சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என கூறி பல லட்சம் மோசடி செய்த பயிற்சி வழக்கறிஞர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம், ஏப்.25: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு நாகாலுத்து தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்பவர். இவரின் மகன் அருண்சூர்யா (28) என்பவர், வழக்கறிஞருக்கு படித்துவிட்டு சென்னையில் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர், காஞ்சிபுரத்தில் தான்‌ வசிக்கும் பகுதியில் தன்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என வெளிக்காட்டி கொண்டு, தனது வீட்டின் வெளிப்புறம் நீதிபதி எனும் பெயர் பலகை வைத்து அதற்கேற்ப உடையுடன் வலம் வந்திருக்கிறார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். பேருந்து நடத்துனரான மோகன் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் குடும்பத்தாருடன் நாகலூத்து தெருவை சேர்ந்த வழக்கறிஞரின் தந்தையான ராஜேந்திரன் உடன் குழுவாக சென்று பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வரும்போது நெருங்கி பழகி உள்ளனர்.

இதன்மூலம் அருண்சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு மோகன், அவரின் மகன் படித்து முடித்து வேலை தேடி வரும் அவருக்கு வேலை கேட்டுள்ளார். அருண்சூர்யா, சென்னையில் நீதிபதியாக இருக்கிறேன் எனவும் மெட்ரோவில் தற்போது மேலாளராக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், நான் சிபாரிசு செய்தால் சுலபமாக கிடைத்துவிடும் என மோகனிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் பணிக்காக ரூ.6 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்று அருண்சூர்யா, மோகனிடம் பணத்தைப் பெற்றுள்ளார். பணத்தை பெற்றவுடன் உடனடியாக வேலை கிடைக்கும் எனக்கூறி சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வேலைக்காக நேர்காணல் இருப்பதாக இருவரையும் வர சொல்லிவிட்டு, அங்கு அருண்சூர்யா வராமல் உங்களுக்கு பணிக்கான ஆணை கிடைத்துவிட்டது என ஏமாற்றி உள்ளார்.

பின் பணிக்கு உயர் அதிகாரிகள் கூடுதல் பணம் கேட்கிறார் என்று ஜிபே மூலம் சிறுக சிறுக ரூ.9 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஒரு வாரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதேபோன்று, விஜயன் என்பவரிடம் ரூ.10 லட்சம், மேலும் சிலரிடம் லட்ச கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் பதற்றமடைந்த மோகன், ராஜேந்திரன் வீட்டிற்கு நேரடியாக சென்று பணத்தை தரும்படி கேட்டு இருந்த நிலையில், 2 நாட்கள் கழித்து வா என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் தலைமறைவாகி உள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மோகன், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பயிற்சி வழக்கறிஞரான அருண்சூர்யா என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி, நீதிபதி என்று பொய் சொல்லி பல லட்சம் ஏமாற்றி இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னையில் தலைமறைவாக இருந்த அருண்சூர்யாவை கைது செய்த காஞ்சிபுரம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என கூறி பல லட்சம் மோசடி செய்த பயிற்சி வழக்கறிஞர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: