இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆயுதப்படைக்கு காவலர் மாற்றம்

 

சோழிங்கநல்லூர்: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (33). இவர், தனது கணவர் கவுரிசங்கர் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார்.  அப்போது, இவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்துக் கொண்டே தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் திவ்யாவை பார்த்து முத்தம் கொடுப்பது போல செய்கை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திவ்யா அருகில் இருந்த ஓட்டேரி காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி, தனது கணவருடன் சேர்ந்து தினேஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது திவ்யாவின் கணவர் கவுரிசங்கர், அந்த வாலிபரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர், ஓட்டேரி குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரியும் தினேஷ் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் இரு தரப்பையும் அழைத்து நேற்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, காவலர் தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் தினேஷை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக திவ்யாவின் கணவர் கவுரிசங்கர் மீது காவலர் தினேஷ் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் மீதும் வழக்கு பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் காவலர் மீது புகார் கொடுத்துள்ள திவ்யா, 74வது வட்ட அதிமுக மகளிர் அணி இணை செயலாளராக உள்ளார். கடந்த மாமன்ற தேர்தலில் இவர் தற்போது மேயராக உள்ள பிரியாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆயுதப்படைக்கு காவலர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: