மயிலை, கொட்டமேடு கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் அவதி

 

திருப்போரூர், மே 5: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் கொட்டமேடு, மயிலை ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட இக்கிராமங்களில் கடந்த 1963ம் ஆண்டு முதன் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டு மின் கம்பங்கள், மின் வயர்கள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளான நிலையில், தற்போது மின் வயர்கள் தனது சக்தியை இழந்து விட்டன. மேலும், இந்த 2 கிராமங்களிலும் நூற்றுக்கணக்கில் இருந்த வீடுகள் தற்போது ஆயிரக்கணக்கில் ஆகிவிட்டன.

அதற்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்படவில்லை. பல்வேறு வீடுகளில் ஏ.சி., மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் என அனைத்து வீட்டு உபயோகப்பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை அதிகரித்து உள்ளது. தற்போது, கோடை காலம் என்பதால் அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் ஏ.சி. மற்றும் மின் விசிறிகள் இயங்கியபடியே உள்ளன.
ஆனால், அதற்கேற்ப உயரழுத்த மின்சாரம் இல்லாததால், குறைந்த மின் அழுத்தத்தில் இந்த பொருட்கள் இயங்குவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு, செயலிழந்து பொதுமக்களுக்கு வீண் செலவை ஏற்படுத்துகின்றன.

இதுகுறித்து, மயிலை மற்றும் கொட்டமேடு கிராம மக்கள் தங்களுக்கு மின் சப்ளை வழங்கும் செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆகவே, செங்கல்பட்டு மாவட்ட மின்வாரிய நிர்வாகம் மயிலை மற்றும் கொட்டமேடு கிராமங்களில் உள்ள மின் கம்பங்களில் உள்ள சேதமடைந்த மின் வயர்களை மாற்றி, தேவைப்படும் இடங்களில் புதிய மின் மாற்றிகளை அமைத்து சரியான மின் சப்ளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயிலை, கொட்டமேடு கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: