என்னை காலி செய்ய கனவிலும் நினைக்காதீங்க: தனுஷ் ஆவேசம்

சென்னை: ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது: என்னை பற்றி எந்தளவிற்கு வேண்டுமானாலும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்களை பரப்புங்க. ஆனால், இங்கு இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டும் கிடையாது. என் மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள்.

ஒரு 4 வதந்தியை பரப்பிவிட்டு என்னை காலி செய்து விடலாம் என்று கொஞ்சம் கூட கனவில் கூட நினைக்காதீர்கள். ஏனென்றால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவுமில்லை. ஒரு செங்கல்லை கூட உங்களால் அசைக்க முடியாது. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் நான் இருந்திருக்கிறேன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்த நிலையாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக நிம்மதியாக இருப்பேன். ஏனென்றால் சந்தோஷத்தை வெளியில் தேட முடியாது. வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் தான் முக்கியம். ‘வட சென்னை 2’ படம் அடுத்த ஆண்டு துவங்கும். குபேரா படத்தில் சேகர் கம்முலா போன்ற திறமையான இயக்குனருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு தனுஷ் பேசினார்.

Related Stories: