திருப்போரூர், ஏப்.26: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தில் தொடரும் உரியிழப்புகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சார் ஆட்சியர் கோமதி ஹெலன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலையொட்டி சரவணப்பொய்கை எனப்படும் திருக்குளம் உள்ளது. இந்த, குளத்தை சுற்றி நான்கு புறமும் மதிற்சுவர்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு திசையிலும் பக்தர்கள் இறங்கி குளிக்கும் வகையில் தலா இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் குளத்தில் குளிக்கும் பக்தர்கள் நீரில் மூழ்கி இறப்பதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 1 வாரத்தில் மட்டும் 3 பேர் இக்குளத்தில் விழுந்து இறந்து விட்டனர்.
கடந்த 17ம்தேதி இரவு 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், 19ம்தேதி காலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், 21ம்தேதி காலை 9 மணிக்கு 45 வயது மதிக்கத் தக்க ஒருவரின் சடலமும் குளத்தில் மிதந்தது. இவர், 3 பேரும் யார், எந்த ஊர் என்ற அடையாளம் தெரியாததால், போலீசார் சடலங்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து, விரிவான செய்தி கடந்த 23ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டார். மீண்டும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும், கோயில் குளத்தின் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்போரூர் கோயில் குளத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் கோமதி ஹெலன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோயிலின் நான்கு திசைகளிலும் இருந்து நுழைவு வாயில்களை பூட்டுமாறும், பக்தர்கள் புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ள வசதியாக கோயிலின் நுழைவு வாயில் அருகில் மட்டும் பாதுகாப்பு வேலியுடன் கூடிய வழியை திறந்து வைக்குமாறும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குளத்திற்குள் செல்லும் ஒரு வழியைத்தவிர மற்ற நுழைவு வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. ஆய்வின்போது, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜாங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தொடரும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தை சார் ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.