யார் உதவுவார்கள்?

இஸ்லாமிய உலகம் பெரிதும் போற்றி மதிக்கும் அறிஞர்களில் ஒருவர் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள். மார்க்கப் புலமையிலும் தர்க்கத்திலும் சிறந்து விளங்கியவர்.ஒரு முறை நாத்திக நண்பர் ஒருவருக்கும் இமாம் அவர்களுக்கும் இடையே இறைவன் குறித்து நடைபெற்ற உரையாடல் மிகச் சுவையானது.
“இறைவன் இல்லை இல்லை” என்றே சொல்லிக் கொண்டிருந்தார் அந்த நாத்திகத் தோழர்.
அவரைப் பார்த்து இமாம் கேட்டார்.
“நீ எப்போதாவது கடலில் பயணம் செய்தது உண்டா?”
“ஆம். செய்திருக்கிறேன்.”
“அந்தக் கடற்பயணத்தின் போது துன்ப துயரங்களுக்கு ஆளானது உண்டா?”
“ஆம்… ஆளாகி இருக்கிறேன்” என்று சொன்ன நாத்திகர், தாம் அனுபவித்த ஒரு துன்பத்தையும் விவரித்தார்.
“ஒரு முறை நான் பயணம் செய்த படகு கடல்நீரின் ஓட்டத்தில் சிக்கி நொறுங்கிவிட்டது. படகில் இருந்த அத்தனை பேரும் தண்ணீரில் தூக்கி எறியப்பட்டோம். தப்பிக்க வழியின்றித் திகைத்தேன். ஒரு சிறு மரக்கட்டை என் கைகளில் சிக்கியது. அதைப் பற்றிக்கொண்டு கரையை நோக்கி வரலானேன். வரும் வழியிலேயே கட்டை கைநழுவி விட்டது. தப்பிக்க வகையறியாது தவித்தேன், தடுமாறினேன். பிறகு எப்படியோ ஒரு வழியாகத் தப்பித்துக் கரையேறினேன்.”இதைக் கேட்டதும் இமாம் அவர்கள் கூறினார்கள்:
“உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதலில் நீ படகோட்டியை – அதாவது படகைச் செலுத்துபவனை நம்பினாய்.”“ஆமாம்”“பின்னர் ஒரு துண்டு மரத்தை நம்பினாய்.”“ஆமாம்.”“அந்த மரத்துண்டும் உன்னை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு நழுவிச் சென்றுவிட்டது.”“ஆமாம்”“இந்த நிலையில் யாராவது உனக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தாய்தானே?”“ஆம். யாரேனும் உதவுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.”
“யார் உதவுவார்கள் என்று எதிர்பார்த்தாய்?”நாத்திகர் திகைத்தார். இமாம் அவர்களின் வினாவுக்கு அவரால் விடை சொல்ல முடியவில்லை. இமாம் அவர்கள் தொடர்ந்தார்.“நீ நிச்சயமாக இறைவனைத்தான் உதவிக்காக எதிர்பார்த்திருப்பாய்.”“ஆம்” என்று நாத்திகர் உண்மையை ஒப்புக்கொண்டதுடன் இமாம் அவர்களின் கைபற்றி இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது- “இறைவன் இல்லை இல்லை..” என்று நாத்தழும்பேற பேசியவன் மீதும் சினம் கொள்ளாமல், அவன் சிந்தித்து உணரும்படி மென்மையாக, இதமாகப் பதமாக உண்மையை எடுத்துரைத்த இமாம் அவர்களின் அணுகுமுறை.

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“(கடற்பயணத்தின்போது) திடீரென கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் அலைகள் தாக்குகின்றன. தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்கி,‘இறைவா, இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றி உடையவர்களாக இருப்போம்’ என்று அவனிடம் இறைஞ்சுகிறார்கள்.” (குர்ஆன் 10:22)

The post யார் உதவுவார்கள்? appeared first on Dinakaran.

Related Stories: