மதுராந்தகம், மார்ச் 22: மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பழுதடைந்த குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட மேம்பாலமாக அமைத்து தர வேண்டும். அதேபோல், மோச்சேரியில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையை நேர் சாலையாக சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி கிராமம் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் பின்புறம் உள்ளது. 1500க்கும் மேற்பட்டோர் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மதுராந்தகத்தில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்து திருவிக நகர் வழியாக மோச்சேரி செல்கிறது. அங்கிருந்து புதூர், அருந்ததி பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக எல்.எண்டத்தூர் சென்று உத்திரமேரூரை சென்றடைகிறது. இச்சாலையில் கல்லூரியும் உள்ளது. இதனால், இச்சாலை எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.
மதுராந்தகம் நகரில் உள்ள மோச்சேரி கிராம மக்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக ஆபத்தான முறையில் கடந்து சென்று வந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த பலர், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மோதி உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே வாகனங்கள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதில், மோச்சேரி செல்லும் கிராமசாலை வளைந்தும் நெளிந்தும் குறுகிய சாலையாக உள்ளது. அந்த சாலை தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலம் மரங்கள் முளைத்து விரிசல் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கனரக வாகனங்கள் பாலப்பகுதியை கடந்து சென்றால் பாலத்தில் லேசான அதிர்வு ஏற்படுகிறது.
இதனால் அந்த சாலையில் செல்லும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மோச்சேரி செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதால் மோச்சேரி கிராமம் மேலும் வளர்ச்சி பெறும், குடியிருப்புகளும் அதிகரிக்கும், மதுராந்தகம் நகரின் எல்லையும் விரிவடையும். எனவே வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய நெடுஞ் சாலையை நேர்வழி சாலையாக மாற்ற வேண்டும். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மோச்சேரியில் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு வளைந்து செல்லும் சாலையை சீரமைக்கவும் கோரிக்கை appeared first on Dinakaran.