ஒரே வாரத்தில் 3 பேர் பலியானதால் கந்தசுவாமி கோயில் குளத்திற்கு பாதுகாப்பு வேலி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர், ஏப்.23: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை ஒட்டி சரவணப் பொய்கை எனப்படும் திருக்குளம் உள்ளது. நான்கு மாடவீதிகளில் உள்ள வீடுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நிலத்தடி நீராதாரமாக இந்த திருக்குளம் விளங்குகிறது. 18ம் நூற்றாண்டில் அப்போதைய திருப்போரூர் கோயிலின் இரண்டாவது ஆதீனமாக இருந்த சிவசங்கர தேசிக சுவாமிகளால் இந்த திருக்குளம் உருவாக்கப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வற்றாத ஜீவநதியாக இது விளங்குகிறது. இந்நிலையில், கோயிலுக்கு கிருத்திகை போன்ற விசேட தினங்களில் வரும் பக்தர்களும், பொதுமக்களும் இந்த குளத்தின் ஆழம் மற்றும் சேறு குறித்து அறியாமல் குளத்தில் குளிப்பதற்காக இறங்கி நீரில் மூழ்கி இறந்தனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது வடக்கு குளக்கரையின் ஒரு பகுதியிலும், கிழக்கு குளக்கரையிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. இதன் பிறகு குளத்தில் விழுந்து இறப்பவர்களின் விகிதம் கணிசமாக குறைந்தது. கடந்த 2022ம் ஆண்டு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இக்குளத்தை பார்வையிட்டு குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதிற்சுவரின் உயரத்தை அதிகரித்து கட்ட உத்தரவிட்டார். தற்போது நான்கு பக்க மதிற்சுவரும் உயர்த்திக் கட்டப்பட்டு ஆங்காங்கே நுழைவு வாயில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1 வாரத்தில் மட்டும் மூன்று பேர் இக்குளத்தில் விழுந்து இறந்து விட்டனர். கடந்த 17ம் தேதி இரவு 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், 19ம் தேதி சனிக்கிழமை காலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், நேற்று 21ம் தேதி காலை 9 மணிக்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும் குளத்தில் மிதந்தது. மூவரும் யார், எந்த ஊர் என்ற அடையாளம் தெரியாததால் போலீசார் சடலங்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவ மனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தீயணைப்பு துறையினர் வந்து சடலங்களை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தாலும் ஏன் இப்படி குளத்தில் விழுந்து இறக்கின்றனர் என்பது புரியாத நிலை உள்ளது. ஆகவே, கோயில் நிர்வாகம் குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள வழிகளை பூட்டி வைக்க வேண்டும் என்றும், பக்தர்கள் சென்று தண்ணீரை தலையில் தெளிப்பதற்கு மட்டும் ஓரிரு வழிகளை திறந்த வைக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மேற்கு மற்றும் தெற்கு குளக்கரைகளிலும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒரே வாரத்தில் 3 பேர் பலியானதால் கந்தசுவாமி கோயில் குளத்திற்கு பாதுகாப்பு வேலி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: