தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளது என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக போரில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் எடுத்து வழிபட்டு வரும் வழக்கம் இருந்துள்ளது. நடுகற்கள் வரலாற்று ஆவணமாகவும், மரபு மற்றும் வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை குறித்த பதிவுகளாகவும் உள்ளன. போரில் இறந்து போன வீரனின் மனைவி அவனது இறப்பைத் தாங்கமுடியாமல் தீயில் பாய்ந்து இறந்தால் அவ்வாறு இறந்த பெண்ணின் நினைவாக நடப்படும் கல் சதிகல் எனப்பட்டது. பூந்தமல்லியில் உள்ள இரண்டு நடுகற்களும் சதிகல் வகையைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது.
வலது கையில் கத்தியுடன் ஒரு வீரனும், அவன் அருகில் ஒரு பெண்ணும் நிற்பது போன்று இந்த நடுகற்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிக அண்மைக்காலம் வரை இந்தக் கற்களை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மெட்ரோ பணிகளுக்காக அகற்றப்பட்ட அந்த இரண்டு நடுகற்களும் கடந்த சில மாதங்களாக கேட்பாரற்று கிடக்கின்றன. அந்த நடுகற்கள் சேதமடையவும், திருடு போகவும் வாய்ப்புள்ளதால் அதனை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாகமும், பூந்தமல்லி வருவாய் துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post பூந்தமல்லி மேம்பாலம் அருகே கடந்த சில மாதங்களாக கேட்பாரற்று கிடக்கும் பழங்கால நடுகற்கள்: பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.