விபத்தில் சிக்குபவர்களை நோட்டமிட்டு நூதன வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டல் காவலாளி உள்பட 2 பேர் கைது

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த புதுச்சேரியை சேர்ந்தவர் ஆனந்த் (39). இவர், பாலக்காடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கைரேகை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 18ம் தேதி ஸ்கூட்டரில் மருது ரோடு அருகே செல்லும்போது அவ்வழியாக வந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் மோதியது.

இதில், கீழே விழுந்ததில் ஆனந்த் மயக்கம் அடைந்தார். இதை கவனித்த அருகே உள்ள புதுச்சேரி நீலிக்காட்டை சேர்ந்த ஓட்டல் காவலாளி சுரேஷ் (62) மயக்கமடைந்த ஆனந்தை மீட்டு ஓட்டல் பார்க்கிங் ஏரியாவில் தங்க வைத்தார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு வந்த ஆனந்தை, தனது வீட்டுக்கு சுரேஷ் அழைத்து சென்றார். அப்போது ஸ்கூட்டர் மோதியதில் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து சுரேஷிடம் ஆனந்த் ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். மறுநாள் காலை மீண்டும் ஆனந்த் வீட்டுக்கு வந்த சுரேஷ், காயமடைந்தவருக்கு மீண்டும் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி பணம் தருமாறு வற்புறுத்தி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஆனந்த் இது குறித்து புதுச்சேரி கசபா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ், இதேபோன்று விபத்தில் சிக்குபவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தது தெரியவந்தது.

அவருக்கு உடந்தையாக மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளத்தை சேர்ந்த நஜிமுதீன் (47) என்பவர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ், நஜிமுதீன் இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விபத்தில் சிக்குபவர்களை நோட்டமிட்டு நூதன வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டல் காவலாளி உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: