திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம்; வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த, திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியின்போது மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த, மது விருந்துக்கான ஏற்பாடுகளை சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் செய்திருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியும், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவியின் மகனும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான அன்பரசு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியுமான சுனில் (எ) சுதர்சனம் கலந்து கொண்டுள்ளான். அப்போது, தனது நண்பர்களுக்காக கூடுதல் மது கேட்டு சஞ்சயிடம் தகராறு செய்துள்ளார். கூடுதல் மது பாட்டில்கள் தர முடியாது என சஞ்சய் மறுத்ததால் உனக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வரவில்லை, தொடர்ச்சியாக என்னுடன் மோதிக்கொண்டு இருக்கிறாய், உன்னை போட்டுத்தள்ளி விடுவேன் என்று அங்கேயே மிரட்டி உள்ளான். இந்நிலையில், கடந்த 15ம்தேதி ஒத்திவாக்கத்தில் உள்ள சரத்தின் வீட்டிற்கு நள்ளிரவு 1 மணிக்கு சுனில் என்கிற சுதர்சனமும், 8 நபர்களும் ஸ்கார்ப்பியோ காரில் சென்று சஞ்சய் எங்கே என்று கேட்டு மிரட்டி உள்ளனர்.

வீட்டில் இருந்த கண்ணாடி கதவுகள், ஜன்னல்களை உடைத்து உள்ளனர். வீட்டில் இருந்த சரத்தின் தந்தை முருகனின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொன்று விடுவேன் என்று கூறி உள்ளனர். அப்போது, வீட்டில் இருந்தவர்கள் அவசர போலீஸ் 100க்கு தொடர்புகொண்டு கூறி உள்ளனர். உடனே, கூடுவாஞ்சேரி போலீசார் தியாகராஜன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் சைரன் சத்தத்துடன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அந்த, தெரு முட்டு சந்து என்பதால் காரில் வந்த கும்பல் தப்பியோட முயற்சித்துள்ளனர். போலீசார் வந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு, அந்த கும்பல் தப்பி ஓடியது. இது, சம்பந்தமாக காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கும்பல் பெரிய ஒத்திவாக்கம் சிவன் மலைக்கோயிலில் பதுங்கி இருப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் ஆகியோர் உத்தரவின்பேரில், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ.க்கள் விஜயகுமார், ரமேஷ் மற்றும் 10 பேர் ெகாண்ட தனிப்படையினர் ஒத்திவாக்கம் சிவன் மலையை சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுனில் (எ) சுதர்சனம் (21), ரத்தினம் (எ) சேவுக ரத்தினம் (27), பாலாஜி (23) ஆகிய 3 பேரை பிடித்தனர். அப்போது, சுனில் தப்பி ஓட முயற்சித்தபோது கீழே விழுந்ததில் இடது கால் உடைந்தது. இதையடுத்து, போலீசார் மூவரையும் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். கால் உடைந்த சுனில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, 3 பேரிடமும், போலீசார் நடத்திய விசாரணையில், தங்களை திருமண விழாவில் மதிக்காமல் நடந்து கொண்ட சஞ்சய் மற்றும் அவனுக்கு ஆதரவு அளிக்கும் சரத் ஆகியோரை கொல்ல திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினம் (எ) சேவுக ரத்தினம், பாலாஜி ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுனில் (எ) சுதர்சனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம்; வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: