உத்திரமேரூர், ஏப்.25: உத்திரமேரூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (46). இவர் உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் துளசி (16). அரசு பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் தனது மகள் துளசியுடன் உத்திரமேரூரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வேடபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வேடபாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஜெயபிரகாஷ் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மகள் துளசி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தந்தை, மகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post உத்திரமேரூர் அருகே சோகம் பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் பரிதாப பலி appeared first on Dinakaran.