மாமல்லபுரம், ஏப்.22: மாமல்லபுரம் அருகே புதர் மண்டிய பகுதியில் பயங்கர தீயை, சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் அடுத்த பையனூர் சினிமா சிட்டிக்கு அருகே மரங்கள், செடிகள் காய்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சினிமா சிட்டிக்கு அருகே காய்ந்து காணப்பட்ட புதரில் மரங்கள், செடி – கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர், தீ மற்ற மரங்களுக்கு மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
அருகில், இருந்தவர்கள் ஓடி வந்து, இது குறித்து மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு மற்றும் 5 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள மரங்கள் செடி – கொடிகளுக்கு தீ பரவாமல் தவர்க்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், சினிமா சிட்டிக்கு வந்தவர்கள் பீதியடைந்தனர்.
The post புதர் பகுதியில் பயங்கர தீ: 3 மணி நேரம் போராடி அணைத்தனர் appeared first on Dinakaran.