ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்; மாடல் அழகி உள்பட 2 இளம்பெண்கள் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமானத்தில் பாங்காக்கில் இருந்து அழகு சாதனங்களுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திய நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மாடல் அழகி மற்றும் மேக்கப் கலைஞர் ஆகிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். கேரளாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் பெருமளவு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்காக விமான நிலையங்களில் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு பாங்காக்கில் இருந்து வந்த பயணிகளிடம் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் 2 இளம்பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் மாடல் அழகி. இன்னொருவர் மேக்கப் கலைஞர். பாங்காக்கில் இருந்து மேக்கப் பொருட்களை வாங்கி வருவதாக 2 பேரும் கூறினர். ஆனாலும் அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் 2 பேரின் பேக்குகளில் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் மேக்கப் பொருட்களுக்கு இடையே 15 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ. 4.5 கோடியாகும். இதையடுத்து விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி என்பது தெரியவந்தது.

இன்னொருவர் டெல்லியை சேர்ந்த மேக்கப் கலைஞரான சிப்பெத் ஸ்வாந்தி என்றும் தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு 2 பேரும் கொச்சி நெடும்பாசேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பும் இதே போல பாங்காக்கில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்திய மும்பையைச் சேர்ந்த சபா ராஷித் மற்றும் ஷசியா அமர் என்ற 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்; மாடல் அழகி உள்பட 2 இளம்பெண்கள் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: