சென்னை: தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து ஒளிப்பதிவாளர் குமரன் கூறும்போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. வேம்பு படம் பார்த்த பலரும் பாராட்டினர். ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்றனர். பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுவது பயம்தான்.
தற்போது சிங்கிள் ஷாட்டில் உருவாகியுள்ள ‘ப்ளீஸ் ஓப்பன் தி டோர்’ என்கிற படத்தில் பணியாற்றியுள்ளேன். இது ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. சிங்கிள் ஷாட்டில் எடுக்க வேண்டி இருந்ததால் நிறைய சவால்களும் இருந்தன. இதற்காக பெங்களூரில் இருந்து சில சாதனங்களை வரவழைத்தோம். இந்தப் படம் தற்போது கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட இருக்கிறது.
அது மட்டுமல்ல உலகத்திலேயே சிங்கிள் ஷாட்டில் அதிக நீளம் கொண்ட படம் இந்த ‘ப்ளீஸ் ஓபன் தி டோர்’ படம் தான். அடுத்ததாக காளி வெங்கட் நடிப்பில் ரகுராம் இயக்கும் படம், காளி வெங்கட் மற்றும் தம்பி ராமையா இணைந்து நடிக்கும் படம், ‘பாதாம்கீர்’, ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’, இளையராஜாவின் இசையில் ‘நாதமுனி’ படங்களில் ஒளிப்பதிவு செய்கிறேன்.