சென்னை, மார்ச் 22: சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா குற்றச்சாட்டு வைத்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜ மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். திமுகவின் மண்டல குழு தலைவர் ஜெகன்மூர்த்திக்கும் எனது வணக்கங்கள் என கூற அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கோஷமிட்டனர். அதற்கு பாஜ மாமன்ற உறுப்பினர், அவங்க எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான் என்றார். உடனே மாமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசுகள், என கூற தமிழ் இல்ல. இடையே தங்லீஸ் வரும். ஆங்கிலத்திலும் பேசுவேன். வருவாய் பற்றாகுறையில் முரண்பாடு உள்ளது.
கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு வாங்கப்பட்ட கேமராக்களில் ஒரு கேமராவின் விலை ரூ.60 ஆயிரம் எனவும், தற்போது அது ரூ.84 ஆயிரம் எனவும் அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. கடன் வட்டி தொகை பெரிதாக உள்ளது. வார்டு அடிப்படையில் வருவாய் தேவைகளை கொண்டு செலவினங்களை மாமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன், என தெரிவித்தார். உடனே மாமன்ற உறுப்பினர்கள் கோஷமிட, பாஜ மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக சென்னை வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளேன். தொடர்ந்து நிதி அமைச்சர் பங்குபெறும் கூட்டத்தில் அதிகாரிகள் அமைச்சர்கள் பங்கு பெற வேண்டும். அந்த நிகழ்வில் பங்கு கொள்ளாமலே தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் கொடுத்து வருகிறார்கள். ஒன்றிய அரசு நிதி கொடுத்திருக்கிறது. ஆனால் நிதி கொடுக்கவில்லை என தவறான தகவலை கொடுத்து வருகிறார்கள்.
ப்ரூட்டலி மெச்சூரிட்டி உள்ள நீங்கள், சத்தம் போட்டு என்னை பேசவிடாமல் செய்கிறீர்கள், எனக் கூறினார். அப்போது மேயர் பிரியா, ப்ரூட்டலி என்ற வார்த்தை அவையில் பேசக்கூடாது. ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தையை பேசிவிட்டு, அதன் பிறகு மன்னிப்பு கேட்கிறேன் என்றால் மன்றத்தின் மாண்பு என்ன ஆகும். அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும், என மேயர் பிரியா தெரிவித்தார். நிர்பயா திட்டத்தின் மூலம் எவ்வளவு பணம் செய்யப்பட்டுள்ளது என பாஜ மன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
பாஜ மன்ற உறுப்பினர் வருவாய் பற்றாக்குறை முரண்பாடு உள்ளதாக தெரிவித்த நிலையில் அது குறித்து நிதிநிலை குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ் விளக்கம் அளித்து பேசியதாவது: 2021ம் ஆண்டு மாநராட்சியின் கடன் ரூ.1200 கோடியாக இருந்தது. 2024ம் ஆண்டு வரை ரூ.912 கோடி கடன் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,026 கோடி கடன் உள்ளது. புதிய திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் தொகை ரூ.720 கோடி என மொத்தமாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,746 கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் பாஜ மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட் நிதி பற்றாக்குறை பட்ஜட்டாக உள்ளது, என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும், என ஒன்றிய அரசு சொல்கிறது. இதனால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி 6% சொத்து வரி உயர்த்தி ஆவணங்களை சமர்பித்து இருந்தாலும் தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய 350 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை, என்றார்.
The post சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்கவில்லை: மேயர் பிரியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.