வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார். பிரியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் கடந்த 23ம் தேதி வெளியிட்டார். படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சேகர் பேசுகையில், “சிறிய அளவில், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள். 10 நாட்களில் ஒரு படம் முடிப்பது என்பது பெரிய விஷயம். அதை இந்த குழுவினர் செய்திருக்கிறார்கள். இயக்குநரும் தனக்கு எது தேவை, என்ன சொல்லப் போகிறோம், என்பதில் மிக தெளிவாக இருந்து படத்தை முடித்திருக்கிறார். இதுபோன்ற சிறிய படங்களுக்கு தயாரிப்பாளர்களே பத்திரிகையாளர்கள் தான். அவர்கள் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். என்னையும் அவர்கள் தான் வெற்றி பெற வைத்தார்கள். ரூ.15 லட்சத்தில் நான் படம் தயாரித்தேன். அந்த படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம்’’ என்றார்.