காஞ்சிபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம், ஏப்.24: காஞ்சிபுரத்தில் நாளை விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (25ம்தேதி) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில், அனைவரும் இ-கேஒய்சி மூலம் பி.எம்.கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் 20வது தவணைத்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தனி தேசிய விவசாய அடையாள எண் (டிஎப்ஆர்) வழங்கும் பொருட்டு தங்கள் பகுதியில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கம்ப்யூட்டர் சிட்டா கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும். இம்மாதம் இறுதிக்குள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே பி.எம்.கிசான் 20வது தவணை வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் கிராம முகாம்களில் கலந்துகொண்டு அல்லது தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி உரிய பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: