சித்தத்தைக் கவர்ந்திழுக்கும் சித்திரை மாதம்!

ஆம்! உண்மைதான்! தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் மகத்தான புண்ணிய தினமும் இந்தச் சித்திரை முதல் தேதிதான்!!!தன்னிகரற்ற, தெய்வீக மாதத்திற்குப் பெருமை சேர்க்கும் மேலும் பல காரணங்களும் உள்ளன. மறைந்திருந்து, நம்மை தினமும் காத்தருளும் சித்தர்களின் மனதிற்கு உகந்த மாதம் இந்தச் சித்திரை. அதனால்தான், “சித்திரை மாதம், சித்தர்களின் மாதம்…!” என்ற மூதுரையும் ஏற்பட்டது.நிழல் கிரகங்களான ராகு, கேது உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும் தங்கள், தங்கள் வீரியத்தையும், சக்தியையும் சூரியனிடமிருந்து பெறுகின்றன. இதனை அதர்வண வேதமும் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, சூரியனின் சக்தியை நாம் உணர்ந்து கொள்ளலாம்.சூரியன், ஆதவன், பரிதி, பகலவன், ஞாயிறு எனப் பல பெயர்களினால் பூஜிக்கப்படுகிறார்! மறைந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் ஆண்டு திதி பூஜை, அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணக் காலங்கள், மகாளய பட்சக் காலம் ஆகியவற்றில் செய்யும் திதி பூஜை, எள் கலந்த நீர் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது, சூரியனே!!மறைந்த நம் முன்னோர்கள் எந்த உலகில், எந்த உருவில் மறு பிறவி எடுத்திருக்கிறார்கள் என்பதை அறியும் மாபெரும் சூட்சும சக்தி சூரிய பகவானுக்கு உண்டு.ஆண்டுதோறும், பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதி – பூஜைக்கு அவர்களை சூரிய பகவான்தான், தனது சக்திவாய்ந்த கிரணங்கள் மூலம், பித்ருக்களின் உலகிலிருந்து, சுவர்ணமயமான (தங்கம்) விமானத்தில் அழைத்து வந்து, எழுந்தருளச் செய்வதும், மீண்டும் அவரவர்களின் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதும் சூரியபகவானே. ஆதலால்தான், சூரியனுக்கு “ஆத்ம காரகர்”என்ற பெருமை, ஏற்பட்டுள்ளது. இதனை அதர்வண வேதமும், கருட புராணமும், மேலும் பல சூட்சும கிரந்தங்களும் விவரித்துள்ளன.காஸ்யப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவானின் ஈடிணையற்ற பெருமைகளை யஜுர் வேதம் விவரிக்கிறது. மனித உடலில், இதயம், ரத்தம், ரத்தக் குழாய்கள், நரம்புகள் ஆகியவற்றிற்கு நாயகன், சூரியனே! ஜனனகால ஜாதகங்களில் சூரியனின் ஆட்சி வீடு சிம்மம்! உச்ச வீடு மேஷம்!! நீச்ச வீடு துலாம்!!!நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்விற்கும் சூரியனின் சக்தி மிகவும் அவசியம் என்பதை “சரக் ஸம்ஹிதை”, “சுஸ்சுருதர் ஸம்ஹிதை”, “வீர ஸிம்மவ லோக்கணம்”, “அஷ்டாங்க ஹிருதயம்” ஆகிய மிகப் புராதன ஜோதிட – ஆயுர்வேத நூல்கள் விவரித்துள்ளன.நோய் தீர்க்கும் ஏராளமான பச்சிலைகளுக்கும், சூரியனுக்கும் உள்ள தொடர்பினைத் தமிழகத்தின் சித்த மகா புருஷர்கள், தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்திலும், வெண்குஷ்டம் போன்ற சரும நோய்களுக்கு, தினமும் குறிப்பிட்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் அமர வைக்கும் சிகிச்சை முறை மேலை நாடுகளின் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் கடைப்பிடித்து வருகின்றனர்.சூரிய – சந்திர கிரகணங்களின்போது, கர்ப்பிணிப் பெண்களின் சரீரத்தில் கிரகணச் சாயை படிந்தால், அது பிறக்கவிருக்கும் குழந்தையைக் கடுமையாகப் பாதிப்பதை, இன்றும் கண்டுவருகிறோம். இத்தகைய மகத்தான வீரியமும், சக்தியும் கொண்டு. சதா வான வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் சூரிய பகவானிடமிருந்து, தனிப் பெருமை பெற்ற, “சுக்கில யஜுர்” வேதத்தை மகரிஷி, யாக்ஞவல்கியர் அரும்பாடுபட்டு, கற்றுக் கொண்டதை, புராதன நூல்கள் விவரித்துள்ளன.சூரிய பகவான், குருவின் ராசியான மீனத்தை விட்டு, தனது உச்ச ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் தினத்தன்று, மறைந்த நமது, முன்னோர்களுக்கு, திதி – தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம், பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனை நமக்குப் பெற்றுத் தரும். குடும்பத்தில் வறுமை நீங்கும். உடல் ஆரோக்கியம் நிலவும். உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமையும், அன்பும் ஓங்கும். பிரச்னைகள் நீங்கும். இவற்றை அனுபவத்தில் காணலாம்.சித்திரை மாதத்தின் தனிச் சிறப்பு!”வாழ்க்கையென்றால், ஆயிரம் இருக்கும்! வாசல்தோறும் வேதனை இருக்கும்!!வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” கவியரசு கண்ணதாசன்வாழ்க்கை தத்துவத்தை நினைவு படுத்தத்தான், சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பன்று, மாங்காய், வெல்லம், வேப்பம்பூ, காய்ந்த மிளகாய் போட்டு பச்சடி செய்து சாப்பிடுவதற்குக் காரணம்! இதில், இனிப்பு, காரம், கசப்பு, புளிப்பு அறுசுவையுடன் கூடியதாக இருக்கும் – நம் வாழ்க்கையைப் போல!கிருதயுகம் பிறந்தது இந்த மாதத்தில்தான்!பகீரதனால், புண்ணிய நதியாகிய கங்கையை பூவுலகில் பிரவாகிக்கச் செய்த மாதம்!ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் – முதல், மூன்றாவது மற்றும் எட்டாவது அவதாரமாகிய மத்ஸ்ய – வராக – பலராம அவதாரம் எடுத்த மாதம்!இனி, இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

சித்திரை 1 திங்கட்கிழமை (14-4-2025) – தமிழ் வருடப் பிறப்பு விஷு புண்ணிய காலம். இன்றைய தினத்தில், இஷ்ட தெய்வ வழிபாடு மற்றும், இன்றைய தினத்தில், புதுப் பஞ்சாங்கம் வைத்து, பலவிதக் கனி வகைகளுடன் சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, கற்பூராத்தி காண்பித்து வணங்க, முன்பு எப்போதுமில்லாத அளவு இனி வரும் இவ்வருடம் முழுவதும், சுபீட்சமாகவும், மன மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் இருப்பீர்கள். இதை அனுபவத்தில் காண்பீர்கள். மேலும், இன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த அவதரித்த ஸ்வாதி திரு நட்சத்திரம்

சித்திரை 3 புதன்கிழமை (16-4-2025) – சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானைப் பூஜிப்பதன்மூலம், சங்கடங்கள் விலகும்.
சித்திரை 5 வெள்ளிக்கிழமை (18-4-2025)- வராக ஜெயந்தி. பகவான் வராக அவதாரம் எடுத்த புண்ணிய தினம்.

சித்திரை 7 ஞாயிற்றுக்கிழமை

(20-4-2025) – சித்திரை மாதம், உத்திராட நட்சத்திரத்தில் உதித்தவரும், கொங்கு சமஸ்தானத்தின் இளவரசரும், இத்தேசத்தில் அவதரித்ததினால் அதுவே காரணப் பெயராக அமையப் பெற்றவருமாகிய, சித்த மகா புருஷர் கொங்கணார் அவதரித்த புண்ணிய தினம். வழக்கம்போல், அரசர்களின் அன்றாடக் கடமைகளாகிய, (நகர்வலம், வேட்டையாடுதல், இத்தியாதிகள்) ஊருக்குள் புகுந்து மக்களை பயமுறுத்்தும், கொடிய காட்டு மிருகங்களை வேட்டையாடியும், கொன்று குவித்தும், வெற்றிக் களிப்புடன், ஊதியூர் மலையடிவாரத்தில், ஆற்றுநீரெனப் பெருகும் ஓடையில், தனது ரத்தம் பாய்ந்த வாளைக் கழுவியதுதான் தாமதம், தன்னால் வெட்டுண்டு, உயிர்நீத்த அத்துனை மிருகங்களும், மீண்டும் உயிர் பெற்று, முன்பு இருந்ததைவிட, புதுப் பொலிவுடனும், மிடுக்குடனும் தன்னைக் கடந்து ஒய்யாரமாகச் செல்வதைக் கண்ணுற்ற கொங்கணார், வியப்பின் உச்சிக்கே சென்றார்! அக்கணமே தனது ரத, கஜ, துரக, பதாதிகள் அனைத்தையும் துறந்தார். அம்மலையிலேயே தவம்புரியத் துவங்கினார். அஷ்டமா சித்துக்களை கைவரப் பெற்றார். தனது பிரதாபங்களை யாரிடமாவது காட்டிப் பெருமைகொள்ள எண்ணிய கொங்கணார், திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்து, இரும்பை, தங்கமாக்கும் ரசவாதத்தை ஆழ்வாருக்கு அளித்து, “இது காணி, கோடியைப் போதிக்கும்!” என்றார், சிலேடையாக!! திருமழிசை ஆழ்வாரும் புன்னகைத்தவாறு, தன் உடலிலிருந்து வழியும் வியர்வைத் துளிகளை எடுத்து, “இதுவும் காணி கோடியை ஆக்கும்! சித்த பெருமானே!! ஒருசில சித்து விளையாட்டுகளைக் கைவரப் பெற்றவுடன், நாம்தான் அனைத்தும் என்று எண்ணிடல் கூடாது! இதைக் கண்டு மதிமயங்காமல், மென்மேலும் யோகத்தை – கைக் கொள்ளுங்கள்!” என்று உபதேசித்தருளியவுடனே, ஐம்பொறிகளையும் அடக்கி தவத்தை மேற்கொள்ளத் துவங்கினார். அனைத்துவித சித்துக்களையும் பெற்ற அவர், ஸ்வர்ணத்தைத் தூசி எனத் தூக்கி எறிந்தார். ஒருதினம் மரத்தினடியில், அவர் தன்னை மறந்த நிலையில், நிஷ்டையில் லயித்திருக்க, மரத்தின் மீதிருந்த கொக்கு ஒன்று, இவர் மீது எச்சமிட்டது. கடுங்கோபத்துடன் கண்விழித்து அந்தக் கொக்கைப் பார்த்தவுடன், உடல் கருகி, சாம்பலாகிக் கீழே விழுந்தது, அந்தக் கொக்கு! உடனே தன்னை மெச்சிக்கொண்டு, தான் தவசிரேஷ்டன் தவ வலிமை மிக்கவன் என்ற பெருமிதத்துடன், வழக்கம்போல் யாசகத்திற்குச் சென்றார். திருவள்ளுவப் பெருமானாரின் வீட்டின் வாசலில் நின்று, “அன்னமிடுவாருண்டோ?!” -என்று பல முறை கூறியும், நெடுநேரங்கழிந்த பின்னரே, திருவள்ளுவரின் தர்ம பத்தினி வாசுகி, “எனது கணவருக்குப் பணிவிடை செய்ததினால் தாமதம் ஏற்பட்டது. என் கணவருக்குப் பிறகுதான் மற்றவையெல்லாம்…!” என்று கூறியவுடன், கோபக் கண்களுடன் அந்தப் பெண்ணைப் பார்த்தார், கொங்கணார்! உடனே அப் பெண் புன்முறுவலுடன், “என்னையும், கொக்கென்று நினைந்தனையோ, கொங்கணாரே!!” என்றதுதான் தாமதம், அதிஆச்சர்யத்துடன் பார்த்த கொங்கணார், தன்னுடைய பெயர் இவளுக்கு எப்படித் தெரிந்தது? அதுமட்டுமல்லாது, தான் கானகத்தில் கொக்கு-பறவையை எரித்தது இவளுக்கு எப்படி தெரிந்தது? என வியந்து, அதற்குக் காரணம் இவள் படிதாண்டாப் பத்தினி, கற்புடைய மாந்தரின் பெருமையை உணர்ந்து அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரி விடைபெற்றார். வழியில் தாய் – தந்தையரைத் தெய்வமெனப் போற்றி வணங்கும் தருமவியாதன், கொங்கணாரை சாஷ்டங்கமாக, பூமியில் தலைபதிய வணங்கி, “தவ சிரேஷ்டரே! வாசுகி அம்மையார் நலமா?” -என வினவ, திடுக்கிட்ட சித்த மகாபுருஷர், “நான் திருவள்ளுவர் வாசுகி கிரகத்திலிருந்துதான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என வினவ, “தன்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையரை முழுமுதற் கடவுளாய் வணங்குபவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் மதிநுட்பமும், ஏழாம் அறிவு முதற்கொண்டு, அனைத்தும் கைவரப் பெறல் சாத்தியமே!” என்று பதிலளித்தான். தானம் வேண்டம்; தவம் வேண்டாம். கணவனே கண்கண்ட ெதய்வமெனத் தொழும் பெண்களுக்கும், பெற்ற தாய் – தந்தையரே தெய்வமாகப் போற்றும் பிள்ளைகளுக்கும் ஆறறிவைத் தாண்டிய ஏழாவது அறிவும் கைகூடுவது நிச்சயம் என்பதை உணர்ந்தார், சித்த மகா புருஷர்! இதெல்லாம் முற்றும் உணர்ந்த சித்தருக்குத் தெரியாதா, என்ன?
ராமன், சீதையை இலங்கையிலிருந்து மீட்டுக்கொண்டு வருகையில், அவர்களை பரத்வாஜ் முனிவர் எதிர்கொண்டழைத்து, தன்னுடைய ஆசிரமத்தில் இளைப்பாறிவிட்டுச் செல்லுமாறு பணித்தார்.
ராமர்-சீதை, லட்சுமணனுக்கு வாழை இலை போடப்பட்டது உணவருந்த! பரத்வாஜ் முனிவருக்கு, கேவலம் இந்தக் குரங்குக்கு இலைபோட்டுப் பரிமாறுவதா? என்ற எண்ணத்தில், அறையின் மூலையில் கை கட்டி, வாய் புதைத்து நின்றுகொண்டிருந்த அனுமனுக்கு இலை போடவில்லை. இதைக் கண்ட ராமர், தனக்குப் போடப்பட்டிருந்த வாழை இலை நடுவில், தன் விரல் கொண்டு ஒரு நேர்-கோடு வரைந்தார் (இதற்கு முன்பு வரை வாழை இலையில் நடுக்கோடு கிடையாது!). ஒருபுறத்தில் தான் உட்கார்ந்துகொண்டு, தனக்கு நேர்-மறுபக்கத்தில் அனுமனை அமரச் செய்தார். ராமர் அமர்ந்த பக்கத்தில் சாதம், சாம்பார், ரசம், தயிர் பரிமாறப்பட்டது. அனுமன் உட்கார்ந்த பக்கம் காய்கறி, கிழங்கு, பழவகைகள் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணமாகத்தான், நம் வாழ்விலும் இதுகாறும் இம்முறையே (இலையின் ஒரு பக்கத்தில் மனிதர் உண்ணும் சாதவகையறாக்களும், மறுபுறம், குரங்குகள் உண்ணும் காய்கனி கிழங்குகளையும் பரிமாறும் முறை) கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது! ]ஒருசமயம், காடுகளில் மூலிகைகளைச் சேகரிக்கச் சென்றபோது, அன்றலர்ந்த சூடிய மணமாலைகூட வாடாத நிலையில், மணமகன் பிணமாகக் கிடக்கக் கண்டு, உறவினர் கூடிநின்று அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். புது மணப் பெண்ணின் வாட்டத்தைப் போக்க எண்ணிய கொங்கணர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவராகையால், தன் உடலை மறைவிடத்தில் வைத்துவிட்டு, பிணமாகக் கிடந்த பூதவுடலில் பிரவேசித்தார்! இறந்தாகக் கருதியவன் எழுந்திருப்பதைக் கண்ட உற்றாரும் உறவினரும் மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். சித்தரின் உடலை மறைவிடத்தில் கண்ட சிலர், ஏதோ இறந்த உடல் என எண்ணி எரித்துவிட்டனர்!பிறகு, கொங்கணர், போகரைச் சந்தித்து, தான் ஒரு பெண்ணின் துயரைத் துடைக்க எண்ணியதால், தனக்கு ஏற்பட்ட நிலையைத் தெரிவித்து, ஆறுதலடைந்தார். சித்த மகா புருஷர் போகரும், விலைமதிப்பற்ற பல சித்த ரகசியங்களை அவருக்கு அருளினார். “இதற்குக் கைமாறாக குரு தட்சணையாக என்ன தரவேண்டும்?” என வினவ, போகரும் விளையாட்டாக, “ஒரு அழகான பெண்ணைக் கொண்டு வந்து கொடு…!” எனக் கூறினார்.குருதேவரின் ஆணையை சிரமேற்கொண்ட கொங்கணர், பல இடங்களுக்குச் சென்று அைலந்தார். முடிவில், ஒரு கற்கோயிலுக்குள் சென்று, சகல சாமுத்ரிகா லட்சணங்களுடன்கூடிய, ஒரு பெண் சிலையை உயிர்ப்பித்து, அழைத்துக் கொண்டுவந்து, சித்த மகா புருஷர் போகருக்குக் காணிக்கையாகக் கொடுத்து, வணங்கி நின்றார். சிஷ்யரின் பெருமையை திறமையைக் கண்ணுற்ற குருவானவர் மகிழ்ந்து, ஆசீர்வதித்தார்.
திருமலை திருப்பதியில், திருவேங்கடவனின் பொற்பாதக் கமலங்களில் பதினெண் சித்தர்களுள் இவரும் ஜீவ சமாதியடைந்தார். இன்றளவும், நாம் திருப்பதிக்குச் செல்லும்போது, இன்னமுதனிடம் “வீடு கேட்க வேண்டும்; மாடு, மனை கேட்கவேண்டும்; இன்னபிற வேண்டுமெக் கேட்க வேண்டும்…!” என எண்ணியபடியே செல்லும் நமக்கு,”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலேநெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!”அதே குலசேகர படியைத் தாண்டியதுதான் தாமதம், தோள் கண்டார், தோளே கண்டார்! திருநேத்திரத்தைக் கண்டார் மற்றதை மறப்பர்! திவ்ய ஹஸ்தத்ததைக் கண்டோரும், புன்முறுவலையும் கண்ட கண்களும், மற்றொன்றைக் காணாமல், தன்னிலை மறந்து, நம்வசமிழந்து, எதையெல்லாம் கேட்க வேண்டுமென மனப்பாடம் செய்து வைத்திருந்தோமோ அவற்றையெல்லாம் மறக்கடிக்கச் செய்பவர்கள், இம்மகா சித்தர்களின் கைங்கர்யமே! கோயிலை விட்டு வெளியே வந்தபிறகே நாம் மறந்தவைகள் நம் நினைவிற்கு வரும்!! தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, தன்னையே தந்துவிடும் திருவேங்கடத்து இன்னமுதனின் தயாள குணத்தை நன்கறிந்ததினால், சித்த மகாபுருஷர்கள் நம்முடைய மனத்தை ஆட்கொண்டு, நம்மை, பகவானிடம் ஏதும் கேட்டுவிடாமல் நமக்கு என்ன தேவை? எவ்வளவு தேவை? எப்படி தந்தருள வேண்டும் என்று நம்மை ஈன்றெடுத்தத் தாய்க்குத் தெரியாதா? -என்ற அரிய உண்மையை நமக்குத் தெரிவிக்கும் விதமாக இவ்வாறு இருக்கச் செய்துவிடுகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை!

சித்திரை 08 திங்கட்கிழமை (21-4-2025) – ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்; இன்று சனாதனாஷ்டமி இந்நன்னாளில் காலை நேரத்தில் ஸ்ரீ சிவ பெருமானையும், சூரிய அஸ்தமனத்தில் கால பைரவரையும் தரிசித்து வழிபட்டால் ஏழ்மை விலகும்; சகல நன்மைகளுடன் கூடிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடைவதும், உங்கள் சுற்றத்தாருடன் கூடியிருந்து சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் வாழ்வது திண்ணம். மேலும் இன்று சிரவண விரதம்.
சித்திரை 12 வெள்ளிக்கிழமை (25-4-2025) – பகவான் மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்த புண்ணிய தினம். மேலும், இன்று பிரதோஷம்.
சித்திரை 13 சனிக்கிழமை (26-4-2025) – ராகு – கேது ராசி பெயர்ச்சி.
சித்திரை 14 ஞாயிற்றுக்கிழமை (27-4-2025) – அமாவாசை – பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.
சித்திரை 15 திங்கட்கிழமை (28-4-2025) – வைசாக ஸ்நானம் தொடக்கம். இன்று முதல் 30 நாட்களும், நதி தீரங்களில் ஸ்நானம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது. ஜனன கால ஜாதக தோஷப் பரிகாரங்கள் செய்வது அதீத பலன்களை அளிக்கும்.
சித்திரை 16 செவ்வாய்க்கிழமை (29-4-2025) – கிருத்திகை விரதம்.
சித்திரை 17 புதன்கிழமை (30-4-2025) – அட்சய திருதீயை – இன்று ஏழைகளுக்கு அன்னதானமளிப்பது மகத்தான புண்ணிய பலனைப் பெற்றுத் தரும். இந்நன்னாளில், நீர்மோர், குடை, செருப்பு, கருப்பு எள், விசிறி தானம் செய்தால் அநேக நன்மைகளும் உங்களை வந்தடைவது திண்ணம். தங்கம் வாங்க ஏற்ற தினம். பலராமர் அவதார தினம். மேலும், இன்று சியாமளா ரகசிய மந்திரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல, பராசக்தியின் தசாவதாரங்களில் ஸ்ரீ ராஜமாதங்கி அவதார தினம். குழந்தைகள் படிப்பறிவில் சிறந்து விளங்்கிடவும், நற்குணத்துடன் விளங்கிடவும், ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் புதனின் நிலையை வலுப்படுத்தவும், புதன் தோஷத்தைப் போக்குவதற்காகவும் அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். அம்பாள் கோயிலுக்குச் சென்று, மல்லிகை முல்லை மலர்களால் அர்ச்சிக்க, அனைத்துவித நற்பலன்களும் உங்களை வந்தடையும். மேலும், இன்று பகளாமுகீ ஜெயந்தி. ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் குறைவாகவோ, அதிகமாகவோ பாதிக்கப்பட்டிருந்தால், அம்பாளுக்கு, வெல்லம், சுக்குப் பொடி, ஏலக்காய் கலந்த பானகம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிக்க, ஏவல், பில்லி சூனியம், மற்றவர்களால் உங்கள்மீதுள்ள பொறாமை அனைத்தும் அடியோடு விலகிவிடும்.
சித்திரை 18 வியாழக்கிழமை (1-5-2025) – சதுர்த்தி விரதம். இன்று விநாயகப் பெருமானைப் பூஜிப்பது தடங்கல்களை அகற்றும்.
சித்திரை 19 வெள்ளிக்கிழமை (2-5-2025) – லாவண்ய கௌரி விரதம். மேலும், இன்று பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், அவதார தினங்கள். இன்றைய தினத்தில், ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய “மாத்ரு பஞ்சகம்” வாசித்தாலும், சொல்லக் கேட்டாலும், யாரும் தங்கள் தாய் – தந்தையரை முதியோர ்இல்லத்திற்கு அனுப்ப மாட்டார்கள்; மகத்தான புண்ணய பலன்களைப் பெற்றுத் தரக்கூடிய வாசகங்கள்!
சித்திரை 20 சனிக்கிழமை (3-5-2025) – சஷ்டி விரதம்.
சித்திரை 21 ஞாயிற்றுக்கிழமை (4-5-2025) – பானு சப்தமி. கத்திரி வெயில் ஆரம்பம்.
சித்திரை 23 செவ்வாய்க்கிழமை (6-5-2025) – ஸ்ரீ வாசவி ஜெயந்தி.
சித்திரை 25 வியாழக்கிழமை (8-5-2025) – ஏகாதசி – இன்று உபவாசமிருத்தல், அனைத்து பாபங்களையும் போக்கும்.
சித்திரை 27 சனிக்கிழமை (10-5-2025) – சனிப் பிரதோஷம். மேலும், இன்று பராசக்தி எடுத்த தசாவதாரங்களி்ல், ஆறாவது அவதாரமாகிய சின்ன மஸ்தா வடிவமானது ஜனன கால ஜாதகத்தில் ராகு – கேது தோஷங்களை அடியோடு விலக்க வல்லது. பராசக்தியின் ஆலயத்திற்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில், மாலை நேரத்தில், எள் எண்ணெய் தீபம் ஏற்றிவைக்க நவக்கிரக தோஷங்கள் விலகிடும்.
சித்திரை 28 ஞாயிற்றுக்கிழமை (11-5-2025) – ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. மாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜிப்பதால், பாபங்கள் விலகும். குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்.108 முறைகள் “ஓம் உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்” எனும் அதிசக்தி வாய்ந்த மகா மந்திரத்தை ஜெபிப்பீர்களேயானால், அஷ்ட-ஐஸ்வர்யங்கள் உங்களைத் தேடிவரும்; கண்திருஷ்டிகள் விலகி, உங்கள்மீது தனிப்பட்ட அசூயையினால் உண்டாகிய, “நண்பர்கள்” விலகுவர். இன்றைய தினத்தில், நீர்மோர், பானகம் (வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்தது), பயத்தம் பருப்பை ஊற வைத்து, சிறிது உப்பு, எலுமிச்சம்பழம் பிழிந்து, நைவேத்தியம் செய்து, பக்தகோடிகளுக்குப் பிரசாதமாகக் கொடுத்தால், அநேக நன்மைகளும் உங்களை வந்தடையும். மேலும், இன்று குருப் பெயர்ச்சி. இன்றுதான் குரு பகவான், ரிஷப ராசியை விட்டு, மிதுன ராசிக்கு மாறுகிறார்.
சித்திரை 29 திங்கட்கிழமை (12-5-2025) – சித்திரகுப்தர் பூஜை. சித்ரா பௌர்ணமி. இன்றைய தினத்தில், திருவண்ணாமலையில் கிரி வலம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது. சத்தியநாராயண விரதமிருந்து, பூஜித்தால், சகலவித சம்பத்துக்களையும் தந்தருள்வதாக, ஸ்ரீ மந் நாராயணனே “சத்தியப் பிரமாணம்”செய்து கொடுத்ததினால்தான் அவருக்கு, “சத்திய நாராயணன்” என்ற பெயர்க் காரணமாயிற்று! புத்தர்பிரான் அவதார தினம். ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமண நாள். மேலும், இன்று ஆகாமாவை நன்னாட்கள். இந்நாளில் நதிதீரங்களில் ஸ்நானம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது. ஸ்நானம் செய்து முடித்த பின்னர், ஏழை – எளியோர்களுக்கு, உங்களால் இயன்ற, துணி, செருப்பு, குடை, தயிர் சாதம் போன்றவற்றில் ஏதாவதொன்றை தானமாகக் கொடுத்தாலும், சகல பாபங்களும் விலகி, நல்வாழ்வைப் பெற்றுத் தரும்.இனி, எங்கள் வாசக அன்பர்களின் நலன் கருதி, அவரவர்களின் ராசி பலன்களைப் பார்ப்போம்!

பகவத் கைங்கர்ய, ஜோதிஷ்ய ரத்னாகர,
ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி
A.M.ராஜகோபாலன்

 

The post சித்தத்தைக் கவர்ந்திழுக்கும் சித்திரை மாதம்! appeared first on Dinakaran.

Related Stories: