விஷ்ணு சாஸ்திரி
மற்ற மத்வ மகான்களை போல் அதாவது ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் போன்றவர்களைப் போல், அதிகமாக அறியப்படாதவர் அல்லது அவரை பற்றிய தகவல்கள் மிக குறைவாகவே காணப்படுவதால், பலருக்கும் மாதவ தீர்த்தரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பலரிடம் சென்று பல தரவுகளை திரட்டி, அருள் தரும் ஆன்மிக வாசகர்களுக்காக மாதவ தீர்த்தரை பற்றி இந்த தொகுப்பில் பதிவு செய்வது என்பது, மட்டற்ற மகிழ்ச்சி.
ஸ்ரீ மாதவ தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் (சந்நியாசியாக வருவதற்கு முன் தாய் – தந்தை வைத்த பெயர்) விஷ்ணு சாஸ்திரி. அத்வைத சித்தாந்தத்தில், மிக பெரிய பண்டிதர். மத்வரின் துவைத கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு சீடராக மாறுகிறார். விஷ்ணுசாஸ்திரியின் அறிவு ஞானத்தை கண்ட மத்வர், மாதவ தீர்த்தர் என்னும் பெயரிட்டு, அவருக்கு சந்நியாசத்தை வழங்கினார்.
தூய்மையான ஆன்மா
மத்வரின் நேரடி சீடராக ஸ்ரீ மாதவ தீர்த்தர் இருப்பதால், “சர்வ மூலகிரந்தம்’’, “வேதங்கள்’’, “உபநிஷங்கள்’’ ஆகியவைகளை அவரின் மூலமாகவே கற்கும் வாய்ப்பு கிடைத்த மிக பெரிய மகான், மாதவ தீர்த்தர். கோயிலுக்கு சென்றாலோ, பெருமாளை தரிசித்தாலோ, வீட்டில் பூஜைகளை செய்தாலோ, “சென்ற பிறவியில் பெரிய புண்ணியம் செய்திருக்கிறேன். அதன் பலனாக இன்று அனுபவிக்கிறேன். நான் மிக பெரிய பாக்கியவான்’’ என்றெல்லாம் நாம் பிறரிடம் சொல்லி மகிழ்கிறோம்.
சற்று யோசித்து பாருங்கள்… ஸ்ரீ மத்வாச்சாரியாரிடத்தில், அவர் உருவாக்கிய கிரந்தங்களை, அவர் மூலமாகவே நேரடியாக கற்க வேண்டுமெனில் எத்தகைய புண்ணிய ஜீவாத்மாவாக இருந்திருக்க வேண்டும்! மாதவ தீர்த்தரின் ஆன்மா எத்தகைய தூய்மையாக இருந்திருக்க வேண்டும்! இப்போதுள்ளது போல், அப்போது செல்போன் கிடையாது. ஆகையால், ஆச்சாரியார் சொல்வதை சேவ் (Save) செய்துவைக்க முடியாது. ஏன்… குறைந்தது புத்தகத்தில்கூட அச்சிட்டு சேமித்து வைத்துக்கொள்ள முடியாத காலம்.
மன்னூரில் தவம்
மத்வர் சொல்லும் அனைத்துப் பாடங்களையும் கிரகித்து உள்வாங்கிக்கொண்டு, அதனை மனதில் நிறுத்திவைக்க வேண்டும். இது சாமானிய புருஷர்களால் செய்யமுடியாது. மாறாக, மிக பெரிய தவ வலிமைமிக்க ஒருவரால்தான் முடியும். அத்தகைய தவவலிமைமிக்க ஒருவருள், ஸ்ரீ மாதவ தீர்த்தரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. சதுர்வேதம் என்று சொல்லக் கூடிய ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களுக்கும், விளக்கவுரை கொடுத்திருக்கிறார். மேலும், “பராசர மத்வ விஜயா’’ என்ற பெயரில், மாதவ தீர்த்தர் ஒரு நூலை உருவாக்கி, அதில் மத்வர் கூறிய துவைத சித்தாந்தத்தை மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும் படியாக மறு ஆக்கம் செய்தார்.
மஹாராஷ்டிரா – கர்நாடக எல்லைப் பகுதியில் “மன்னூர்’’ என்னும் சிற்றூர் இருக்கிறது. சென்னையில் எப்படி சென்னகேசவப் பெருமாள் கோயில் இருக்கிறதோ, அதே போல், இங்கும் ஒரு அழகிய சென்னகேசவர் கோயில் இருக்கிறது. ஸ்ரீ ரகுநாததீர்த்தர், ஸ்ரீ ரகுவர்யதீர்த்தர், ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர், ஸ்ரீ வேதேஷ்தீர்த்தர், ஸ்ரீ யாதவர்யதீர்த்தர் ஆகிய மகான்கள் இந்த மன்னூரில் பல ஆண்டு காலம் தவம் செய்திருக்கின்றார்கள். அதே போல், ஸ்ரீ மாதவ தீர்த்தரும் பல ஆண்டுக்காலம் கடும் தவம் செய்த புண்ணிய பூமியாக, மன்னூர் கருதப்படுகிறது.
புண்ணிய நதி
மன்னூர் பகுதியின் அருகிலேயே பீமா நதி (Bhima River) என்னும் அழகிய நதி பாய்ந்து ஓடுகிறது. இந்த நதி, தெலுங்கானா – கர்நாடக எல்லைப் பகுதியை தொட்டு, மஹாராஷ்டிரா – கர்நாடக பகுதியை கடந்து, புனே வரை செல்கிறது. ஆனால், இந்த நதியானது எங்கே தொடக்கி, எங்கே முடிவடைகிறது என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. ஆகையால், இந்த பீமா நதியை புண்ணிய நதியாக ஆன்மிக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். மாதவ தீர்த்தரை பற்றி மிக முக்கியமாக சொல்ல வேண்டுமெனில், ஒவ்வொரு மடமும் அவர்களுக் கென்று ஒரு குறிப்பிட்ட பகவானின் பிரதிமையினை வைத்துக் கொண்டு பூஜித்து வருகிறார்கள். அந்த வகையில், மாதவ தீர்த்தர், ராமபிரானை வடிவமைத்து, அதனை மத்வரிடத்தில் கொடுக்கிறார். அவரும், பல நாட்கள் பூஜை செய்த பின்னர், மாதவ தீர்த்தரிடத்திலேயே கொடுத்துவிடுகிறார்.
ராமரை யார் பூஜிக்கிறார்கள்?
அவர், தனக்கு பின் அடுத்தடுத்து வந்த மகான்களின் இடத்தில் ஒப்படைக்கிறார். இப்படியாக வந்த ராமர் பிரதிமை, ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர் என்பவர் சமஸ்தான பூஜை செய்கிறார். ராமச்சந்திர தீர்த்தருக்கு பின், தற்போது ராமரை எந்த மகான், சமஸ்தான பூஜைகளை மேற்கொண்டு வருகிறார் என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகிறது.
ஆம்! ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தருக்கு, ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர், ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் ஆகிய இரண்டு சீடர்கள். ஆகையால், ஒன்று ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் மூலமாக வழிவழியாக ராமர் பிரதிமை சென்று, இன்று ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்தர் சமஸ்தான பூஜை செய்து வந்திருக்கலாம் எனவும், மற்றொன்று ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் மூலமாக வழிவழியாக சென்று தற்போது ஸ்ரீ சத்யாத்ம தீர்த்தர் சமஸ்தான பூஜை செய்து வந்திருக்கலாம் எனவும், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் மூலமாக வந்த மடத்தின் பெயர்தான் இன்று “ஸ்ரீ ராக வேந்திர மடமாக’’ இருக்கிறது. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் மூலமாக வந்த மடத்தின் பெயர்தான் தற்போது “ஸ்ரீ உத்திராதி மடமாக’’ இருக்கிறது.
புதிய சமஸ்தானம்
ஆக, இரு வேறு கருத்துக்கள் நிலவிவருவதால், தற்போது யார் ராமரை பூஜித்து வருகிறார்கள் என்பது புதிராக இருக்கிறது. மேலும் ஸ்ரீ மாதவ தீர்த்தர், “வீரராகவ பெருமாள்’’ பிரதிமையையும் உருவாக்குகிறார். அதனையும் மத்வர் பூஜை செய்த பின், மாதவ தீர்த்தரிடத்தில் ஒப்படைக்கிறார். அதைப் பெற்றுக்கொண்டு, தம்பிஹள்ளி மடம் (Tambihalli Mutt) என்னும் புதிய சமஸ்தானத்தை (மடம்) உருவாக்குகிறார். இன்றும் தம்பிஹள்ளி மடபீடாதிபதி, வீரராகவ பெருமாள் பிரதிமையை அனுதினமும் பூஜித்து வருகிறார். தற்போதுள்ள தம்பிஹள்ளி மடபீடாதிபதியிடம், மாதவ தீர்த்தரை பற்றி கேட்டவுடன், அவர்கள் கூறியது அப்படியே;
அவனன்றி ஓர் அணுவும் அசையாதுகர்த்தா, கர்மா, கிரியா, அதாவது எந்தவொரு கர்மாக்களை செய்யும் போதும், உதாரணமாக பூஜையை எடுத்துக் கொள்வோம். “இவைகளை நீயே (பகவான்) செய்து வைக்கிறாய்… நான் எதுவும் செய்ய வில்லை. கடவுளே.. நீயே.. செய்துவைக்கிறாய்… ஆண்டவனே.. நீதான் செய்கிறாய்..’’ என்று ஒவ்வொரு காரியங்களை மேற்கொள்ளும் போதும், மாதவ தீர்த்தர் இதனையே உச்சாடனம் செய்து கொண்டே இருப்பாராம்.
“நாஹம் கர்தா ஹரி கர்தா’’
(நாம் ஒன்றும் செய்யவில்லை எல்லாம் ஹரியே)
என்னும் வாசகம் ஸ்ரீ மாதவ தீர்த்தருக்கு பொருந்தும்.
தீர்த்தம் கொடுத்தது யார்?
ஒரு முறை மாதவ தீர்த்தர், சமஸ்தான பூஜை செய்துகொண்டிருந்தார். முழு பூஜையும் முடிந்ததும், திடீரென்று எழுந்து யாரோ ஒருவரிடமிருந்து மிகுந்த பயபக்தியுடன் தீர்த்தத்தை (சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்) பெற்று, அவரிடத்தில் ஆசீர்வாதம் வாங்கினார். இதனை கவனித்த பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மாதவ தீர்த்தர், புன்னகையுடன் என்ன நடந்தது என்பதனைப் பற்றி பேசத் தொடங்கினார். “ஸ்ரீ மத்வாச்சாரியார், இன்றும் நித்ய பூஜைகளை செய்துகொண்டிருக்கிறார். எங்களை (நான்கு சீடர்கள்) சில சமயங் களில் அழைத்து தீர்த்தம் கொடுப்பது வழக்கம். அதுதான் தற்போது நடந்திருக்கிறது என்றார். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், பண்டரிபுரத்தில் ஸ்ரீ பிரசன்ன விட்டலனை வழிபட்டபோது, இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய மாபெரும் மத்வ மகான்னை தினமும் தியானம் செய்திட வேண்டும். போற்ற வேண்டும். இவரின் பிருந்தா
வனத்தை ஒரு முறையாவது சென்று, காணவேண்டும்!
ஸ்ரீ மாதவ தீர்த்தரின் மூல பிருந்தாவனம், மஹாராஷ்டிரா – கர்நாடக எல்லைப் பகுதியான மன்னூர் என்னும் சிற்றூரில் உள்ளது.
“சதித கில சத்தத்வம் பதிதகிலா துர்மதம் போதிதகில சன்மார்க்கம் மாதவாயாயதிம் பஜே’’ (ஸ்ரீ மாதவ தீர்த்தரின் ஸ்லோகம்)
மன்னூர், குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வருகிறது. குல்பர்காவிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ளது, மன்னூர். குல்பர்காவிலிருந்து மன்னூருக்கு பேருந்து வசதி உள்ளது. காலை 6.00 முதல் 2.00 வரை, மாலை 5.00 முதல் 9.00 வரை மடம் திறந்திருக்கும்.
ரா.ரெங்கராஜன்
The post மக்களுக்காக மன்னூரில் மாதவ தீர்த்தர் appeared first on Dinakaran.