வடக்கஞ்சேரி அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளையடித்து பைக்கில் தப்பிய இருவர் போலீசில் சிக்கினர்

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து ரூ.48,380 பணத்தை கொள்ளையடித்து பைக்கில் தப்பிய இருவரை போலீசார் பிடித்தனர். பாலக்காடு திருச்சூர் தேசிய சாலையில் வடக்கஞ்சேரி அருகே பந்தலாம் பாடம் பகுதியில் பெட்ரோல் பங்க் இரவு பகலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பங்க் ஊழியர்கள் பணப்பையுடன் படுத்து தூங்கியுள்ளனர்.

அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள் ஊழியர்கள் வைத்திருந்த பணப்பையை அபகரித்து சென்றுள்ளனர். அதில் ரூ.48,380 ரொக்கப்பணம் இருந்துள்ளது. இதுகுறித்து வடக்கஞ்சேரி போலீசாருக்கு பங்க் நிர்வாகி புகார் அளித்தார். இதன்பேரில் வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து பங்கில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் மர்ம நபர்கள் திருட்டு பைக் பயன்படுத்தியதும், இவர்கள் எர்ணாகுளம் அருகே எளமங்கராவை சேர்ந்த யாதவ் என்பவரின் பைக்கை திருடி வந்து பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்துள்ளனர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் பங்கில் கொள்ளையடித்த 2 பேரும் கோழிக்கோடு பகுதியில் போலீசாரிடம் பிடிபட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணையி;, இவர்கள் இருவரும் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்த ரஷல் (30), ஆஷிக் (32) ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்தும் இருவரையும் கைது செய்து, வடக்கஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வடக்கஞ்சேரி அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளையடித்து பைக்கில் தப்பிய இருவர் போலீசில் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: