மாமல்லபுரம் கலங்கரை விளக்க சாலையில் மந்தகதியில் மழைநீர் வடிகால்வாய் பணி: நகராட்சி நிர்வாகம் அலட்சியம் என புகார்விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மாமல்லபுரம், மார்ச் 22: மாமல்லபுரம் கலங்கரை விளக்க சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், வடிகால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. மேற்கு ராஜவீதியில் இருந்து வெண்புருஷம் செல்லும் வழியில் கலங்கரை விளக்க சாலை உள்ளது. இச்சாலை, தாழ்வாக உள்ளதால், எப்போது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கும். இதனால், அவ்வழியே கடந்து செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வந்தனர்.

மேலும், கலங்கரை விளக்க சாலையில் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை, ஏற்று கடந்த 2 மாதத்துக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியது. ஒரு மாதத்தை, கடந்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாலும், பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளங்கள் விபத்து ஏற்படும் வகையில், திறந்த நிலையில் இருப்பதால் அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மழைநீர் வடிகால்வாயில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து, கொசு பண்ணையாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவ்வழியே கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கொசுக்கள் கடிப்பதால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பணியை மேற்கொள்ள தயாராக இருந்தும், பலமுறை ஆணையரை நேரில் சந்தித்து அனுமதி வழங்க வேண்டும் என்று முறையிட்டும், மழைநீர் கால்வாய் பணி மேற்கொள்ள அனுமதி வழங்காமல் மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக இதில் தலையிட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து தொடங்குவதற்கு அனுமதி வழங்க மாமல்லபுரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் கலங்கரை விளக்க சாலையில் மந்தகதியில் மழைநீர் வடிகால்வாய் பணி: நகராட்சி நிர்வாகம் அலட்சியம் என புகார்விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: