மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த 150 காளைகள் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில்

வேலூர், மார்ச் 22: காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் நடந்த மாடு விடும் விழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாடு விடும் விழா நடந்தது. முன்னதாக அதிகாலை கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 7 மணிக்கு மாடு விடும் விழா நடந்தது. விழாவில் வண்டறந்தாங்கல், பிரம்மபுரம், மெட்டுக்குளம், பரதராமி, லத்தேரி, கே.வி.குப்பம், பனமடங்கி, தொண்டான்துளசி, அரியூர் குப்பம், ஊசூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இதில் மிகக்குறைந்த நேரத்தில் முதலில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 1ம், 2ம் இடம் பிடித்த காளைக்கு ரூ.77 ஆயிரத்து 77ம், 3ம் பரிசாக ரூ.60 ஆயிரமும் வழங்கப்பட்டது. மொத்தம் 82 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களும், மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

The post மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த 150 காளைகள் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் appeared first on Dinakaran.

Related Stories: