சிறுவாணி காட்டுப்பகுதியில் வேட்டையாடிய சிறுத்தை, புலி நகம், பல் விற்ற 3 பேர் வனத்துறையிடம் சிக்கினர்

பாலக்காடு : காஞ்ஞிரப்புழா அடுத்த சிறுவாணி காட்டுப்பகுதியில் வேட்டையாடிய சிறுத்தை, புலி நகங்கள் மற்றும் பற்களை விற்ற 3 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர்.

பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி வனத்துறை வாட்சர் சுந்தரன் (50), பாலக்கயம் வனத்துறை முன்னாள் தற்காலிக வாட்சர் சுரேந்திரன் (47) ஆகியோர் சிறுத்தை, புலி ஆகியவற்றின் நகங்கள், பற்கள் ஆகியவை விற்பனைக்கு தங்களது பைக்கில் கடத்தி சென்றனர்.

அப்போது இவர்களை பாலக்கயத்தில் வைத்து பாலக்காடு வனத்துறை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். இவர்களிடமிருந்து சிறுத்தையின் நகங்கள் 2, புலி நகங்கள் 12, புலி பற்கள் 4 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் வனத்துறை பறக்கும் படை அதிகாரி சனுப், செக்‌ஷன் பாரஸ்ட் அதிகாரி சிரீஷ் ஆகியோர் கைது செய்தனர். தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை முடித்து மன்னார்காடு வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மன்னார்காடு சரக அதிகாரி சுபைர், பாலக்கயம் துணை சரக அதிகாரி மனோஜ் ஆகியோர் தலைமையில் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வன அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

அப்போது, பாலக்கயத்தை அடுத்த பதினாறு பரம்பை சேர்ந்த போஸ் (எ) ஜோஸ் (54), சீனிக்கப்பாறையை சேர்ந்த பிஜூ (47), சிங்கம்பாறையை சேர்ந்த வினோத் (30) ஆகியோர் நேற்று முன்தினம் புலி, சிறுத்தை நகங்கள், பற்கள் விற்பனைக்கு முயற்சித்ததை பார்த்தனர். இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் பிடித்து கைது செய்து, புலி நகங்கள், சிறுத்தை பற்கள், புலி பற்களை பறிமுதல் செய்தனர்.

The post சிறுவாணி காட்டுப்பகுதியில் வேட்டையாடிய சிறுத்தை, புலி நகம், பல் விற்ற 3 பேர் வனத்துறையிடம் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: