திருத்தணி, புழல் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்தில் பெண் எஸ்.ஐ , தனியார் பெண் ஊழியர் பரிதாப பலி

திருத்தணி: திருத்தணி அருகே, அலமேலுமங்காபுரம் (ஆர்.எஸ்.மங்காபுரம்) கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்சி (35). இவர் ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு சாம்சன் என்ற கணவரும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர், வழக்கம்போல் நேற்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அருகே, முருகம்பட்டு பகுதியில் எதிர் திசையில் ஆந்திர மாநிலம் நகரியை நோக்கிச் சென்ற லாரி பைக் ஒன்று மெர்சி மீது வேகமாக மோதியது.

இதில், கட்டுப்பாட்டை இழந்து பெண் எஸ்.ஐ மெர்சி கீழே விழுந்தார். விபத்தில், தலையில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சையை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் எஸ்.ஐ மெர்சி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் லாரியை பறிமுதல் செய்து ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த கோவிந்தன் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சென்னை தி.நகர் காஞ்சி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவரின் மனைவி பத்மினி (48). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வந்து, அங்கு உடன் பணியாற்றும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தில்லை அரசன் (49) என்பவருடன் பைக்கில், சோழவாரத்தில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, பழைய சோதனைச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, பைக்கின் மீது மோதியது.

இதில், நிலைதடுமாறி பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பத்மினி கீழே தவறி விழுந்தார். லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தில்லையரசன் படுக்காயமடைந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், பத்மினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, படுகாயமடைந்த தில்லை அரசனை செங்குன்றம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி டிரைவரான திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அழகு (49) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணி, புழல் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்தில் பெண் எஸ்.ஐ , தனியார் பெண் ஊழியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: