தெரு கிரிக்கெட்டில் கிடைத்த ரூ.25 பரிசு: ரவி மோகன் நெகிழ்ச்சி

சென்னை: தென்னிந்திய தெரு கிரிக்கெட் (சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி, கோவா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் திறமைகளை கண்டறிவதை நோக்கமாக கொண்டு இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த வீரர்களை கொண்ட 12 அணிகள், வரும் ஆகஸ்ட்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில், 3 கோடி ரூபாய் பரிசை வெல்வதற்காக விளையாடுகின்றன.

சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தலைவர் ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன், தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான எல்.டிஆனந்த் ஆகியோர் இந்த லீக்கை தொடங்கி வைத்தனர். அப்போது 5 அடி உயர வெற்றிக்கோப்பை, அதிகாரப்பூர்வ லோகோ, விளையாட்டு கீதம் அறிமுகம் செய்யப்பட்டது.

பிறகு சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் பிராண்ட் அம்பாசிடர் ரவி மோகன் பேசுகையில், ‘எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர். தெரு கிரிக்கெட் விளையாடி ஜெயித்து 25 ரூபாய் பரிசு வென்று, நண்பர்களுடன் ஐஸ் சாப்பிட்டு பணத்தை காலி செய்திருக்கிறேன். தெரு கிரிக்கெட்டில் சாதிக்க துடிப்பவர்களுக்கான எஸ்எஸ்பிஎல்லின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.

Related Stories: