திருவண்ணாமலையில் மலைக்கு அழைத்து சென்று; வெளிநாட்டு பெண்ணை பலாத்கார முயற்சி; போலி சுற்றுலா கைடு கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சுற்றுலா கைடு என கூறி வெளிநாட்டு பெண்ணை மலைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது அந்த வாலிபரின் கை, கால்கள் உடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலையில் தங்கியுள்ளனர். அதன்படி திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 25 வயதுள்ள இளம்பெண் நேற்று மாலை கிரிவல பாதையில் இருந்து கந்தாஸ்ரமம் செல்லும் மலைப்பாதை வழியாக தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு வாலிபர், தன்னை சுற்றுலா வழிகாட்டி என அறிமுகப்படுத்தி கொண்டாராம். மேலும் ‘மலையில் முக்கியமான சில இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் அமர்ந்து தியானம் செய்தால் இறைவனின் முழு ஆசியை பெறலாம். முக்தியும் கிடைக்கும். அந்த இடங்களுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்’ என கூறியுள்ளார். இதை நம்பிய இளம்பெண், அந்த நபருடன் சென்றுள்ளார். மலையின் மறைவான பகுதிக்கு சென்றுபோது அந்த நபர், திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பித்து கூச்சலிட்டபடி கீழே வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் வருவதை பார்த்த அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து இளம்பெண், பொதுமக்கள் உதவியுடன் திருவண்ணாமலை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். ேமலும் தகவலறிந்த எஸ்பி சுதாகர், காவல்நிலையம் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், தனிப்படை அமைத்து திருவண்ணாமலை பேகோபுர தெருவை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டி எனக்கூறி கொண்டு வெளிநாட்டு பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார். ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல்வேறு மொழிகளை தெரிந்து வைத்துள்ளார். வெளிநாட்டு பெண்ணிடம் பிரெஞ்சு மொழியில் சரளமாக பேசியதால், அதை நம்பி வெங்கடேசனுடன் சென்றது தெரிய வந்தது. போலீசாரின் பிடியில் இருந்து வெங்கடேசன் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் அவரது கை, கால்கள் உடைந்தது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவண்ணாமலையில் மலைக்கு அழைத்து சென்று; வெளிநாட்டு பெண்ணை பலாத்கார முயற்சி; போலி சுற்றுலா கைடு கைது appeared first on Dinakaran.

Related Stories: