சஷ்டி
விரதங்களில் மிகச் சிறப்புடைய விரதம் சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற ஆறாவது திதி சஷ்டி திதி. முருகனுக்கு உரியது. அன்றைய தினம் காலை முதல் சாப்பிடாமல் உபவாசம் இருந்து, முருகனை வணங்கி வழிபட்டு, முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்து, விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு தளர்ச்சியில்லாத தன்னம்பிக்கையும், வாழ்வில் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு சஷ்டி விரதம் கைகொடுக்கும்.
19.4.2025 – சனி
திருவல்லிக்கேணி தேர்
“மன்னு தண் பொழிலும், வாவியும், மதிளும், மாடமா ளிகையும், மண் டபமும், தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை” என்று திருவல்லிக்கேணி பார்த் தசாரதிப் பெருமாளை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெறும். அதிகாலை 4:00 மணி முதல் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருள்வார். பக்தர்களால் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெறும். தேர் செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து வழிபடும் வழக்கம் இங்குள்ளது. இப்படி செய்வதால் நமது கஷ்டங்களும் நசுங்கிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
20.4.2025 – ஞாயிறு
செம்பனார்கோயில் சொர்ணபுரீஸ்வரர் விழா தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செம்பொனார் கோயில், சுவர்ணபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலம் ஆகும். சம்பந்தர், அப்பர் பாடியிருக்கின்றனர் வன்னி மற்றும் வில்வத்தை ஸ்தல விருட்சங்களாகக் கொண்ட இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் உள்ள இறைவன் சுவர்ணபுரீசுவரர், இறைவி மருவார்குழலி ஆவர். பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். தாட்சாயணிக்கு அருள் கிடைத்ததும் வீரபத்திரர் தோன்றியதும் இத்தலத்தில் எனப்படுகிறது. இத்தலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்றான் சித்திரை மாதம் ஏழாம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது சிறப்பு இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும் ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவும் கொண்டாடப்படும் சவுர மகா உற்சவம் (சௌரம் என்றால் சூரியன்) என்ற அந்த உற்சவத்தின் தொடக்க நாள் இன்று.
21.4.2025 – திங்கள்
திருவோணம்
ஒவ்வொரு மாதமும் வருகின்ற நட்சத்திரங்களிலேயே திருவோண நட்சத்திரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திருவோண நட்சத்திரம் அன்று விரதமிருந்து விஷ்ணு பகவானை வழி பட்டால், அளவற்ற பலன்களும் செல்வங்களும் ஆயுளும் கிடைக்கும். அனேகமாக எல்லா திருமால் ஆலயங்களிலும் சிரவண நட்சத்திரம் என்று சொல்லப்படும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான ஆராதனைகள் நடைபெறும். பல கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். அன்றைய தினம் வீட்டில் விரதம் இருந்து பெருமாளை வணங்கலாம். அல்லது மாலை பெருமாள் திருக் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி பெருமாளை வணங்குவதன் மூலமாக எல்லையற்ற நற்பலனையும் மகாவிஷ்ணுவின் அருளையும் பெறலாம். சிரவண விரதம் மேற்கொள்பவர்களது வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படாது! வீட்டில் அமைதி ஏற்படும்.
21.4.2025 – திங்கள்
நடராஜர் அபிஷேகம்
ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். பொதுவாக, கோயில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல், 6:00 மணிக்கு, காலசந்தி, பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 7:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை என்று ஆறு கால பூஜை நடைபெறும். தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்து வார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை (மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை) தட்சிணாயணம். அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுது, மாசி மாதம் ஆகும். மதியம் – சித்திரை (திருவோணம்) அன்று. மாலைப்பொழுது – ஆனி ஆகும். இரவு நேரம் – ஆவணி மற்றும் அர்த்தஜாமம் – புரட்டாசி என்பது போன்றதாகும். அதன் பொருட்டே நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்.இந்த ஆண்டு திருவோணம் திங்கள் கிழமை வருகிறது. சந்திரனுக் குரிய திங்கள்கிழமையில் சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் வருகிறது. பல சிவாலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை கண்குளிர தரிசிப்பவர்களுக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்.
21.4.2025 – திங்கள்
நம்பெருமாள் கருட சேவை
ஸ்ரீரங்கத்தில் விழாக்கள் நடைபெறாத நாட்கள் குறைவு. பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதில் சித்திரை மாதத்தில் “விருப்பன் திருநாள்” எனப்படும் சித்திரை திருவிழா 11 நாள்கள் நடைபெறும். அதில் இன்று நம்பெருமாள் கருடசேவை
23.4.2025 – புதன்
திருநாவுக்கரசர் குருபூஜை
தேவார பாடல்களில் திருநாவுக்கரசர் அருளிய பதிகங்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை. கடலூர் மாவட்டம் திருமுனைப்பாடி அருகில் உள்ள திருவாமூர் என்னும் ஊரில் புகழனார் – மாதினி ஆகியோருக்கு மகனானப் பிறந்தவர். இவருக்கு மருள்நீக்கியார் என பெயரிட்டு பெற்றோர்கள் அழைத்தனர். இளமையில் சைவ சமயத்தில் இருந்த இவர், பிறகு சமண சமயத்திற்கு மாறினார். தன்னுடைய சகோதரன் சமண சமயத்திற்கு மாறியதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார் மருள் நீக்கியாரின் சகோதரியான திலகவதியார். அந்த சமயத்தில் மருள் நீக்கியார் சூலை நோயால் பாதிக்கப்பட்டார். சமணர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் அந்நோய் குணமாகவில்லை. தீவிர சிவனடியாரான தனது சகோதரியால் மட்டுமே இந்த நோயை தீர்க்க முடியும் என நினைத்தார். அப்போது திலகவதியார் பிடி திருநீற்றை எடுத்து, மருள் நீக்கியாரின் உடலில் தேய்த்ததும் மருள் நீக்கியாருக்கு இருந்த நோய் தீர்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மருள்நீக்கியார் மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி பாடிய பதிகம்தான் “திருநீற்றுப் பதிகம்’’. தீராத கொடிய நோய்களைகூட தீர்க்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு என அதன் மகிமை பற்றி பாடியதே “திருநீற்று பதிகம்’’ ஆகும். சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், (இன்று) அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை வழிபாடு நடத்தப்படுகிறது.
24.4.2025 – வியாழன்
சர்வ ஏகாதசி
சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு “பாப விமோசன ஏகாதசி” என்று பெயர். நாம் தெரியாமல் செய்துவிடும் சில பாவங்களால் ஏற்படும் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் பிராயச்சித்தமாக பாப விமோசன ஏகாதசி விளங்குகின்றது. ஸ்யவன ரிஷி என்றொரு ரிஷியின் புதல்வன் மேதாவி முனிவர். அவர் இறைவனுடைய திருவருளை வேண்டி மிக கடுமையான தவம் மேற்கொண்டிருந்தார். அவர் தவம் மேற்கொண்ட அழகான காட்டிற்கு வந்த ஒரு தேவலோகப் பெண், இவர் மீது ஆசைப்பட்டாள். மேதாவி முனிவரின் கவனத்தைக் கவர அவர் தவம் செய்யும் இடத்துக்கு பக்கத்திலேயே ஒரு சின்ன குடிசையை அமைத்து கொண்டு வீணையும் கையுமாக சதா பாடிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் மேதாவி முனிவர் தவம் கலைந்து இவளுடைய மதுரமான பாட்டைக் கேட்டு மயங்கினார். தவம் கலைந்தது. காமமும் மோகமும் கண் விழித்தது. அதற்குப் பிறகு 57 ஆண்டுகள் இவர்கள் இருவரும் அங்கேயே வாழ்க்கை நடத்தினர். திடீரென்று மேதாவி முனிவருக்கு விழிப்பு நிலை வந்தது. தன்னுடைய தவம் குலைந்ததற்கும் பிராயச்சித்தமாக அதே ஏகாதசியை அனுஷ்டிக்க முடிவு செய்தார். ஏகாதசி விரதத்தால் முனிவருக்கு பழைய தவ வலிமை கிடைத்தது. ஏகாதசி அன்று காலையில் விரதமிருந்து, பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசியால் அர்ச்சனை செய்து, மறுநாள் காலை, சூரிய உதயத்திற்கு முன்னால் துவாதசி பாரணை செய்து, விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும், சுபிட்சமான நல்வாழ்க்கை கிடைக்கும்.
25.4.2025 – வெள்ளி
மச்சாவதாரம் ஜெயந்தி
சித்திரை மாத சுக்ல பட்சத்தில் திரயோதசி திதியில் ஸ்ரீமன் நாராயணன் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார். மச்ச மூர்த்தி ஆலயங்கள் குறைவு. ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேத நாராயண ஸ்வாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். அற்புதமாக மச்சாவதாரக் கோலத்திலே அருள்புரியும் திருத்தலம். மூலவராக மச்சாவதார மூர்த்தி வேத நாராயணப் பெருமாளாக, ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. மச்ச ஜெயந்தி காலத்தில் வேதம் படித்தவர்கள் மட்டுமல்ல, கல்வி கற்கின்ற எல்லோரும், கல்வியை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், கலைகளை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எல்லோரும் அன்றைக்கு அவசியம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி, அர்ச்சனை செய்வதன் மூலமாக, அவர்கள் தங்கள் தொழிலில் மிகப் பெரிய ஏற்றத்தை பெறலாம். கல்வியில் முன்னேறலாம்.
25.4.2025 – வெள்ளி
பிரதோஷம்
இன்று சித்திரை பிரதோஷ நாள். பல திருக்கோயில்களில் சித்திரை விழாக்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில், பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை உபவாசம் இருந்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களை தரிசித்து, பிராகாரத்தை வலம் வந்து, விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் பிற தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம்.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.