படியில் தொங்கியதை கண்டித்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை

திருத்தணி: திருத்தணியில், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணியில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாகச பயணம் செய்து வருவதால் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை அருங்குளம் கிராமத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று திருத்தணிக்கு பயணிகளுடன் புறப்பட்டது. இப்பேருந்தில் ஓட்டுனராக அகத்தீஸ்வரனும், நடத்துனராக பாபு என்பவரும் பணியில் இருந்தனர். பேருந்தில் பெண்கள், ஆண்கள், மாணவர்கள் பயணம் செய்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பக்கவாட்டு கம்பியை பிடித்துகொண்டு பயணம் செய்தனர். இதனால், பேருந்து டிரைவரும், நடத்துனரும் மாணவர்களை கண்டித்து உள்ளே செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். பின்னர் ஒரு சில மாணவர்கள் கற்களால் பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post படியில் தொங்கியதை கண்டித்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை appeared first on Dinakaran.

Related Stories: