ஊத்துக்கோட்டை, மார்ச் 20: ஆரணியில், மூதாட்டியை தாக்கி செயின் பறித்த வாலிபரை 8 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இதில் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி பாராட்டியுள்ளார். பெரியபாளையம் அருகே, ஆரணி துத்தார் தெருவில் வசித்து வருபவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி நாகேஸ்வரராவ் (70). இவர் பெரியபாளையம் கால்நடை மருத்துவமனையின் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் வாயை பொத்தி அவரை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து, மூதாட்டி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மஸ்ரீபபி, வெங்கடேசன், குற்றப்பிரிவு எஸ்.ஐ.க்கள் ராவ்பகதூர், செல்வராஜ், முரளிதாஸ் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 60 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவில் செயின் திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்பது தெரிந்தது. பின்னர், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் ஆரணியில் வசிக்கும் திக்விஜய் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் மூதாட்டியிடம் இருந்து திருடிய 5 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், திருட்டு நடந்து 8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த ஆரணி போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.
The post வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை 8 மணி நேரத்தில் திருடன் சுற்றிவளைப்பு: தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.