மதுராந்தகம் அருகே சோகம் குளவி கொட்டி பெண் பலி

மதுராந்தகம், ஏப்.18: மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தின் குடியிருப்புகள் மத்தியில் உள்ள ஒரு மரத்தில் குளவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டதால் அந்த கூட்டை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கூட்டில் இருந்து பறந்து வந்த செங்குளவிகள் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் வீட்டில் உள்ள பலரை கொட்டியுள்ளது. இதில், அந்த பகுதியை சேர்ந்த லட்சுமி (53), இவரது கணவர் மனோகரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த கீதா, சிறுவர்கள் சுஜித், சஜித் உள்ளிட்ட 9 பேரை குளவிகள் கொட்டியது. இதில், அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்தவர்களை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது கணவர் மனோகரனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்ற அனைவரும் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே சோகம் குளவி கொட்டி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: