் கோவில் செல்பவர்கள், பாடித் தொழுபவர்கள், எம்பெருமான் அபிஷேகத் திருநீறு பூசுபவர்கள், தோத்திரங்கள் கூறுபவர்கள், திருவடி நிழலில் வாழும் சிவாச்சார்யார்கள், இறைவனின் திருவடிகளைத் தம் நெஞ்சில் வைத்து வாழ்பவர்கள் – இவர்கள் அனைவரின் அனைத்து இடர்களையும் களையுமாறு திருநெடுங்களத்து நாதரை வேண்டுகிறார்.
சீர்காழியில் உள்ள திவ்ய தேசம், காழிச்சீராம விண்ணகரம். இந்தத் தலம் ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து 1.3 கி.மீ தூரத்தில் உள்ளது. தாடாளர் பெருமாளின் பெருமையைத் திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களில் பாடி மகிழ்கிறார். விண்ணகர் என்றால் கோயில். காழிப் பெருமான் ஸ்ரீராமனே என்ற பொருள்படி இந்தத் தலம் சீராம (ஸ்ரீராம) விண்ணகர் என்று பெயர்
கொள்கிறது.
ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி, ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்,தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகர் சேர்மினீரே. (திருமங்கைஆழ்வார் 1178)
‘பெருமாள் வாமனனாக வந்து மூன்றடி நிலம் கேட்டு த்ரிவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்து மூவுலகங்களை அளந்தார். தாடாளர் பெருமானின் பாதங்களில் பணிவீர். அவரே நால்வேதங்கள், ஐவகை யாகங்கள், ஆறு அக்ஷரங்கள், ஏழு ஸ்வரங்களுக்கு அதிபதி’ என்கிறார் ஆழ்வார்.
திருஞானசம்பந்தரும், திருமங்கை ஆழ்வாரும் சந்தித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. வயதில் இளையவரான சம்பந்தர் மூத்த ஆழ்வாரை வணங்கி அவரைத் தாடாளர் மீது பாசுரம் பாடுமாறு வேண்ட ஆழ்வார் ‘ஒரு குறளாய்’ என்ற பாசுரத்தை அருளியதாகவும், சம்பந்தர் ஆழ்வாரின் பக்தியில் மெய்மறந்து அவரை வணங்க, மூத்தவரான ஆழ்வார், சம்பந்தர் நிகழ்த்திய மயிலை அற்புதத்தைக் குறிப்பிட்டு அவரை ஆசீர்வதித்ததாகவும் வரலாறு.
ஆழ்வார்கள் சைவத்தையும் நாயன்மார்கள் வைணவத்தையும் ஒருவருக்கொருவர் குறை கூறவில்லை. ஆனால் சம்பந்தர் பதிகத்தில் திருமால், பிரமன் இருவரும் காண முடியாத ஜோதிஸ்வரூபமாக சிவபிரான் காட்சியளித்ததை விவரித்திருப்பார். அப்பரும் பல இடங்களில் திருமால், பிரமன் இருவரும் காண முடியாத ஜோதியாக சிவபிரான் இருந்ததைப் பற்றிப் பாடுகிறார். அதேபோல, பாசுரங்களில் பிரமனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து சிவபெருமானை திருமால் காப்பாற்றிய விஷயம் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் பாணாசுரனுக்காக சிவபெருமானும்,கார்த்திகேயனும் ஸ்ரீக்ருஷ்ணரோடு சண்டையிட்டுத் தோற்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது மிகவும் மரியாதைக்கு உரிய வகையில் சம்பந்தர் சிவபெருமானை, ‘மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன்’ (1.97.2) என்று சொல்கிறார். சிவபெருமானின் ஒரு பாகம் உமையம்மையாகவும் மற்றொரு பாகம் திருமாலாகவும் உள்ளார் என்று கூறுகிறார்.
சம்பந்தர் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் ‘விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச் சென்று இராமற்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே, என்று கூறுகிறார். ராம காரியத்திற்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு சிவபெருமான் மோக்ஷம் அருளினார் என்பது பொருள். ராம காரியத்தின் முக்கியத்துவத்தை இந்த பதிகம் விளக்குகிறது. நம்மாழ்வார், திருச்செங்கண்ணூர்ப் பாசுரத்தில் ‘படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே,’ என்று இமயவரம்பனைக் கூறுகிறார்.
மற்றொரு பாசுரத்தில், ‘அவா அறச் சூழ் அரியை அயனை அரனை (3776)’ என்றும், ‘அதனுள் பிரமன் அரன் நீ (3769)’ என்றும் கூறுகிறார். இதனால் திருமாலே சிவன், சிவபெருமானே திருமால் என்பது விளங்குகிறது. 6.கும்பகோணம் (குடமூக்கு / திருக்குடந்தை) தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் கோயில்கள் நிறைந்த ஊராகக் கருதப்படுகிறது. இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
உலகம் பிரளயத்தால் அழிந்தபோது பிரம்மா, சிவபெருமானிடம் மறுபடியும் சிருஷ்டியை எப்படி ஆரம்பிப்பது என்று கேட்க, அவர் ஒரு பானையில் புனிதமான ஊர்களில் இருந்து மண்ணை ஒரு கும்பத்தில் சேகரித்து அதைக் கடலில் விடுமாறு கூற, அக்கும்பம் இந்த ஊரில் வந்து நின்றது. சிவபெருமான் ஒரு அம்பு விட, குடம் உடைந்து சிறிது அமுதம் இங்கு விழுந்தது. பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்தார். குடத்தின் முனையும் (மூக்கு), கும்பத்தின் முனையும் (கோணம்) விழுந்ததால் இந்தத் தலம் கும்பகோணம் என்றாயிற்று. கும்பகோணத்தில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள்:
1. குடமூக்கு (கும்பேஸ்வரர் கோயில் – சம்பந்தர் 11, அப்பர் 10
2. குடந்தைக் காரோணம் (சோமேசர் கோயில்) – சம்பந்தர் 11
3. குடந்தைக் கீழ்க் கோட்டம் (நாகேஸ்வரர் கோயில்) – அப்பர் 11.
பூவணத்தவன் புண்ணியன் அண்ணியங்
காவணத்துடை யான் அடியார்களைத்
தீவணத் திரு நீறுமெய் பூசியோர்
கோவணத்துடை யான் குடமூக்கிலே.
(அப்பர் 5.22.1)
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்டவன் உடனுறையும் குட மூக்கிலே. (அப்பர் 5.22.7)
இந்தப் பதிகங்களில், கும்பேஸ்வரரைப் பாடுவதோடு, இவ்வூர் அடியவர்கள் சட்டப்படி இறைவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறுகிறார். அடுத்த பதிகத்தில் குடமூக்கு இறைவனைப் பணிபவர்களின் பழைய வினைகளும், ஆசைகளும் தீரும் என்றும் கூறுகிறார். இந்த ஊரின் திவ்ய தேசம் திருக்குடந்தை. இங்கு மஹாவிஷ்ணு சார்ங்கபாணியாக உத்திஷ்ட சயனத்தில் இருக்கிறார். உத்திஷ்ட என்றால் ‘எழுந்திரு’ என்று பொருள்.
திருமழிசை ஆழ்வார் சொற்படி பெருமாள் எழுந்திருக்கும் தோற்றமாகப் படுத்திருப்பதால் உத்திஷ்ட சயனம் என்று பெயர். இந்த திவ்ய தேசத்திற்கு 51 பாசுரங்கள் உள்ளன. பெரியாழ்வர் 3, ஆண்டாள் 1, திருமழிசை ஆழ்வர் 7, திருமங்கை ஆழ்வார் 26, பூதத்தாழ்வார் 2, பேயாழ்வார் 1, நம்மாழ்வார் 11.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருமழிசை ஆழ்வார், 812)
திருமழிசை ஆழ்வார் சார்ங்கபாணிப் பெருமாளைப் பார்த்து, ‘ஐயனே, இராமனாக பல தூரம் காட்டில் நடந்த போது உமது கால்கள் வலிக்கவில்லையா? வராஹனாக பூமியைத் தாங்கியபோது உமது உடல் நடுங்கவில்லையா? ஐயனே எழுந்து பதில் சொல்வீரா? என்னோடு பேசுவீரா?’ என்று நெக்குருகிப் பாடுகிறார். அவருக்கு பதிலளிக்க, பெருமாள் எழ முயற்சிக்கிறாராம்!
இந்த அற்புதமான பாசுரம் ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் இருந்த உறவை விளக்குகிறது. திருவெஃகாவில் ஆழ்வார் பெருமாளை பாய் சுருட்டவும், பாய் விரிக்கவும் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதுஅற்புத உறவு. பரம்பொருளை நண்பனாகக் கருதவும், அவரைக் கேள்வி கேட்கவும், அவருக்கு ஆணையிடவும் உரிமை கொண்ட உறவு. இதேபோல சுந்தரர் கோளிலி எம்பெருமானிடம் நெல் தூக்க ஆள் கேட்ட பதிகமும் (7.20) நினைவுக்கு வருகிறது.
திவ்ய தேசக் கோயில்களில் பெருமாள் நின்றான், கிடந்தான், நடந்தான், அமர்ந்தான் என்ற நான்கு திருக்கோலங்கள் அருள்கிறார். 26 கோயில்களில் கிடந்த (சயனக்) கோலத்திலும், 60 கோயில்களில் நின்ற கோலத்திலும், 22 கோயில்களில் அமர்ந்த (வீற்றிருந்த) கோலத்திலும், 4 கோயில்களில் நடந்த (திருவிக்ரமன்) கோலத்திலும் தோன்றுகிறார். (சில கோயில்களில் இரண்டு, மூன்று கோலங்களிலும் இருக்கிறார்).
பெருமாளின் சயனக் கோலங்கள் பலவகைப்பட்டவை.
1. சேஷ சயனம் அல்லது புஜங்க சயனம் – பாம்பின் மேல் – ஸ்ரீரங்கம் உட்பட பல தலங்கள்
2. உத்திஷ்ட சயனம் – எழ முயற்சிக்கும் நிலை – திருக்குடந்தை
3. ஸ்தல சயனம் – தரையில் சயனம் – திருக்கடல்மல்லை
4. போக சயனம் – கையைத் தலை அணையாகக் கொண்டு, புன்முறுவலுடன் – திருச்சித்ரகூடம்
5. அனந்த சயனம் – வலக்கை மேல் தலை வைத்து நேர்ப் பார்வையுடன் – திருவனந்தபுரம்
6.ஜல சயனம் – நீர் மேல் – திருப்பாற்கடல்
7. தர்ப்ப சயனம் – புல் மேல்-திருப்புல்லாணி
8. பத்ர சயனம் – இலை மேல் – திருவில்லிபுத்தூர்
9. வீர சயனம் – திருஎவ்வுள் (திருவள்ளூர்)
10. மாணிக்க சயனம் – சதுர் புஜங்களோடு – திருநீர்மலை.
திருமழிசை ஆழ்வார் தன் பாசுரத்தில் மலைகளின் நடுவில் ஓடும் பரந்த காவிரியை விளக்குகிறார். காவிரிக்கரையில் உள்ள ஐந்து கோயில்களில் பெருமாள் அரங்கன் என்ற நாமத்தோடே உள்ளார். அவை:
1. ஸ்ரீரங்கப் பட்டினம் (கர்நாடக மாநிலம்) – ரங்கநாதன்
2. கோவிலடி – அப்பால ரங்கநாதன்
3. திருவரங்கம் – அரங்கநாதன்
4. திருக்குடந்தை – சாரங்கன்
5. திருஇந்தளூர் – மயிலாடுதுறை – பரிமள ரங்கன்.
இந்த ஐந்து கோயில்களில் ஸ்ரீரங்கப் பட்டணம் திவ்ய தேசப் பட்டியலில் வராத கோயில். சில சமயம் அன்பில் கோயிலில் உள்ள வடிவழகிய நம்பியைச் சேர்த்து பஞ்ச ரங்க திவ்யதேசக் கோயில்களாகக்கருதுவதும் உண்டு.
(தொடரும்)
பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்
The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.