அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் இருந்து தரநிர்ணய சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: இந்தியா தரநிர்ணய ஆணையத்தின் இரு குழுக்கள் நடத்திய சோதனையில் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் அருகே அமைந்துள்ள அமேசான் நிறுவன கிடங்கு மற்றும் எல்லாபுரம் ஒன்றியம் கொடுவெளியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் ரூ.36 லட்சம் மதிப்பிலான 3,376 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு குழு இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016ஐ மீறுவதாக கிடைத்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புதுவாயல் அருகே அமேசான் கிடங்கு, எல்லாபுரம் ஒன்றியம் கொடுவெளியில் உள்ள பிளிப்கார்ட் கிடங்கில் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை இணை இயக்குனர்கள் கௌதம் தலைமையில் அமேசான் நிறுவன கிடங்கில் நடத்திய இந்த ஆய்வில் தர நிர்ணயச் சான்று இல்லாத காப்பிடப்பட்ட குடுவைகள், காப்பிடப்பட்ட உணவு கொள்கலன்கள், உலோக குடிநீர் பாட்டில்கள், மின்விசிறிகள், பொம்மைகள் உள்ளிட்டவை தர நிர்ணய சான்றிதழ்கள் இல்லாமல் இருந்தன. அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் ரூ.36 லட்சம் மதிப்பிலான 3,376 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதிகாரிகளான ஜீவானந்தம், ஸ்ரீஜித் மோகன் தலைமையிலான குழு எல்லாபுரம் ஒன்றியம் கொடுவெளியில் பிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் நடத்திய சோதனையில் குழந்தைகளுக்கான டயப்பர், காப்பிடப்பட்ட பாத்திரம், துருவேறா எக்கு வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக தலைவர் ஜி.பவானி கூறுகையில், இந்திய தர நிர்ணய சட்டம் 2016ன் 29பிரிவின்படி தர நிர்ணய சான்றில்லாத பொருட்களை விற்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது பறிமுதல் செய்த பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம். தர நிர்ணயச் சான்று பெறாத பொருட்கள் விற்கப்பட்டால், சென்னை தரமணி, சிஐடி வளாகத்தில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளையில் புகார் அளிக்கலாம் என்றார்.

The post அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் இருந்து தரநிர்ணய சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: