பல்லடம், ஏப்.24: தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற கல்குவாரி மற்றும் கிரஷர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு கண்டதை தொடர்ந்து நேற்று முதல் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. தமிழகத்தில் 2000 கல்குவாரிகள் 3000 கிரஷர்கள் இதன் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தினசரி 50 கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன திருப்பூர் மாவட்டத்தில் 200 கல்குவாரிகள், 180 கிரஷர்கள் இயங்கி வருகிறது. தினசரி ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கனிம வள அடிப்படையில், நிலவரி விதிக்கும் புதிய சட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்தியது.
இதன்படி குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் டன் கணக்கு அடிப்படையில், நிலவரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராயல்டி உயர்வு இதற்கு கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற உற்பத்தி நிறுத்த போராடத்தால் தமிழகத்தில் ரூ.250 கோடி மதிப்பிலா கட்டுமான பொருட்கள் உற்பத்தி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் கணிம வளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 24 கோரிக்கைகளில் 19 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதோடு 5 கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் கல் குவாரிகள், கிரசர்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்குவாரி மற்றும் கிரஷர் உற்பத்தி தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்த கணிம வளம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு கண்ட சங்க மாநில தலைவர் சின்னசாமி ஆகியோருக்கு திருப்பூர் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கருங்கல் குவாரிகளுக்கான கட்டணங்களை, தமிழக அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கணக்கீட்டில் கட்டணங்களை, கன மீட்டருக்கு பதில் டன் அடிப்படையில் கணக்கிடும் போது, மூன்று மடங்கு வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
கனிம வளங்கள் அடிப்படையிலான நில வரி விதிப்பால், ஒரு யூனிட் ஜல்லிக்கு 1,380 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. எம். சாண்டுக்கு ஒரு யூனிட்டுக்கு, 700 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியது உள்ளது.இதனால் ஒரு யூனிட், 4 ஆயிரம் ரூபாய் என இருந்த ஜல்லி விலையை, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம். இதே போல, ஒரு யூனிட் எம்.சாண்ட் விலையை, 6 ஆயிரம் ரூபாயாகவும், பி. சாண்ட் விலையை, 7ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம். மேலும் ஒரு யூனிட்க்கு லாரி வாடகையாக ரூ.1250 நிர்ணயம் செய்து உள்ளோம். இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள்,கட்டட கட்டுமான தொழில் செய்வோர் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர். உடன் ஊத்துக்குளி சங்க தலைவர் குமரேசன், காரணம்பேட்டை சங்க நிர்வாகிகள் தேவராஜ்,கருப்புசாமி, 63 வேலம்பாளையம் சங்க நிர்வாகி பிரகாஷ் இருந்தனர்.
5 நாட்களாக நடைபெற்ற கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களின் 24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற வேலை நிறுத்த போராடத்திற்கு அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு கண்டதை தொடர்ந்து நேற்று முதல் திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் வழக்கம் போல் இயங்க தொடங்கியது.
The post வேலை நிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு; கல்குவாரிகள், கிரஷர்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கின appeared first on Dinakaran.