சென்னையில் கொலை செய்து செஞ்சியில் புதைக்கப்பட்ட திமுக பிரமுகர் சடலம் தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுப்பு: உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்

 

செஞ்சி, மார்ச் 21: சென்னையில் திமுக பிரமுகரை காரில் கடத்தி கொலை செய்து செஞ்சி அருகே சடலம் புதைக்கப்பட்ட இடத்தை குற்றவாளி அடையாளம் காட்டினார். தாசில்தார் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் உடற்கூறு பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, அயனாவரம், வசந்தம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). திமுக பிரமுகரான இவர் முன்னாள் எம்பியின் உதவியாளராகவும் இருந்தார். மேலும் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

கடந்த 16ம் தேதி இவர் தாம்பரத்தில் உள்ள தனது மகள் விஜயலட்சுமி வீட்டிற்கு சென்ற நிலையில், மறுநாள் 17ம் தேதி வரை வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக குமாரின் மருமகன் மோகன் தாம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தாம்பரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அப்போது குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்டனர். அப்போது குமாரை, ஒரு காரில் 3 பேர் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் கார் நம்பரைக் கொண்டு தொடர் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் நில புரோக்கரான செஞ்சி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (40) என்பவரிடம் அதிரடியாக நடத்திய விசாரணையில், திமுக பிரமுகரான குமாருக்கும், ரவிக்கும் இடையே ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனை இருந்ததும், இதன் எதிரொலியாக கடந்த 16ம்தேதி இவரை காரில் கடத்தி சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தனது நண்பர்களான விஜய், செந்தில்குமாருடன் சேர்ந்து கழுத்தில் கயிறு மற்றும் கையால் இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

பின்னர் கொலையை மறைக்கும் நோக்கில், தனது சொந்த ஊரான செஞ்சி எடுத்த தொண்டூர் அருகிலுள்ள மேல் ஒலக்கூர் பசுமலை கன்னிமார் கோவில் செல்லும் பாதை அருகே ஒரு பள்ளத்தில் காரில் சடலத்தை கொண்டு வந்து புதைத்து விட்டு சென்றதும் அம்பலமானது. இதையடுத்து தாம்பரம் போலீசார் ரவியை நேற்று முன்தினம் அழைத்துச் சென்ற நிலையில், செஞ்சி அடுத்த பசுமலை அடிவாரத்தில் குமாரின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது சடலத்தை தோண்டி எடுக்க செஞ்சி தாசில்தார், காவல்துறை மற்றும் முண்டியம்பாக்கம் பரிசோதனை குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை செஞ்சி தாசில்தார் ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர் பிரவீன், மேல் ஒலக்கூர் வருவாய் ஆய்வாளர் கீதா ஆகியோர் முன்னிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மதுவர்தனா அருண்குமார் குழுவினர் குமாரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடலை பெரிய பிளாஸ்டிக் பையால் சுற்றி வெளியே எடுக்கப்பட்ட நிலையில் மருத்துவக் குழுவினர் அங்கேயே உடனடியாக உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். இதற்காக அப்பகுதியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. பின்னர் குமாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டு அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்திற்கு இறுதிச் சடங்கிற்காக கொண்டு சென்றனர்.

The post சென்னையில் கொலை செய்து செஞ்சியில் புதைக்கப்பட்ட திமுக பிரமுகர் சடலம் தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுப்பு: உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: