நாம் விரும்பிய ஒரு பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தப் பொருளாலான பயன்பாடு நமக்குத் தேவைப் படுகிறது. அதனால் நாம் மகிழ்கிறோம். அந்த ஒரு பொருள் நாம் தேடாமலேயே நமக்குக் கிடைக்குமானால் நமக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆமாம், அதற்காக நாம் மெனக்கெடவில்லையே, முயற்சிக்கவில்லையே, நேரமோ, பணமோ செலவிடவில்லையே, தானாகக் கிடைத்ததுதானே!
இதனாலேயே இவ்வாறு கிடைக்கும் இந்தப் பொருளின்மீது நமக்கு உரிய மதிப்பு உண்டாவதில்லை. சலுகையாலோ, இலவசமாகவோ கிடைத்தது என்பதற்காக நாம் அதைப் பயன்படுத்துவதில் அலட்சியமும் காட்டக்கூடும். அதாவது நம் நலனில் அக்கறை கொண்டு, நம் வளர்ச்சிக்காக, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பந்தங்களுடன் பழகுவதைப் போல!
நமக்குத் தேவையே படாத ஒரு பொருள் நமக்குக் கிடைக்கிறது, அதனால் நமக்கு எந்தப் பயன்பாடும் இல்லை. ஆனாலும் நம் ‘தலையில் கட்டப்படுகிறது’. ஆனாலும் அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளத்தான் செய்கிறோம், வீட்டில் ஒரு மூலையில் போட்டு வைக்கிறோம், ரொம்பவும் வெறுப்பானால், வெளியே குப்பைத் தொட்டியில் தயக்கமின்றி எறியவும் செய்கிறோம்.
ஆனால் ஞானி இத்தகைய உணர்வுக்கு ஆட்படாதவன். ஏனென்றால் அவன் தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய பொருளைத் தேடிப் போக மாட்டான். தானாக வந்தாலும் அதன் பயன்பாட்டில் மகிழவும் மாட்டான். அதேபோல தனக்கு உபயோகமற்றதாகக் கிடைக்கும் பொருள் மீது அவன் வெறுப்பைக் காட்ட மாட்டான். அதனால் தனக்கு நஷ்டம் என்றோ, ‘உதவாப் பொருள்’ என்றோ வருத்தம் கொள்ள மாட்டான். எப்படி இஷ்டமானதை அடைந்தாலும் மகிழ்ச்சி அடையாமல் இருக்கிறானோ அதேபோல இஷ்டமில்லாததை அடைந்து அவன் வெறுப்புறவும் மாட்டான்.
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்யநோத் விஜேத் ப்ராப்யசாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம் மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித (5:20)
‘‘பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலைபெற்றவன், உறுதியான அறிவையுடையவன், மனக் குழப்பமடையாதவன், பிரியமானதைப் பெற்று இன்பமடைவதுமில்லை; பிரியமில்லாததைப்
பெற்றுத் துன்பமடைவதுமில்லை.”நமக்கு விருப்பமானது என்பது எது? எதை அடைவதால் நம் புலன்கள் சந்தோஷ மடைகின்றனவோ, அதுதான். புலன்கள் இன்புறவில்லையா, அது அலட்சியப் பொருளாகி விடுகிறது. எங்கோ தொலைவில் இருப்பதை அடைய விரும்புபவனுக்கு, அது தன்னை நெருங்க, நெருங்க அதன் மீதான கவர்ச்சி குறைந்து விடுகிறது. அது கிடைத்து விட்டாலோ, அப்போதைக்கு திருப்தி என்று எண்ணிக் கொண்டாலும், அதற்குப் பிறகு அதன்மேல் நாட்டம் போய்விடுகிறது. காரணம், நம் மனசு வேறொன்றின் மீது விருப்பம் கொள்வதுதான். இத்தகைய விருப்பத்துக்கு எங்கேதான் முடிவு?
‘‘காமமும், காசு ஆசையும் மனதை விட்டகலும்போது ஆத்மாவிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே அங்குக் குடி கொண்டிருக்கும்,” என்கிறார், ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.உளவியல் விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸிக்மண்ட் ஃப்ராய்ட், மன அலைகள் கனவிலும் பிரதிபலிக்கும் என்று ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். அவருடைய ஆராய்ச்சிக்குட்பட்ட ஒருவன், தான் தினமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கனவைக் காண்பதாகவும், அதனால் தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் தெரிவித்தான்.
‘‘என்ன கனவு அது?” ஸிக்மண்ட் கேட்டார்.
‘‘நான் ஒரு பூங்காவுக்கு வெளியே நிற்கிறேன். உள்ளே இளம் பெண்கள் பலர் என்னைப் பார்த்து அன்பாகச் சிரித்து என்னை உள்ளே வரும்படி அழைக்கிறார்கள்…”‘‘ஓ! அந்தக் கனவு மீண்டும் வராதபடி நான் உனக்கு மனோதத்துவ பயிற்சி அளிக்க வேண்டும், இல்லையா?”‘‘இல்லை, என் பிரச்னையை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அந்தப் பெண்களைப் பார்க்கும் நான் மிகுந்த ஆவலுடன் பூங்காக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே காலடி எடுத்து வைக்கிறேன். அட சட், உடனே கனவு கலைந்து விடுகிறது. நீங்கள் எனக்குச் செய்ய வேண்டியதெல்லாம், அந்தக் கனவைத் தொடரச் செய்வதுதான்.” ஸிக்மண்ட் சற்றே வியந்தார். ‘‘உன் ஏக்கம் புரிகிறது.
ஆனால் மனோதத்துவ வசியப்படி அந்தக் கனவே வராதபடிதான் என்னால் செய்ய முடியும், அதுதான் இதுவரை நான் அளித்த சிகிச்சை அனுபவம். ஆனால் கனவைத் தொடரச் செய்வது சாத்தியமா என்று தெரியவில்லையே,” என்று தயங்கிச் சொன்னார். ஆனாலும், தான் முயற்சிப்பதாகச் சொல்லி, அவனுடைய ஆழ்மனதைப் படிக்க ஆரம்பித்தார். சில நாட்கள் ‘சிகிச்சை’க்குப் பிறகு ஒரு நள்ளிரவில் அவன் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டினான்.
இப்போது ஸிக்மண்ட் பதறிப் போனார். இந்த நடு இரவில் இவனுக்கு என்ன வேண்டுமாம்? ஒருவேளை தூங்கிக் கொண்டே நடக்கும் பழக்கமும், அதிலேயே கனவு காண்பதும் வந்து விட்டதோ?
ஆனால் அவனோ, ‘‘நீங்கள் என் சுவாரஸ்யத்தையே கெடுத்து விட்டீர்கள்,” என்று அவரிடம் சண்டைக்குப் போனான். ‘‘இதுவரை கனவு கலைந்துபோன பிறகு, அடுத்த சம்பவத்துக்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். இப்போது, பூங்காக் கதவைத் திறந்து கொண்டு நான் உள்ளே போவதாகக் கனவு நீண்டு விட்டது. ஆனால் வெளியே இருந்தபடி உள்ளே போனால் என்னவாகும் என்ற எதிர்பார்த்தல், சுவையான கற்பனை எல்லாம் போச்சு,” என்று வருத்தப்பட்டுக் கொண்டு போனான்.
அதுதான் மனித மனம். ஒன்றை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும், கிடைத்து விட்டால், ஏக்கம் அதாவது எதிர்பார்ப்பில் இருந்த ஆவல் நீங்கிவிடுகிறது. அப்புறம் அந்த விஷயத்தில் என்ன அக்கறை இருக்கப் போகிறது? இனி அடுத்த விஷயத்துக்காக ஆசைப்பட வேண்டியதுதான், ஏங்க வேண்டியதுதான்! அதாவது நம்பிக்கைக்கும் நமக்கும் நடுவே நீண்ட இடைவெளி இருக்குமானால், அதில் சுவாரஸ்யம் இருக்கிறது என்று சொல்லலாம்!
ஆகவே ஆர்வத்தை, அதாவது கற்பனையை, அதாவது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதால், ஏமாற்றத்தைச் சந்திக்க மனசில் தெம்பு இருப்பதில்லை. ஆனால் திடப்ரஸ்தனாக இருக்கும் ஒரு ஞானிக்கு ஆவலும் இல்லை, ஏமாற்றமும் இல்லை. ஒரு ஞானி மக்களிடையே ஆன்ம நெறியைப் பரப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் உபதேசம் கேட்க வருபவர்கள், காணிக்கை என்ற பெயரில் அவருக்கு பழங்கள், துணிமணிகள், நகைகள், பணம் என்றெல்லாம் சமர்ப்பிப்பார்கள். ஆனால் அவரோ அவற்றில் எதையும் தொடாமல், அப்படியே, அப்போதே கொடுத்தவருக்கே திரும்பக் கொடுத்து விடுவார். தன் குடிலை விட்டு மக்களை சந்திக்க அவர் எப்படித் தனியராக வருகிறாரோ, அதேபோல தனியராகவே உள்ளே சென்றுவிடுவார். எதையும் உடன் எடுத்து வராததைப் போல எதையும் உடன் கொண்டு செல்லவும் மாட்டார்.
அடியவர்களும் அவருடைய பேச்சால் நிம்மதி கிடைப்பதாக உணர்ந்து அப்போதைக்கு மனம் தெளிந்து சென்று விடுவார்கள். ஆனால் எதையுமே எதிர்மறையாக அணுகும் ஒருவனுக்கு அவருடைய இந்தச் செய்கை வெறுப்பைத் தந்தது. ‘அப்படி என்ன கொஞ்சம்கூட சுயநலமில்லாமல்? ரொம்பவும் பரோபகாரிபோல வேஷம் போடுகிறாரே, நேரே போய் இவரை நாலு வார்த்தை வசை பாடினால்தான் என் மனம் ஆறும்,’ என்று கறுவினான். நினைத்தபடியே அவருடைய குடிலுக்குச் சென்று, அங்கே அமர்ந்திருந்த அன்பர்கள் அத்தனை பேர் முன்னால், ஞானியை ஏக வசனம் பேசினான். வாய்க்கு வந்தபடி தூற்றினான். அவர் எதிர்க்குரல் கொடுப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர் வெகு அமைதியாக இருந்தார். கூடவே அவர் முகம் முன்பைவிட வெகுவாக மலர்ந்தது. அன்பர்களுக்கு, அந்தக் கொடியவன் மேல் கோபம் எழுந்தது. ஆனால் அவரோ சலனமற்று இருந்தார்.
வசையாளன் அவரைப் பார்த்து, ‘‘உங்களுக்குக் கொஞ்சமும் மானம், வெட்கம் இல்லையா? நான் இத்தனை ஏசுகிறேன். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே?” என்று கேட்டான். அவர் மெல்ல வாய் மலர்ந்தார். ‘‘தம்பி, இதோ உட்கார்ந்திருக்கிறார்களே, இவர்களை அனேகமாக தினமும் நீ பார்க்கிறாய். இவர்களும், என்றேனும் ஒருநாள் நான் ஏற்றுக்கொள்வேன் என்று கருதி எனக்காக சில அன்பளிப்புகளை அதாவது காணிக்கைகளைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நான் அப்படியே அவர்களிடம் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதேபோலதான் நீ இப்போது சமர்ப்பிக்கும் ‘காணிக்கை‘யும். இதெல்லாம் எனக்கு வேண்டாம், மீண்டும் நீயே எடுத்துச் செல்,” என்றார்.
அவன் தலைகுனிந்து சென்றான். ஒரு ஞானியின் இயல்பு இது. எதற்காவது ஆசைப்பட்டால்தானே சந்தோஷம், ஏமாற்றம் எல்லாம்? இவ்வாறு புலன்களை வசப்படுத்தி விட்டால் ஆன்மா மேன்மேலும் புனிதமாகும் என்ற உண்மையைத் தெரிந்தவர் ஞானி. அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் அவர் கடைப் பிடிக்கிறார். காதுகள் வசைமொழியைக் கேட்டாலும், அதுவே மூளையிலும் பதிவானாலும், அதை ஒருபோதும் மனசுக்குள் அவர் கொண்டு போக மாட்டார்.
ஏனென்றால் மனசு காத்து கொண்டிருக்கிறது, எந்த உணர்வுக்கு எந்தப் புலனால் பதில் சொல்லலாம் என்று வெகு ஆவலுடன் காத்திருக்கிறது. வசவுக்குக் கோபத்தைத் திருப்பித் தருவது என்றால், நாக்கில் ஏச்சுப் பேச்சையும், கண்களில் கொடூரத்தையும், நாசியில் விடைப்பையும், கை கால்களில் பதற்றத்தையும் மனசு உருவாக்கி விடுகிறது. இந்த அளவுக்கு மனசைக் கட்டவிழ்த்து விடமாட்டான் ஞானி.
வசையை உள்ளுக்குக் கொண்டு போகாததால் தாமரை இலை போலாகிவிடுவான் அவன். வசைத் தண்ணீர் ஒட்டாது, உருண்டோடிப் போய்விடும். வசையாளி வேண்டுமானால் மேலும் மேலும் கோபப்படலாம், அவனுடைய ஆத்திரம் அதிகரிக்கலாம், திட்டுதலை அடுத்து, செய்கையாலும் வன்முறையை அவன் கையாளலாம். செய்து கொள்ளட்டும். தவித்துத் தடுமாறி, திணறி, பிறகு தன் நோக்கம் நிறைவேறாத அவமானத்தில் தலை குனியவும் செய்யலாம். அப்படியே ஆகட்டும், அது அவன் பாடு, அவ்வளவுதானே!
எதிர்ப் பேச்சு பேசுவதிலோ, சண்டை பிடிப்பதிலோ ஆர்வம் காட்டினால்தானே இந்த எதிர்வினைகள் எல்லாம்? ‘நான்’ அழிந்துவிட்டால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையே. அர்ஜுனன் அலைக்கழிக்கப் படுகிறான். எதிர்த் தரப்பின் போர்க் குரல் அவனுடைய தோளைத் தினவெடுக்கச் செய்கின்றன; ஆனால் அவ்வாறு வரும் குரல்களுக்கு உரியவர்கள் தனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்ற உண்மை அந்தத் தோளைக் குறுக்கிவிடுகிறது.
உணர்வுத் தடுமாற்றத்தில் அவன் தர்மத்துக்கே அதர்மம் செய்கிறான். அவனுடைய அறிவு, அலையும் ஜோதியாக இருக்கிறது. முற்றிலும் மூடப்பட்ட அறையில் காற்றின் அலை இல்லாததால் சலனமின்றி நிற்கும் ஜோதிபோல, அறிவு நிலைத்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் விருப்பமானவை ஈர்ப்பதில்லை; விருப்பமற்றவை விலகுவதில்லை. அதாவது சுகமளிக்கும் எதுவும் ‘வா’ என அழைப்பதில்லை; துக்கம் எதுவும், ‘ஓடு’ என்று விரட்டுவதுமில்லை.
கிடைத்தற்கரிய ஒன்று கிடைத்து விட்டால் சுவாரஸ்யம் போய்விடுகிறதே, அந்த ஒன்று பரமாத்மாவாக இருந்தால் அதற்குப் பிறகு சுவாரஸ்யத்தை அனுபவிப்பதில் என்ன அவசியம் இருக்கிறது? இதற்காகத்தானே அடுத்தடுத்து பிறவிகள் எடுத்து அந்த சுவாரஸ்யத்தை அடைய முயற்சிக்கிறோம்!
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
The post ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 91 (பகவத்கீதை உரை) appeared first on Dinakaran.