மது போதை தகராறில் சட்ட கல்லூரி மாணவன் சரமாரி வெட்டி கொலை: ஒருவர் கைது; 6 பேரிடம் விசாரணை

சென்னை, மார்ச் 22: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நார்த்தவாடா பகுதியில் முட்புதரில் நேற்று காலை உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் வாலிபர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருவாலங்காடு காவல் நிலைய எஸ்.ஐ இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, பலத்த வெட்டுக் காயங்களுடன் முட்புதரில் கிடந்த சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் லோகேஷ் (19) என்பதும், டிப்ளமோ பார்மசி படித்து விட்டு திருப்பதியில்  வெங்கடேஸ்வரா சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருவது தெரியவந்தது. இவருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நார்த்தவாடாவைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் அப்போது லோகேஷ் ஜெகனுக்கு கடனாக கொடுத்த ஆயிரம் ரூபாயை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து லோகேஷை, ஜெகன் கத்தியால் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் மற்றும் ஈக்காடு, புலரம்பாக்கம், பகுதிகளை சேர்ந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது போதை தகராறில் சட்ட கல்லூரி மாணவன் சரமாரி வெட்டி கொலை: ஒருவர் கைது; 6 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: