திருப்பாவை எனும் தேனமுதம்

பகுதி 5

இப்போது இந்தப் பாசுரத்தில் ‘‘மலர் இட்டு நாம் முடியோம்’’ என்று சொல்கிறாள். மலர் என்பது கூந்தலில் வைத்துக் கொள்ள கூடியது. இன்னொன்று மலர் என்பது நறுமணத்தை கொடுக்கக் கூடியது. இந்த நறுமணத்தை கொடுக்கக் கூடியதால், இந்த மலர் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில், நறுமணத்தை மனதிடம் கொடுத்தால் மனம் அந்த நறுமணத்தோடேயே இருக்கும். நாம் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும் கூட, நம்மை அறியாது மனம் அந்த மணத்தோடேயே இருக்கும். இது பக்திக்கான இலக்கணம். பக்தியின் மூலமாக மனமானது ஈர்க்கப்பட்டு விட்டால் அது பகவானிடமே இருக்குமே தவிர வேறெங்குமே நகராது. அதனால், மலரிட்டு நாம் முடியோம் என்பது பக்தி யோகம். இதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. பக்தியோகம் மூலமாக நான் அடைந்து விடுவேன் என்று நினைத்தாலும், அங்கு அகங்காரம் வேலை செய்கிறது. ஏனெனில், பக்தி என்பது இலக்கற்றது. அதன் மூலம் அடையப்படுவது என்று ஒன்று கிடையாது.

பக்தி என்றாலே நீ என்ன செய்கிறாயோ செய்து கொள். நான் உன்னை பிடித்துக் கொண்டு விட்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனால், ஞான யோகமும் பக்தி யோகமும் ஆச்சார்ய அனுக்கிரகத்தால் நடந்து கொண்டிருக்கிறது. ஆச்சார்யன் மூலமாக பகவான் அந்தர்யாமியாக இருந்து பகவானே கூட்டி வைத்தாலொழிய, இந்த ஜீவனால் ஞானத்தையும் பக்தியையும் பண்ண முடியாது. எப்பொழுது இந்த ஜீவாத்மா நான் ஞான யோகத்தில் இருக்கிறேன். பக்தி யோகத்தின் இருக்கிறேன். கர்ம யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்கிறதோ அதுவரையில் அந்த ஜீவன் தன்னை மட்டுமே மையப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சார்யனின் அனுக்கிரகத்தில் அந்தந்த பாதையில் செலுத்தப்படுகிறார் என்கிறபோது, அங்கு தன்னுடைய ஜீவத்துவத்தை இழந்து இறையோடு கலக்கிறான். அப்போது சுதந்திரம் என்பது தன்னுடைய அகங்காரத்தின் எல்லையை உணர்ந்து, அகங்காரத்தால் எதுவும் முடியாது என்று ஒப்புக் கொள்வதாகும்.

இப்படி எல்லாவித நுட்பமான அகங்கார சேஷ்டையிலிருந்தும் ஆண்டாள் விடுபட வேண்டுமென உணர்த்துகிறாள்.அடுத்ததாக, ‘‘செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்’’ என்கிறாள்.‘‘செய்யாதன செய்யோம்’’ என்கிறபோது ஒரு கேள்வி வருகிறது. ஞான யோகத்தில் செல்கிறீர்களா… நீங்கள் ஞான யோகத்தில் செல்கிறீர்கள் என்று சொல்லக் கூடாது. பக்தி யோகமா… இல்லை பக்தி யோகத்தில் செல்கிறேன் என்று சொல்லக் கூடாது. என்னை நானே மேலானவன் என்று சொல்லலாமா? கூடாது. என்னை நானே கீழானவன் என்று சொல்லிக் கொள்ளலாமா? அதுவும் கூடாது. அப்போது, எதையுமே இந்த ஜீவாத்மா தன்னால் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொள்ள
வேண்டும்.ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அம்சமாதலால் இந்த பூலோகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்பது புரியும். ஒவ்வொரு ஜீவனும் எந்தெந்த இடத்தில் சென்று சிக்கிக் கொள்வார்கள் என்பது புரியும். இந்த ஜீவனின் அகங்காரம் எப்படியெல்லாம் தான் தப்பிப்பதற்காக சென்று விளையாடும் என்று புரியும்.

எப்படி ஒரு தாயாருக்கு குழந்தையின் அனைத்து அசைவுகளும் புரியுமோ அதுபோல பூமிப் பிராட்டிக்குத்தான் ஜீவன்களின் ஒவ்வொரு அசைவுகளும் தெரியும். ஒரு குழந்தை அழுதால் அது பசிக்கு அழுகிறதா? தூக்கத்திற்காக அழுகின்றதா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்கு அழுகிறதா என்பதெல்லாம் புரியும்.இப்படி எல்லாமுமே தாயாருக்கு தெரிவதால் மிக அழகாக இந்தப் பாட்டில் நம் மனம் செய்யும் தந்திரத்தை அப்படியே முன் வைக்கிறாள்.இப்போது நான் எதுவுமே செய்யவில்லை. எல்லாமே பகவான்தான் செய்ய வைக்கிறார் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அப்போது நான் கெட்டது செய்தாலும் பகவானே செய்ய வைக்கிறார். நான் நல்லது செய்தாலும் பகவான்தான் செய்ய வைக்கிறார். அதனால், நான் என்ன நினைத்தாலும் பகவான் என்னை அப்படி நினைக்க வைக்கிறார். அதனால், நான் செய்வதெல்லாம் பகவானின் இஷ்டப்படி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள்தானே சொல்கிறீர்கள் எல்லாமே பகவான்தான் என்று இவனின் இஷ்டப்படி செய்து விட்டு பகவானே செய்வதாக சொல்லி விடலாம்.

இந்த ஜீவன் இப்படி அஞ்ஞானமாக பேசித் திரிதல் கூடாது என்பதற்காகவே, ஆண்டாள் கண்டிப்பான குரலில், ‘‘செய்யாதன செய்யோம்’’ என்கிறாள். ஒரு குதிரையை விட்டால் அது அதன் இஷ்டத்திற்கு சென்று கொண்டிருக்கும். அதனால், பார்த்தசாரதியாக இருந்து அந்த குதிரையை மிகச் சரியாக லகான் போட்டு இழுப்பான். அதாவது அவனே தர்ம சொரூபி. இங்கு தர்மம் எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி விடுவான்.இத்தனை யோகத்தையும் பகவான் காண்பித்தாலும் கூட, பகவான் ஒரு தர்மத்திற்கு உட்பட்டு நடத்துவான் என்பதே, செய்யாதன செய்யோம் ஆகும்.அப்போது, இங்கு தர்மம் என்பது என்ன?

ரிஷிகள், முனிவர்கள், மகான்களெல்லாம் என்ன சொல்கிறார்களோ அதுதான் இங்கு தர்மம். இந்த தர்மத்தை அவர்களுக்கு யார் சொன்னார்கள் எனில், பகவானின் மூலம் பெற்றவற்றை சொன்னார்கள். எப்படிப் பார்த்தாலும், அவன் நியமனத்தில் வருவதுதான் தர்மமாகும். அதனால், அவன் எதை தர்மம் என்று விதித்திருக்கிறானோ அதையே நாங்கள் செய்வோம். அவன் எதை விலக்குகிறானோ அதை நாங்கள் செய்யமாட்டோம். அதுதான் இங்கு செய்யாதன செய்யோம் என்பதாகும்.அப்போது இந்த சரீரத்தினால் செய்யக் கூடிய விஷயங்களை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று விலக்கப்பட்ட விஷயங்களை செய்யக் கூடாது.அடுத்ததாக ‘‘தீக்குறளை சென்று ஓதோம்’’ என்கிறாள்.மனம், மொழி, மெய் என்பதில் மனதாலும் மெய்யாலும் சொன்னாள். இப்போது குறிப்பிட்டே மொழி என்கிற வாக்கையும் சொல்கிறாள். வாக்கினால் கூட அதர்மத்தை செய்யக் கூடாது. அங்குகூட பகவானின் வாக்கில் என்ன தர்மம் வருகிறதோ அதுதான்.

ஏன் இவ்வளவு ஜாக்கிரதையாக பேசுகிறாளெனில், நாம் நினைப்பது எல்லாமே அனாதி ஜென்மங்களாக வருகின்ற வாசனைகளிலிருந்து வருவது. மீண்டும்… மீண்டும்… இந்த பூலோகத்தில் தள்ளக் கூடிய எண்ணங்களால் ஆனது. ஆனால், பகவானின் தர்மம் என்பது பிறவித் தளையிலிருந்து மீட்கக் கூடியது. எனவேதான், ஆண்டாள் நாங்கள் எதையும் கைக் கொள்ளாமல் பகவானாகிய நீ எதையெல்லாம் தர்மமாக கொண்டிருக்கிறாயோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்கிறாள். இன்னும் சொல்லப் போனால், இந்த மனம் எப்படியெல்லாம் தொழிற்படுமோ அவை எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திக் கொண்டே வருகிறாள்.
(தொடரும்)

The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.

Related Stories: