அறுபத்துமூவர் திருவீதியுலா

‘நாயன்மார்கள் நமக்கு செய்த நன்மைகள்!’’

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா 10-4-2025

கி.பி.2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலப்பதிகாரம் படைத்தருளிய இளங்கோவடிகளுக்குப் பின்னர் தமிழ் இனத்தை ஒருமைப்படுத்துவதற்குத் துணைபுரியும் காப்பியமே தமிழில் தோன்றவில்லை. மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆகிய காப்பியங்களை எல்லாம் புறச்சமயங்களான சமணத்தையும் பௌத்தத்தையும் சார்ந்தவையாதலால், அவை தமிழ் இன ஒருமைப் பாட்டிற்குப் பயன்படவில்லை.

மாறாக, சமயப் பூசலைத் தோற்றுவித்து ஒருமைப்பாட்டைக் குலைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தமிழினத்தார் வாழ்விலே எந்த ஒரு துறையிலும் ஒருமைப்பாடு நிலவவில்லை. இந்த நிலையில்தான் தமிழ் இனத்தாரை ஒன்று படுத்த ‘சேக்கிழார் பெருமான்’ தோன்றுகிறார். அவர் காலத்திலே தமிழ்நாடு முழுவதிலும் கி.பி.8-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் தமிழரல்லாதார் கொடுங்கோலோச்சிய நிலை இருந்தது.

இந்தக் காலகட்டத்திலிருந்துதான் நாயன்மார்கள் தமிழகத்தில் ஒருவர் பின் ஒருவராக அவதரித்து தமிழையும் சைவ நெறியையும் வளர்த்தார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவனடியார்கள் 63-வரின் பெயர்களையும் சிறப்புக்களையும் சொல்லி, திருத்தொண்டத் தொகை பாடி வைத்துப் போனார். நம்பியாண்டார், நம்பிகள் எனும் பெரியார் திருத்தொண்டர் திருவந்தாதி’ இயற்றினார்.ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குலைத்துக்கொண்டு இருந்தவர்கள் சமணர்கள்.

அப்போது சமணர்களின் செல்வாக்குதான் தமிழ்நாட்டில் அரசகட்டளையாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவிவந்து நாகரிகமும் பண்பாடும் அழியத் தொடங்கிவிட்டன. இதைப்பற்றி அரசனோ மக்களோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மக்களும், மன்னர்களும் தமிழ் நாட்டில் இருந்துவந்தார்கள்.
இந்த இருண்ட காலத்தில்தான், வரிசையாக நாயன்மார்கள் அவதரித்து தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றினார்கள். ஒவ்வொரு நாயன்மாரும் தனிமனிதராக இருந்து மகத்தான பணிகள் புரிந்து தமிழகத்தைக் காப்பாற்றினார்கள். என்பதே வியப்புக்குரியதாகும்.

தமிழ்நாட்டில், கி.பி.400-1000 காலகட்டத்தில் வாழ்ந்த சிவனடியார்களில் 63-பேர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகிறார்கள். நாயன்மார்களின் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் நாயன்மார்கள் வரிசையில் தனியாக இருந்த மாணிக்கவாசகரும் முதன்மையானவர்கள். இந்த நால் வரும் ‘சைவகுரவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத்திருமுறைகள் என அழைக்கப்படும். 12-திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7-ம் திருமுறை சுந்தரராலும் பாடப்பட்டது.

நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர் வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. அதோடு அப்பர், சம்பந்தர், கலியர், போன்ற நாயன்மார்கள் பலர் சமணர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக செயல்பட்ட அவர்களை முற்றிலுமாக ஒழிக்க அயராது பாடுபட்டார்கள்.
இந்த நாயன்மார்களின் வரலாறு சேக்கிழார் பெருமானால் ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது. இதற்கு ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற பெயரும் உண்டு. 63-நாயன்மார்கள் மூவர் பெண்கள்.

கி.பி.3-4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களின் காலத்தால் மூத்தவர். தான் பிறந்த வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும். காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற மன்னன் இறையருள் பெற்று நின்றசீர் நெடுமாறன் என்று அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார். இவர்கள் எல்லாம் அரிய சாதனை புரிந்த பெண்கள். திருநாவலூரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் என்பவர் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன் மார்களில் ஒருவருமாவார்.

இறைத் தொண்டிலேயே, வாழ்வைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நாயன் மார்களைப் பற்றி தொகுத்து வைக்க வேண்டும் என்று தம் பாடல்களால் வடிவம் கொடுத்தவர் சுந்தரர். சுந்தரர் பெருமை அளவிடற்கரியது. சுந்தரர், ஒருநாள் அன்பர் புடை சூழ திருவாரூர் நம்பியாரூரார் திருக்கோயிலை யடைந்து தேவாசிரியன் மண்டபத்தில் சிறந்த திருத்தொண்டர்கள் கூடி இருப்பதனைக் கண்டார். ‘‘இத்திருத்தொண்டர்கட்கு அடியேன் தொண்டனாக ஆகும் நாள் என்றோ.’’ என்று எண்ணி ஏங்கி உள்ளே சென்று இறைவனது திருவடிகளை வணங்கி வாழ்த்தினார். கண்ணுதற்கடவுள் அவருக்குக் காட்சி தந்து, ‘‘சுந்தரனே! நமது அடியவர் பெருமையைக் கேள்-’’ என்று கூறி

அருள்கிறார் இப்படி;
‘‘பெருமையால் தம்மை யொப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமே ஒன்று மில்லார்
அருமையால் நிலையில் நின்றார்
அன்பினால் இன்ப மார்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை நீ யடைவா யென்று…’’

அருள்புரிந்து, ‘‘நமது அடியவர்களை வணங்கி அவர்கள் மீது பதிகம் பாடு’’ என்று பணித்தருளினார். சுந்தரர் பெருமானைப் பணிந்து, ‘‘திருத்தொண்டர்களது பெருமை இத்தன்மையது. இன்ன பண்புடையது; என்று எவ்வாறு இந்த சிறியேன் உணர்ந்து பாடுவேன். இதற்கு உரியவன் யானோ? பாடும் பரிசினை அருள்வீர்?’’ என்று வேண்டினார்.

எல்லையில்லா அருள் வழங்கி உலகெல்லாம் உய்ய வந்த பரம் பொருள், ‘‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்!’’ என்று அடியெடுத்துக் கொடுத்தருளினார். மறையாயிரம் மொழிந்த மலர்வாயால் அடியெடுத்துக் கொடுக்கப்பெற்ற’’ ஆரூரர் தேவாசிரியன் மண்டபம்’’ போய் அங்குக் குழுமியுள்ள அடியார்களைப் பன்முறை பணிந்து, கண்ணீர் சொரிந்து, ‘‘திருத்தொண்டத் தொகை’’ என்னும் திருப்பதிகத்தை இனிது பாடினார் சுந்தரர்.

சோழ மன்னனின் முதல் அமைச்சராக விளங்கிய சேக்கிழார் பெருமான், சுந்தரரின் ‘`திருத்தொண்டத் தொகை’’ நூலை முதல் நூலாகக் கொண்டு, சிவத்தொண்டர்களைப் பற்றிய ஒரு பெரிய நூலை ‘‘பெரிய புராணம்’’ என்று தலைப்பிட்டு உலகிற்கு வழங்கினார். சேக்கிழாரின் முக்கியக் குறிக்கோள் என்னவென்றால் சமணம் ஒழிந்து நாட்டில் ‘மிகுசைவத்துறை’ வளர்ந்து செங்கோலோச்ச வேண்டும் என்பதே.

இந்த 63-சிவனடியார்களை சிவபெருமானாகவே பாவிப்பது, அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள்தான் பணிவது என்று தம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மேற்கொண்டவர்கள், சோதனைக் காலங்களில் பிறருடைய உதவியையும் அவர்கள் நாடியதில்லை. எல்லா வேதனைகளையும், பொருள் இழப்புகளையும் தாமே தாங்கிக் கொண்டார்கள். அதில் ஆனந்தமும் கொண்டார்கள் இப்படி துன்புறுவதும் இறைவன் சித்தமே என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள் நாயன்மார்கள்.

நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. புராதனமான புகழ் பெற்ற சிவாலயங்களில் வரிசையாக 63-நாயன்மார்கள் சிலை வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில ஆலயங்களில் 63-சிவனடியார்களின் செப்பு உலோகச் சிலைகள் உற்சவ மூர்த்திகளாக இருந்து வருகின்றன. நாயன்மார்கள் செய்த அரிய பணிகளைப் போற்றி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டுச் சிறப்பு வழிபாடுகளும். ஆராதனைகளும் செய்வதோடு திருவீதி உலாவும் நடத்தி சிறப்புச் செய்கின்றனர்.

நாயன்மார்கள் நமக்குச் செய்த நன்மைகள் ஏராளம். அதை நன்றி உணர்வோடு நினைவுகூரும் பொருட்டு அறுபத்துமூவர் திருவீதியுலா நடைபெறுகிறது. அந்த வகையில் மயிலை கபாலீசுவரர் கோயிலில் நடைபெறும் விழா புகழ் பெற்றது.63-நாயன்மார்கள் திருவீதி உலா வரும் காட்சியை மயிலை கபாலீசுவரர் கோயிலின் பங்குனித் திருவிழாவின் எட்டாம் நாள் காணலாம். சிவபெருமான் தன் வலப்புறத்தில் கற்பகாம்பாளும், இடது புறத்தில் வள்ளி – தேவசேனா சமேத சிங்காரவேலனும் வீற்றிருக்க பவனி வருவார்.

அவரைத் தொடர்ந்து விநாயகர், சண்டிகேஸ்வரர் வருவார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒவ்வொரு பல்லக்கிலும் நான்கு பேர் வீதம் 63-நாயன்மார்களும் பின் தொடர்ந்து வருவார்கள். பிற் பகல் சுமார் 3 மணி அளவில் கபாலீசுவரர் கோயிலில் இருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் மயிலாப்பூர் வீதிகளில் பவனிவரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா உலகப் புகழ் பெற்றது. ஈசனைப் போற்றும் வகையில் சிவனடியார்களான 63-நாயன்மார்களையும் பல்லக்கில் வீதிஉலாவாக எடுத்துச் செல்லப்படுவதே அறுபத்து மூவர் விழா தொடர்புடைய நாயன்மார்கள் வியத்தகு சிறப்பு உடையவர்கள் என்பதால் அவர்களைப் போற்றி வழிபடுகிறார்கள்!

பெருகி வந்த சமணர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பி, தமிழகத்தையே அழிக்க நினைத்தவர்களை, நாயன்மார்கள் எதிர்த்து நின்று அச்சமயம் பரவாமல் அழித்து, நம்தமிழ் மொழியையும், தமிழ்க் கலை, கலாச்சாரப் பண்பாடுகளையும், தமிழ் மக்களையும், ஏன் தமிழ்நாட்டையும் காப்பாற்றிய பெருமை நாயன்மார்களுக்கே உரியதாகும்.

டி.எம்.ரத்தினவேல்

The post அறுபத்துமூவர் திருவீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: