காஞ்சி திரைலோக்கியநாதர் கோயில் மகாவீரர் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், ஏப்.18: காஞ்சி திரைலோக்கியநாதர் கோயிலில் எழுந்தருளிய மகாவீரர் வீதியுலாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஜினகாஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில் சமணர் தலமான திரைலோக்கியநாதர் மற்றும் சந்திரபிரபநாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும் சமணர் கோயில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோயில்கள் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சமணர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணியரும் காலை, மாலையில் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடம் மற்றும் திருமலை அரகந்தகிரி திகம்பர ஜெயின் மடத்தின் மடாதிபதிகளின் அருளாசியுடன் மகாவீரர் ஜெயந்தி விழா மற்றும் பகவானின் ஜினகாஞ்சி திருவீதியுலா நேற்று முன்தினம் நடந்தது.

விழாவையொட்டி, மண்டகபடி மற்றும் சிறப்பு ஆராதனையும், தொடர்ந்து கோயிலில் இருந்து பகவானின் ஜின காஞ்சி திருவீதியுலா துவங்கியது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மகாவீரர், திருப்பருத்திகுன்றம் மாட வீதி, கலெக்டர் அலுவலகம் வழியாக மேட்டுத்தெரு ஜினாலயம், காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், காவலான்கேட், வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து மகாவீரரை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் நந்திமித்ரன், விழாக்குழுவினர், சமண சமய சான்றோர், தர்மதேவி கோலாட்ட குழுவினர் மற்றும் ஜின காஞ்சி திருப்பருத்திகுன்றம் பகுதி மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

The post காஞ்சி திரைலோக்கியநாதர் கோயில் மகாவீரர் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: