* ஆள் கடத்தல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு
சென்னை: சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தென் மாவட்ட பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்ற போது, போலீசார் தற்பாதுகாப்புக்காக அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுபடி, இரவு நேரங்களில் 104 காவல் நிலைய எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் வேளச்சேரி விஜயநகர் பகுதியில் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனத்தில் வந்த நபர்களை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடை நடத்தும் தொழிலதிபர் ஒருவரின் மகனை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. உடனே 5 பேரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தென் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வரும் தூத்துக்குடியை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இவர் தான் தொழிலதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்கும் நோக்கில் ஆட்களை அழைத்து வந்ததும், போலீசார் பார்த்ததும் அவர் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆள் கடத்தல் முயற்சி வழக்கு தொடர்பாக வேளச்சேரி போலீசார் ஐகோர்ட் மகாராஜா உள்ளிட்டோர் மீது 191(2), 191(3), 126(2), 296(பி), 3039(4), 311, 351(3) மற்றும் ஆயுதம் தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி கூடுதல் கமிஷனர் மேற்பார்வையில் பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக மகாராஜாவின் பூர்வீக ஊரான தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ரவுடி ஐகோர்ட் மகாராஜா திருநெல்வேலிக்கு தப்பி சென்றது தெரிந்தது. உடனே மற்றொரு தனிப்படை திருநெல்வேலிக்கு சென்று செல்போன் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் அதிகாலை திருநெல்வேலியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வைத்து பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர். பின்னர் ஐகோர்ட் மகாராஜாவை சென்னைக்கு நேற்று அதிகாலை 2.10 மணிக்கு அழைத்து வந்து வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, வழக்கு ஒன்றில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த போது, பெரிய பெரிய தொழிலதிபர்கள் வசிப்பதை அவர் நோட்டமிட்டுள்ளார். அதன் பிறகு தனது சகாக்கள் உதவியுடன் ஆதம்பாக்கம் பகுதியில் நகைக்கடை நடத்தும் தொழிலதிபர் ஒருவரின் மகனை கடத்தி ரூ.2 கோடி அளவுக்கு பணம் பறிக்கும் திட்டத்தில், கடந்த வாரம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
‘‘சென்னையில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் இருப்பதால், ஆள் கடத்தலின் போது போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி, ‘சினிமாவில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த மனித முகக்கவசத்தை தனது முகத்தில் ஒட்டிக் கொண்டு தன்னை வயதான தோற்றத்தில் கடந்த வாரம் தொழிலதிபர் மகனை கடத்த பைக் மூலம் பின் தொடர்ந்து நோட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து ஆள் கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த முகக்கவசம், சுத்தி, கைதுப்பாக்கி, குரங்கு குல்லா, கத்தி மற்றும் குற்றம் செய்ய பயன்படுத்திய பைக் உள்ளிட்டவை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக ரவுடி ஐகோர்ட் மகாராஜா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் மற்றும் கிண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து 2 வாகனத்தில் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை அழைத்து வந்தனர். அப்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் போலீசாரை அங்கும் இங்கும் என ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாகனத்தை அடையாளம் காட்டுவதாக அலைக்கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் கடும் இருள் சூழ்ந்த பகுதியில் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கை ஐகோர்ட் மகாராஜா போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
அப்போது ரவுடி ஐகோர்ட் மகாராஜா பைக்கை எடுக்க முயன்ற போது அதில் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் போலீசாரை நோக்கி சுட்டு விடுவேன் என்று கூறியபடி, ஒரு கையில் துப்பாக்கி மறு கையில் கற்களை வீசியபடி தப்பித்து ஓடினார். அப்போது போலீசார் தங்களது தற்பாதுகாப்புக்காக உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை வலது காலை குறிவைத்து சுட்டார். அப்போது அவருக்கு வலது காலில் குண்டு பாய்ந்து ஓட முடியாமல் விழுந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் குண்டு அடிபட்டு படுகாயமடைந்த ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி ஐகோர்ட் மகாராஜா சாதாரணமாக ஆள் கடத்தல் வழக்கில் தலையிட மாட்டார். இதனால் நகைக்கடை தொழிலதிபரின் மகனை கடத்த பெரிய தொகையை ரவுடி ஐகோர்ட் மகாராஜா வாங்கியதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் மகனை கடத்த யார் பணம் கொடுத்தது, எதற்காக தொழிலதிபர் மகனை கடத்த திட்டமிடப்பட்டது என்பது குறித்து வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் கிண்டி காவல் நிலைய எல்லையில் உள்ளதால், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கிண்டி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் உயர் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதேபோல் தடயவியல் துறை அதிகாரிகளும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* போலீசார் மீது மிளகாய்ப்பொடி தூவி தப்பியவர்
ஐகோர்ட் மகாராஜா தூத்துக்குடி வடபாகம் போலீசின் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரியின் மாஜி மனைவி சூர்யா என்பவருக்காக மதுரையில் பள்ளி சிறுவனை காரில் கடத்திய வழக்கில் சிக்கியவர். விளாத்திகுளத்தில் கடந்த 2019ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம், பேரூரணியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்த ஐகோர்ட் மகாராஜாவை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் பேரூரணி சிறைக்கு கொண்டு செல்வதற்காக விளாத்திகுளத்திலிருந்து தூத்துக்குடிக்கு பஸ்சில் அழைத்து வந்தனர். தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திலிருந்து பேரூரணி சிறைக்கு ஐகோர்ட் மகாராஜாவை அழைத்துச் செல்ல போலீசார் நின்றிருந்த போது, போலீசார் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு, மனைவி மற்றும் நண்பர் உதவியுடன் பைக்கில் தப்பினார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஐகோர்ட் மகாராஜா தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வந்திருந்தார். இந்நிலையில் தான் தற்போது சென்னை போலீசார் அவரை சுட்டுப் பிடித்துள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடியில் தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கு, தூத்துக்குடி வடபாகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையங்களில் 2 கொலை முயற்சி வழக்குகள், மதுரையில் சிறுவன் கடத்தல் வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு ஆள்கடத்தல் உள்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புள்ளது. இவர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு தென் மாவட்ட பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு appeared first on Dinakaran.